மத்திய அரசின் வேலைக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் – மதுரை வெங்கடேசன் எம்.பி
Share
மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ள இரண்டு தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு இளைஞர்கள் வாய்ப்புகளை பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது என்று நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அது தொடர்பான பல பிரச்னைகளையும் எழுப்பி வந்துள்ளேன். தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு தர மறுப்பது, தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களை வெகு தூரத்தில் தேர்வுகளுக்கு அனுப்புவது, இந்தி மொழியை தேர்வு முறைமையில் திணிப்பது, இடஒதுக்கீடு அமலாவதில் அநீதி இழைக்கப்படுவது என தொடர்ந்து நான் எழுப்பிய பிரச்னைகளில் தீர்வுகளையும் காண முடிந்தது. ஆனாலும் மத்திய அரசு எல்லாவற்றையும் மையப்படுத்துவது என்ற பெயரில் மாநில உரிமைகள், தமிழ்நாடு இளைஞர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதை விடவில்லை.
முந்தைய காலங்களில் மண்டல வாரியான பணி நியமன தேர்வுகள் இருந்தன. அப்போது தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு இளைஞர்கள் நிறைய வேலைவாய்ப்பை பெற்றனர். அதனால் தமிழ்நாட்டு மக்களும் பயன் பெற்றனர். தாய் மொழி அறிந்தவர்கள் அதிகமாக உள்ள அலுவலக சூழல், எளிய மக்கள் சேவை பெற உகந்த இடங்களாக அரசு அலுவலகங்களை வைத்திருந்தது. இப்போதோ ஒரு தேசம், ஒரு தேர்வு என்ற முறையில் மத்திய அரசின் பணிகளுக்கு தேசம் முழுமைக்குமான தேர்வு முறைமையை அமலாக்குகிறது. ஆகவே தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள். தரமான நிலையான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ள காலம். அரசு வேலைகள் பணிப் பாதுகாப்புடன் கூடியது. மக்களுக்கும் சேவை புரியும் வாய்ப்புடையது. ஆகவே உடனே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.