சிறுமி பாலியல் வன்கொடுமை: எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Share
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உதவி கோரி தனது தாயுடன் வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மார்ச் 14ம் தேதி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தொடர்ந்து, ஜூன் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வருக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. அதற்கு பதில் அளித்த எடியூரப்பா, தான் தற்போது டெல்லியில் இருப்பதாகவும், வரும் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் கோரும் விண்ணப்பத்தை சிஐடி, பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் நேற்று மாலை (ஜூன் 13) பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக, சிஐடி குழுக்கள் அவரைத் தேடத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என்பதால் இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.