LOADING

Type to search

இந்திய அரசியல்

”ஈழத்தை ஏற்படுத்த வேண்டும்” மதுரை ஆதீனம் பாரதப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை

Share

இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் ஈழம் உருவாக வேண்டும் என்று மதுரை ஆதீனம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு முன்னணி சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனம் தென் இந்தியாவில் இருக்கும் சைவ மடங்களில் மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது.

அந்த மடத்தின் 293ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்ற அடுத்த நாள் ஆலய நகரான மதுரையில் செய்தியளர்களை சந்தித்த போதே “ஈழம் அமைக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை வெளியிட்டார்.

“ஈழத்திலிருக்கின்ற தமிழர்களை கொஞ்சநஞ்சம் இருக்கின்ற மக்களை பாதுகாக்க தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும்”

தமிழக மத மற்றும் அரசியல் பரப்பில் பெரும் செல்வாக்கும் ஆளுமையும் செலுத்தும் மதுரை ஆதீனத்தின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரந்தளவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், சிலர் வென்றது குறித்து தான் மிகவும் வருத்தமடைவதாக கூறினார்.

“அன்றைய தினம் இலங்கையிலே லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்களும் வெற்றி பெற்றுவிட்டார்களே என்ற வருத்தம் தான் எனக்கு இருக்கிறது. அதனால் தான் அவர்களால் மத்தியில் ஆள முடியவில்லை”.

அவர் நேரடியாக அப்படி வென்றவர்கள் யார் என்பதை கூறாவிட்டாலும், அது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்றவர்களைத் தான் குறிக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று உள்ளூர் செய்தியாளார்கள் கூறிகிறார்கள்.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார் என்று தெரிவித்த ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், “ வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைக்ளை வைக்கிறேன். அன்று இந்திரா காந்தி கச்சத்தீவை கொடுத்துவிட்டார். இன்றைய தினம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. படகுகள் அழிக்கப்பட்டன, மீன் வலைகள் அறுக்கப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் கச்சத்தீவுதான்.

கச்சத்தீவு நம்மிடம் இருந்தால் அங்கு மீன்வளம் அதிகமாக கிடைக்கும். ஆக கச்சத்தீவை மீட்டு நம்முடைய தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். ஈழத்திலே இருக்கின்ற தமிழர்களை கொஞ்சநஞ்சம் இருக்கும் மக்களை பாதுகாக்க தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் நம்முடைய பாரதப் பிரதமரிடம் வைக்கின்றேன்”.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அனைத்து கட்சியினருக்கு வாக்குகளை அளித்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“இலங்கை தமிழர்களை கொன்றது யார்? இராணுவத்தை அனுப்பியது யார்? அது உங்களுக்குத் தெரியும். அது யார் என்று நான் சொல்லமாட்டேன். தமிழக மக்கள் எடுத்த முடிவில் ஒரு குறை. இலங்கைத் தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தது வருத்தம்”.

அண்மையில் முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் மீண்டும் இந்தியப் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது இந்த இரண்டு கோரிக்கைகளையும் அவரிடம் வைப்பேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், தொண்டை மண்டல ஆதினம், பேரூர் ஆதீனம், பொம்மபுர ஆதீனம் என்று சுமார் 20 சைவ மடங்கள் மற்றும் மடாதிபதிகள் உள்ளனர்.

எனினும், அவற்றில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் மதுரை ஆதீனகர்த்தர்களே முன்னணியில் இருந்துள்ளனர். அவ்வகையில் அவர்களது கருத்து மிகவும் கூர்மையாக கவனிக்கப்படும்.

தமிழையும் சைவத்தையும் வளர்த்துப் பேணிப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டிலுள்ள ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்கு பெரும் பங்குள்ளது.

கடந்த ஆண்டும் (2023) இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்ட போது, தமிழ்நாட்டு மடாதிபதிகள் நந்தியின் உருவம் பொறித்த செங்கோல் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்தனர். அது இப்போது நிரந்தரமாக சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்திற்கு பிரதமர் மோதிக்குமான நெருக்கம் அனைவரும் அறிந்ததே. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை வந்திருந்த மோதி அங்கு வாகன பவனி ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சாலையோரங்களில் கூடியிருந்த மக்களுடன் ஆதீனமும் நின்றிந்தார். இதை கண்ட மோதி தனது வாகனத்தை நிறுத்தச்சொல்லி, ஆதீனத்தை அருகில் அழைத்து அவரை வணங்கினார். இருவருக்குமிடையில் அப்போது சுருக்கமன உரையாடல் இடம்பெற்றது. அப்போதும் ஈழ மக்களின் நலன்களை பிரதமர் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக கூறினார்.

இப்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மோடியை விரைவில் புதுடில்லியில் சந்திப்பார் என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர். பிரதமரை சந்திப்பதற்கான திகதியை அவர் எதிர்நோக்கி காத்திருக்கிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தென்னிந்தியாவிலேயே மிகவும் பழைய சைவ மடமாக மதுரை ஆதீனம் கருதப்படுகிறது. அதற்கு 1300 வருட வரலாறு உள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆலயங்களின் பராமரிப்பு, கல்வி கலாசாலைகளை நிறுவி அறிவுப்புரட்சியை உருவாக்கியது, பழந்தமிழ் காப்பியங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை சேகரித்து அவற்றை நூல்வடிவில் புதுபித்தது, திருமுறை ஓதலை பரவச் செய்தது ஆகியவற்றில் தமிழ்நாட்டின் சைவ மடங்களின் பங்கு அளப்பரியது.