கனடா – லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன
ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிக்கும் பல்லின மக்களால் நன்கு விரும்பப்பெறும் பெண்மணியான லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது இரண்டு வாகனங்கள் வியாழக்கிழமை அன்று 27ம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டன என்ற செய்தி அறிந்து எமது குழு இன்று காலை சம்பவம் இடம்பெற்ற அவரது இல்லத்திற்குச் சென்றது.
அந்த இடத்தில் சுமார் 6 வாகனங்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த வேளையில் உடனடியாக செய்தி அறிந்து அங்கு விரைந்து வந்த ரொறன்ரோ தீயணைப்புப் பிரிவினர் இரண்டு வாகனங்கள் எரிந்த நிலையில் தீயை அணைத்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் எமது குழுவினரிடமிடம் தெரிவித்தார.
சோகமும் அச்சமும் கொண்ட நிலையில் எம்மோடு உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் தீயணைப்பு படை மற்றும் ரொறன்ரோ காவல் துறை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் மார்பகப் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சையின் பின்னர் தேறிய நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரது மூத்த புதல்வரின் திருமணத்தை சிறப்பாக நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் குறித்து கனடியப் பிரதமர் மற்றும் ரொறன்ரோ மேயர் ஆகியோர் கண்டன அறிக்கைகளை தமது செய்தி தளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.