தமிழ்ச் சமூக மையத்திற்கு காணியை வழங்கியதோடு மட்டுமன்றி. கட்டட அனுமதிப் பத்திர கட்டணத்தையும் ‘விட்டுக் கொடுத்த’ ரொறன்ரோ நகர சபை
கனடா வாழ் தமிழ் மக்களுடைய ஒரு நீண்ட நாள் கனவாக இருந்த ஸ்காபுறோ ‘தமிழ்ச் சமூக மைய’த்திற்கு உரிய காணியை நீண்ட கால குத்தகைக்கு வழங்கியதோடு மட்டுமன்றி. நகரசபையின் நடைமுறையில் உள்ள கட்டட அனுமதிப் பத்திர கட்டணத்தையும் விட்டுக் கொடுத்த ரொறன்ரோ நகர சபை இந்த தகவலை அண்மையில் நடைபெற்ற உற்சாகமான வைபவத்தில் ரொறன்ரோ மாநகரத்தின் மேயர் ஒலிவியா சோ அவர்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு அறிவித்தது.
கடந்த 24-07-2026 அன்று வெள்ளிக்கிழமையன்று 251 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள தமிழ்ச் சமூக மையம் எதிர்காலத்தில் கம்பீரமமாக எழுந்து நிற்கவுள்ள காணியில் நடைபெற்ற மேற்படி உற்சாகமான வைபவத்தில் ரொறன்ரோ மாநகரத்தின் மேயர் ஒலிவியா சோ இதற்கான அறிவிப்பைச் செய்தபொழுது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கரகோசம் செய்து தங்கள் வரவேற்பையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்.
மேற்படி வைபவத்தில் தமிழர்களல்லா அரசியல் பிரமுகர்களோடு எமக்கான தமிழ்ச் சமூக மையம் அமையவுள்ள ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற அரசியல் பிரதிநிதிகளான அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி(மத்திய அரசு) அமைச்சர் விஜய் தணிகாசலம்(மாகாண அரசு) மற்றும் நீதன் சண்முகராஜா(ரொறன்ரோ நகர சபை) ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள்.
மேற்படி மூவரும் அங்கு உரையாற்றுகையில் தமிழ்ச் சமூக மையத்தின் கட்டட நிதிக்காக எமது சமூகம் திரட்ட வேண்டிய 19 மில்லியன் டாலர்களுக்கு மேலதிகமான தொகையை திரட்டும் பணியில் உழைத்த மையத்தின் நிதிசேகரிப்பு குழுவிற்கும் நிதி அன்பளிப்பு வழங்கிய தனி நபர்கள்-அமைப்புக்கள்- வர்த்தக அன்பர்கள்- மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.