LOADING

Type to search

இந்திய அரசியல்

அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!

Share

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளார்.

    அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புலேர்டலில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் தனது எக்ஸ் பதிவில், “அசாம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள அதீத பேரழிவு மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவினாஷ் எனும் 8 வயது குழந்தை உட்பட பல குழந்தைகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அசாம் வெள்ளப் பெருக்கில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 53,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 24,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர். “வெள்ளம் இல்லாத அசாம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தையே இந்த எண்கள் பிரதிபலிக்கின்றன. அசாமுக்கு விரிவான மற்றும் இரக்கமுள்ள ஒரு பார்வை தேவை. சரியான நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு மற்றும் நீண்ட காலத்துக்கு வெள்ளத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வடகிழக்கு நீர் மேலாண்மை ஆணையம். அசாம் மக்களுடன் நான் நிற்கிறேன். நாடாளுமன்றத்தில் நான் அவர்களின் சிப்பாயாக இருப்பேன். மாநிலத்துக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் விரைவாக வழங்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.