Provincial Minister Stephen Lecce made the promise at a roundtable meeting with Ethnic Journalists
“பெரும்பாலான பல்லினப் பத்திரிகைகள் தொடர்ந்து இயங்குவதற்கு எமது ஒன்றாரியா அரசாங்கம் நிச்சயம் ஆதரவளிக்கும்.”
மாகாண அமைச்சர் ஸ்டீபன் லெட்சே பல்லினப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வட்ட மேசை கலந்துரையாடலில் அளித்த வாக்குறுதி
“கனடாவில் மிகப்பெரிய மாகாணமாகத் திகழும் ஒன்றாரியோவில் பல்லினப் பத்திரிகைகளின் பங்கு குறித்து எந்தவொரு அரசியல்வாதிக்கும் சமூக செயற்பாட்டாளருக்கும் நிச்சயம் தெரியும். இங்கு வெளிவருகின்ற ஒவ்வொரு மொழி சார்ந்த பத்திரிகையும் அந்தந்த மொழிபேசும் சமூகங்களின் அடையாளமாக விளங்குகின்றன. இவ்வாறான நிலையில பல காரணங்களால் கடந்த சில வருடங்களாக பெரும்பாலான பல்லினப் பத்திரிகைகள் தொடர்ந்து அச்சில் வெளிவருவதற்கு சவால்களை எதிர்கொண்டு அவற்றில் பல பத்திரிகைகள் அச்சிடுவதை நிறுத்திக் கொண்டன.
எனவே எங்கள் ஒன்றாரியா அரசாங்கமானது இங்கு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கும் பல்லின தொலைக்காட்சி நிலையங்களுக்கும் நிச்சயம் ஆதரவளிக்கும். அதற்கான நிதியை விரைவில் ஒதுக்கும் வகையில் எமது மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களும் அமைச்சரவையும் பல கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். எனவே நிச்சயம் பல்லினப் பத்திரிகைகள் ஒன்றாரியோ அரசின் ஆதரவைப் பெறும் சந்தர்ப்பம் விரைவில் தோன்றும்”
இவ்வாறு ஒன்றாரியோ மாகாணத்தின் மின்சக்தி மற்றும் கனிப்பொருள் அமைச்சர் கௌரவ ஸ்டீபன் லெட்சே (Hon Stephen Lecce )அவர்கள் கடந்த 15-04-2026 அன்று புதன்கிழமை ரொறன்ரோவில் நடத்திய பல்லினப் பத்திரிகையாளர்களின் வட்ட மேசை கலந்துரையாடலில் வாக்குறுதி அளித்தார். அப்போது அவரது பிரதான மேசையில் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ குடியுரிமை மற்றும் பல்கலாச்சார அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான அரிஸ் பாபிகியன் ( Aris Babikian MPP ) மற்றும் கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் தலைவரான தோமஸ் சாரஸ் ( Thomas Saras )அவர்களும் உடனிருந்தார்கள்.
கனடா உதயன் பத்திரிகையின் சார்பில் அதன் பிரதம ஆசிரியர் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய அரிஸ் பாபிகியன் ( Aris Babikian MPP ) மற்றும் தோமஸ் சாரஸ் ( Thomas Saras ) ஆகிய இருவரும் இணைந்து மேற்படி வட்ட மேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பல பத்திரிகையாளர்கள் தாங்கள் எதிர் கொள்ளும் சவால்களையும் எடுத்துரைத்து அமைச்சர் லெச்சே அவர்களின் பொறுப்பில் உள்ள அமைச்சு தொடர்பாக பல கேள்விகளையும் முன்வைத்தார்கள்.
குறிப்பாக கனிப்பொருள் மற்றும் மின்சக்தி தொடர்பாக அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விசேட மாநாட்டில் கலந்து கொண்ட தனது அனுபவத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சிரேஸ்ட அதிகாரிகள் கனடாவோடும் ஒன்றாரியோ மாகாணத்தோடு வர்த்தக உடன்படிக்கைகளை நிறுவ ஆர்வத்துடன் உள்ளதை தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இங்கே காணப்படும் படங்களில் அமைச்சர் உட்பட பல பத்திரிகையாளர்களும் அரச அதிகாரிகளும் காணப்பெறுகின்றார்கள்