300 நாட்கள் கடந்தும் தீர்வில்லை: கிழக்கு பால் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது
Share
சன்முகநாதன் பார்த்திபன்
கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் மக்களை அப்புறப்படுத்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு 10 மாதங்களாகியும் அதிகாரிகள் தீர்வு வழங்காததால் அப்பகுதி பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் பாற்பண்ணையாளர்களின் போராட்டம் ஜுலை 09 ஆம் திகதி 300 நாட்களை பூர்த்தி செய்த நிலையில், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மயிலத்தமடு மாதவனை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிமலன், தமது வாழ்வாதாரம் தற்போது முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் போராட்டம் இல்லாமல் எந்த வெற்றியையும் அடைய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“300 நாட்களுக்குப் பின்னரும், எங்கள் மேய்ச்சல் நிலங்கள் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்.
தொடர்ந்து போராடினால்தான் பலன் கிடைக்கும். சிங்களக் குடியேற்றங்கள் வருவதற்கு முன் ஒரு நாளைக்கு 6000 லீட்டர் பால் கொடுத்தோம். இப்போது 500 லீட்டர் பால்தான் கிடைக்கிறது.
மாடுகள் இறக்கின்றன. வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 லீட்டர் பால் கறந்தவர் இன்று ஐந்து லீட்டர் பால்தான் கறக்கின்றார்.”
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக, உள்ளூர் மத தலைவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் 300ஆவது நாளில் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குழுக் கூட்டத்தில் தீர்வை வழங்க முடியாது என மாவட்டச் செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ்ப் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தமது மாடுகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்திய சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் காணி சிங்கள விவசாயிகளால் பயிர்ச்செய்கைக்காக முதலில் கையகப்படுத்தப்பட்டதாகவும், தாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும் மேலும் பல ஏக்கர் காணிகளை அவர்கள் கையகப்படுத்தியுள்ளதாகவும் பாற்பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அமைந்துள்ள புல் நிலம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தினால், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் வகையில், குடியேற்றப்பட்ட 150 சிங்களக் குடும்பங்களுக்கும் பிரதேச பால் பண்ணையாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்ட 6,000 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தில், சிங்கள விவசாயிகள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், இது புல் வளரக்கூடிய வளமான பூமியெனவும் பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
300 நாட்கள் தொடர் போராட்டத்தின் போது சிங்கள விவசாயிகள் மேய்ச்சல் நிலங்களில் களைக்கொல்லிகளை வீசியதாலும், மேய்ச்சல் நிலங்களுக்கு தீ வைப்பதாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உணவின்றி உயிரிழந்துள்ளதாக மயிலத்தமடு, மாதவனை பால் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிமலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“இந்தப் போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 1,075 மாடுகள் உயிரிழந்துள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களின் ஆயுதங்களால் 375 மாடுகள் பலியாகியுள்ளன. இதுவரை இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை.”
மேய்ச்சல் நிலத்தில் 160 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் அத்துமீறி வாழ்ந்து வருவதாக அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.
பாற்பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக நாட்டின் தலைவரும் அரச அதிகாரிகளும் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சீனித்தம்பி நிமலன் குற்றஞ்சாட்டுகின்றார்.
“ஜனாதிபதியும், மகாவலி அபிவிருத்தி அமைச்சரும் சந்தித்து வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட செயலாளர் அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புங்கள் என்கிறார். மொத்த நிலத்தில் 10,000 ஹெக்டேயரை மேய்ச்சலுக்குக் கேட்டிருந்தோம். அதன் பின்னர் குறைந்தது 7,000 ஹெக்டேயரைக் கேட்டோம். ஆனால் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் 3,000 ஹெக்டேயர் என்கிறார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.”
ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு செல்கிறார்
பால் பண்ணை பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸாருக்கும் மகாவலி அதிகாரசபை அதிகாரிகளுக்கும், பால் பண்ணையாளர்களின் நிலத்தை அபகரித்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்ற சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
மயிலத்தமடு – மாதவனையில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில், அத்துமீறி குடியேறியதாகத் தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அரச அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எவ்வகையான ஆவணமும், அத்துமீறி குடியேறியவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய 13 பேரையும் வெளியேற்றுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
எவ்வாறெனினும் சிங்கள விவசாயிகள் இதுவரை நிலத்தை விட்டு வெளியேறவில்லை என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.