LOADING

Type to search

இலங்கை அரசியல்

வட மாகாணத்தினை ஆட்டிப்படைக்கும் வைத்திய ‘சிறுந்தகைகளை’ கட்டுப்பத்த முடியவில்லையா?

Share

வைத்தியத்துறையில் தற்போது பல்வேறு ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அண்மையில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு முன்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இணையவாசிகளுக்கும் வைத்தியத்துறையில் காணப்படும் முக்கிய புள்ளிகளுக்கும் இடையே பல்வேறான கருத்து – சொற்பரிமாற்றங்கள் நடைபெற்றன. அந்தவகையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நோயளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தம்மிடமுள்ள ஆதாரங்களை முன்வைத்து சமூக ஊடகங்கள் மூலமாகவும் தெரிந்த சில வழிமுறைகளிலும் முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்தனர். அந்தவகையில் அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் எவராலும் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை.

இதற்கு முக்கிய காரணம் முறைப்பாடுகளை முன்வைத்த எவரும் அரசியல் சார்ந்தவர்களாகவோ அல்லது உயர் அதிகாரிகளின் பக்கபலம் உடையவர்களாகவோ இல்லாமல் சாதாரண பாமர மக்களாக காணப்பட்டமையினால் அதிகார வர்க்கத்தினர் அவற்றினை மூடிமறைத்து விட்டார்கள்.

இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கண் பார்வை குறைவு தொடர்பாகவும் கண் சார்ந்த நோய்கள் தொடர்பாகவும் பலர் சிகிச்சை பெறுவதற்கு செல்கின்றபோது வைத்தியசாலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு (சத்திர சிகிச்சை) பிறிதொரு திகதி வழங்கபபடும். அதுவும் 6 தொடக்கம் 18 மாதங்கள் பிந்தியதாகவே காணப்படும். அதுவரை காலமும் காத்திருக்க முடியாதமையால் மக்கள் அதே வைத்தியரை தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணம் செலுத்தி அனுமதி பெற்ற சந்திக்கும் போது தனியார் வைத்தியசாலைகளில் விரைவாக குறைந்த செலவில் சத்திரசிகிச்சை செய்யலாம் என்ற போர்வையில் கருத்துக்கள் முன்வைக்கப்படும். இதனை நம்பி மக்கள் தனியார் வைத்தியசாலையில் திகதி பெற்று சத்திரசிகிச்சையை செய்துகொண்டார்கள்.

இவ்வாறு செய்து கொண்டவர்களில் சிலரது கண்கள் அந்த வைத்தியசாலையில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக கண்பார்வை இழந்தும் காணப்பட்டனர். அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றும் கூட எந்தவிதமான பாரிய அளவு நடவடிக்கையும் எடுக்க முன்வராத தற்போதைய வைத்திய மாபியாக்கள் சாவகச்சேரியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறைக்கும் நோக்குடன் செயற்பட்டது மட்டுமன்றி அவற்றில் தமக்கு எதிரகா செயற்பட்டவர்களுக்கு விரைந்து நடவடிக்கை களையும் எடுக்க முன்வந்தனர்.

இலங்கையில் அதிக வருமானம் பெற்றுக்கொள்ளும் துறையாக வைத்தித்துறை காணப்படுவதுடன் சில வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் இருந்து கொண்டு தமது சேவை முழுவதையும் தனியார் வைத்தியசாலைகளின் ஊடாக வழங்கி வருகின்றனர். அத்துடன் பெரும்பாலான வைத்தியர்கள் பண முதலைகளாகவே காணப்படுகின்றனர். ஒரு சிலர் அரச வைத்தியசாலையில் நோயளர்களையும் விடுதியையும் மேலோட்டமாக பார்த்து விட்டு தனியார் வைத்தியசாலையில் சென்று ஒரு நாளைக்கு 20 – 50 வரையான நோயாளர்களை பதிவுசெய்து பார்வையிடுகின்றனர். இதில் ஒட்டுமொத்தமாக எல்லா வைத்தியர்களையும் குறிப்பிட முடியாது. பல வைத்தியர்கள் எந்தவொரு தனியார் வைத்தியசாலைக்கும் செல்லாது அரச வைத்தியசாலையில் சேவை புரிந்து வருகின்றார்கள். மேலும் எமக்குத் தெரிந்த சில வைத்தியர்கள் இன்றும் துவிச்சக்கர வண்டியில் 8 – 10 கிலோமீற்றர் தூரம் சென்று காலை 7 அல்லது 8 மணிமுதல் இரவு 10 அல்லது 11 மணிவரைகூட வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இடம்பெற்றுவரும் மோசடிகள் பல நாளுக்கு நாள் அம்பலப்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. பொதுவாக கொழும்பு அல்லது தென்பகுதி வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் அல்லது சிற்றூழியர்கள் அனைவரும் நோயாளர்களை பரிவுடன் கவனித்து வருவதுடன் கண்ணியமாக நடந்துகொள்வதையும் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் துப்பரவுப் பணிகள் கூட சிறப்பாகவும் சுகாதாரமான முறையிலும் இடம்பெற்று வருகின்;;;றன. இவை அனைத்தும் அந்தந்த வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் நடைபெற்று வருகின்றன. ஆனால், வடமாகாணத்தில் அதிலும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு சேவைசெய்ய வருகின்ற சிறந்த வைத்தியர்களையும் தமது ஊழலுக்கு உடன்படாத வைத்தியர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகளையே வைத்திய மாபியாக்கள் செய்து வருகின்றன.

