LOADING

Type to search

உலக அரசியல்

நேபாளத்தில் புதிய பிரதமராக பி.கே. சர்மா ஒலி மீண்டும் தேர்வு

Share

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேபாள-மாவோயிட்டு மைய கம்யூனிஸ்ட்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் புஷ்ப கமல் தஹல் என்ற பிரசந்தா பிரதமராக செயல்பட்டு வந்தார். புஷ்ப கமல் தலைமையிலான கூட்டணிக்கு முன்னாள் பிரதமர் பி.கே. சர்மா ஒலி தலைமையிலான நேபாளம் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பிற கட்சிகள் ஆதரவு அளித்து வந்தன. 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 138 உறுப்பினர்களின் தேவை. இதனிடையே, ஆட்சி மற்றும் அதிகாரப்பகிர்வில் பிரதமர் புஷ்ப கமல் தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, புஷ்ப கமலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த புஷ்ப கமல் ஆட்சிக்கு எதிராக 5வது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இதில் பெரும்பான்மைக்கு 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் 63 உறுப்பினர்கள் மட்டுமே பிரதமர் புஷ்ப கமல் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தோல்வியடைந்தார். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் புஷ்ப கமல் தோல்வியடைந்த நிலையில் நேபாளத்தில் புதிதாக ஆட்சியமைக்க முன்னாள் பிரதமர் பி.கே. சர்மா ஒலி உரிமை கோரியுள்ளார். ஆட்சியமைக்க 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் 165 உறுப்பினர்கள் பி.கே. சர்மா ஒலிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, நேபாளத்தில் புதிய பிரதமராக பி.கே. சர்மா ஒலி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.