வலையொளி பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறை திடீர் சோதனை!
Share
சென்னையில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டு விட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல வலையொளி சவுக்கு சங்கரை கோவை குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டக் காவல் துறையில் முசிறி டிஎஸ்பி-யாக பணிபுரியும் யாஸ்மின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் அளித்த புகாரில், சவுக்கு சங்கருடன் மற்றொரு வலையொளி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டும் சேர்க்கப்பட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் டில்லியில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கடந்த 10ம் தேதி இரவு கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டக் காவல்துறையினர் கணினிசார் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் (சைபர் கிரைம்) பெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி காவல்துறை அதிகாரிகள் காலை சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி காவல்துறை சோதனை செய்தனர். சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது வலையொளி சேனலில் ஒளிபரப்பிய நிலையில், அது தொடர்பான ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருக்கிறதா என்று தேடுதல் பணி நடைபெறுவதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.