அந்தவகையில் யாழ். வைத்திய மாபியாக்கள் அண்மைக் காலமாக மேற்கொண்டு வருகின்ற எதிரானவர்களைப் பழிவாங்கும் செயற்பாடுகள் தற்போது நாளுக்கு நாள் வெளிவந்துகொண்டு தான் இருக்கின்றன. இத்தகைய செயற்பாடுகள் சில ஊடகங்களினாலும் சில பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஒரு சில அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பினாலேயே இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் அண்மையில் பல காரியங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் காரணமாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவது இன்னொரு வைத்தியர் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதுடன் இதுவும் தனியார் துறையில் உள்ள சில வைத்தியசாலைகளை வளர்ப்பதற்கு யாழ். வைத்திய மாபியாக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகவே காணப்படும் என கருத்து நிலவிவருகின்றது. அந்தவகையில், இருதய சத்திரசிகிச்சை நிபுணரின் இடமாற்றம் தொடர்பாக தகவலாகும்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நடந்தவை என்ன?

யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய இருதய நெஞ்சறை மாற்று சத்திர சிகிச்சை நிபுணரான எஸ்.முகுந்தன் கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றமை தொடரில் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையில் நமது ஊடகம் இது தொடர்பில் ஆராய்ந்தது.

யாழ் மாவட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த இருதய மாற்று சத்திரசிகிச்சையை முதன் முதலில் யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிகழ்த்திச் சாதனை படைத்த பெருமை வைத்திய குறித்த வைத்தியநிபுணரையே சாரும்.

அவரது விடாமுயற்சியும் அவரோடு உறுதுணையாக இருந்தவர்களின் அற்பணிப்பும் குறித்த சத்திர சிகிச்சையை யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வைத்திய நிபுணர் முகுந்தன் இருதய மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் சக வைத்தியர்களை தயார் படுத்தி ஒரு பொறிமுறையின் கீழ் செயற்படுத்தி 150க்கு மேற்பட்ட இருதய நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் இருதயங்களில் வாழ்கின்ற வைத்திய நிபுணராக விளங்கினார்.

யாழ் மாவட்ட மக்களுக்கென இல்லாமல் வடமாகாணத்தில் இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றினார். இவ்வாறான நிலையில் இம்மாதம் ஜூன் மாதம் எட்டாம் திகதி கொழும்பு சீமாட்டி மருத்துவமனைக்கு சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் பெற்றுச் சென்றார்.

குறித்த இடமாற்றம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தி.சத்தியமூர்த்தி தனது இணைய வழி செய்தி குறிப்பில் குறிப்பிடும் போது குறித்த வைத்தியர் சுய விருப்பத்தின் பேரிலே இடமாற்றம் பெற்று தனது குடும்பத்துக்கு அருகில் உள்ள சீமாட்டி வைத்தியசாலையில் பணிபுரிவதற்காக சென்றுவிட்டார் என குறிப்பிட்டார். அத்துடன் புதியவர்களை வரவேற்பதும் இடமாறிச்செல்வோரை வாழ்த்தி அனுப்புவதும் தமது கடமை என குறிப்பிட்டிருந்தார்.

அவர் இவ்வாறு தெரிவித்த கருத்தில் தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறித்த வைத்தியர் கொழும்புக்கு இடமாற்றம் பெற்று தனது குடும்பத்திற்கு அருகில் சேவையாற்ற சென்றுவிட்டார் என குறிப்பிட்ட கருத்து அவர் நான்கு வருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றியபோது தனது குடும்பத்தை நினைக்கவில்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க யாழ் போதனா வைத்தியசாலையில் அதிலிருந்து குறித்த சத்திர சிகிச்சை நிபுணர் கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றமை அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலே பிரதான காரணம் என இன்னொரு பகுதியினர் முணுமுணுக்கின்றனர்.

