“அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Share
செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மகளிர் நோயியல் நிலையம் மற்றும் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாக திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் செயற்கை கருத்தரிப்பு மையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் கூறியதாவது, “செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
டில்லி, சண்டிகர், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இருந்தாலும் அவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் வசூலிப்பது போல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை பெறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையம், முழுவதும் இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு சில கருத்தரிப்பு மையங்களில் மனிதநேயமற்ற செயலை செய்தனர். ஈரோடு, சேலம் போன்ற 5 இடங்களில் இருந்த தனியார் கருத்தரிப்பு மையத்தில் நடந்த முறைகேடு கண்டுபிக்கப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்டன. இது போன்ற அவலங்கள் இனி நடக்க கூடாது என்பதற்காக தான் அரசு சார்பில் எழும்பூர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.