“அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டு இருப்பேன்” – மு.க.ஸ்டாலின்!
Share
அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டே கொண்டிருப்பேன் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காலை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரூ.100 மதிப்பிலான கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு அவ்வளவு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும். கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.