சத்திரசிகிச்சை நிபுணருக்கு என்ன மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கும் என ஆராய்ந்த போது குறித்த சத்திரசிகிச்சை நிபுணர் போதனா வைத்தியசாலைக்கு சேவையாற்ற வந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அவருக்கென தனியான நோயாளர் விடுதி ஏற்படுத்திக் கொடுக்காத கொடுமை அம்பலத்துக்கு வந்தது.

குறித்த வைத்திய நிபுணர் நான்கரை வருடங்கள் கடந்த நிலையில் தனது விண்ணப்பத்தை சமர்ப்பிக்காத சந்தர்ப்பத்தில் மத்திய சுகாதார அமைச்சு தான் விரும்புகின்ற மாகாணத்துக்கு அவரை இடமாற்றம் செய்யும். இதனைக் கருத்தில் கொண்டு தனது குடும்பத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலையான கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையை முகுந்தன் தனது பணியிட மாற்றத்துக்கு தெரிவு செய்தாதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு நிர்வாக குறைபாடுகள் பல இருக்கின்ற நிலையில் குறித்த சத்திர சிகிச்சை நிபுணர் தான் சுய விருப்பத்தின் பெயரில் தான் கொழும்பு செல்கிறார் என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிடுவது தமது பக்க பிளைகளை மறைப்பதற்காகவா என்ற சந்தேகம் எழுகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட பல சத்திரசிகிச்சை நிபுணர்கள் தமது சேவை காலம்சேவைக்காலம் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான என்போசை பெற்ற நிலையில் குறித்த சத்திர சிகிச்சை நிபுணரான முகுந்தனுக்கு மட்டும் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் என்போசாக மாற்றுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி இன்னொருபுறம் எழுகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஒரு சில பண முதலைகளின் கோரிக்கைக்காகவா சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தனை என்போரஸ் ஆக்கவில்லை என்ற கேள்வி எழவதோடு போதனா வைத்தியசாலையின் இருதய நெஞ்சறை மாற்று சத்திரசிகிச்சை கூடத்தை தரமுயர்த்யதாமல் வைத்திருக்கின்றனர் என்ற கேள்வியும் பலர் இடம் எழந்துள்ளது.

வடக்கு மக்களுக்காக சேவையாற்ற விரும்பிய வைத்திய நிபுணர் முகுந்தனை யாழ் போதனா வைத்தியசாலையில் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவரை சேவைக்கால முழுவதும் அவர் விரும்பும் பட்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை யில் பணியாற்றவிடாது யாரோ ஒருசிலரின் நிகழ்ச்சி நிரலுக்கு யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அடிபணிந்து செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

அத்துடன் ஊடக சந்திப்பொன்றில் வைத்தியர் நடராஜா ஜெயகுமாரனும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்திருந்தார். தனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து தன்னை யாழில் இருந்து விரட்டியவர் என்ற வைத்திய மாபியாவின் தலைவர்களில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்கலை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்த வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர், யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாட்டுகின்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாளையில் கடமையாற்றிய இவர், அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்தால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகர் ஒருவர் மீது மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அத்துடுன் தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால், தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருகின்றார்.

இதுதொடர்பில் தற்போது யாழ்ப்பாணத்தில் நாளுக்குநாள் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணிபுரிகின்ற புற்றுநோய் வைத்திய நிபுனர் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு தமக்கு நடந்த கொடுமைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தவகையில் வைத்தியர் அர்ச்சுனா எப்படிப்பட்டவர் என்பது எமக்கு முக்கியமல்ல அவரினால் தொடக்கி வைக்கப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டிலிருந்து ஆரம்பித்து பல முறைப்பாடுகள் வெளிவந்துகொண்டிருன்றன. இவை தொடர்பாக நடவடிக்கைகள் சில கண்துடைப்புக்காகவே மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிந்ததே.

எனினும் அதற்கு ஒருபடி மேலே சென்று யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிர்வாக அமைப்பு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் நேரடியாக தொடர்பு கொண்டு முறைப்பாடுகள் தொடர்பாக விளக்கங்களை அனைவர் முன்னிலையிலும் வெளிப்பிடுத்தியிருந்தார். பாதிக்கப்பட்ட நபர், தனது தந்தைக்கு பாம்பு கடித்த நிலையில் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாகவும், இதன்போது வைத்திய நிர்வாகம் சார்ந்த எவரும் அங்கிருக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். இதேபோல் குற்றச் செயல்கள் இடம்பெறாமல் இருக்க மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமே. அவ்வாறு செய்வதன் மூலம் வைத்திய மாபியாக்களின் செயற்பாடுகளை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். அதிகார வர்க்கத்தினை மட்டும் நம்பி இராது மக்களும் அவை தொடர்பில் உரிய முறைப்பாடுகள் செய்வதுடன் நின்றுவிடாது குற்றல் செயல்களுக்கு எதிராக குரல்எழுப்ப வேண்டும்.