அநுர அரசின் அடக்கு முறையா …? தமிழ் தரப்புகளின் அதிகாரப் போட்டியா?

Share

”இனவாத அரசு இயந்திரம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளைப் பறிக்கக் காத்திருக்கிறது என்பதை அறிந்திருந்தும், அதற்குத் தாம்பாளத் தட்டில் வாய்ப்பை வழங்கிய தமிழ் தலைமைகளின் அரசியல் சுயநலமே தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட பிரதான காரணம். திலீபனின் சிலை அகற்றம் வெறும் அநுரகுமார அரசாங்கத்தினதோ பொலிஸாரினதோ அடக்குமுறை மட்டுமல்ல.அது தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிளவுபட்ட அரசியலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சவுக்கடி”. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனின் நினைவிடத்தை வலுக்கட்டாயமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதனால் திலீபன் மீது மரியாதையை கொண்டிருந்தாலும் இவர்களின் அரசியல் எதிராளிகள் யாருமே திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு செல்வது இல்லை.கடந்த 2025 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவு தினத்தின்போதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவந்த போது அஞ்சலி செலுத்தவிடாது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தடுக்கப்பட்டு விரட்டப்பட்டனர்.

—-கே.பாலா

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் என்பது தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகளுடனும், கூட்டு நினைவேந்தலுடனும் பிணைந்த ஒரு புனித நிகழ்வு. இவ்வாறான நிலையில் யாழ். நல்லூர் வீதி தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் வைக்கப்பட்ட அவரது உருவச்சிலை, அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பொலிஸாரால் அகற்றப்பட்ட செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. ஆனால், இந்த திலீபனின் உருவச் சிலை அகற்றலின் பின்னணியில் இருந்தது வெறும் அரச ஒடுக்குமுறை மட்டும் தானா அல்லது தமிழ் தேசிய அரசியலில் தனக்கே உரித்தான ஆதிக்கத்தை,வாக்கு வங்கியை நிலை நிறுத்தத் துடிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் உள்வீட்டுப் பகையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

தமிழ் தேசிய அரசியலில் தியாகங்கள் போற்றப்படுவதை விடவும் , அவை சுய அரசியல் லாபங்களுக்காகக் கையகப்படுத்தப்படுவதே வரலாற்றுச் சோகமாக தொடர்கிறது. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையிலேயே சி.வி.கே சிவஞானம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சியும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள யாழ். மாநகரசபையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் திலீபனின் தியாகத்திற்குத் தாங்களே ‘ஒரே உரிமையாளர்கள்’ எனக் காட்டிக்கொள்ள நடத்தும் அதிகாரப் போட்டியும், நிழல் யுத்தமுமே திலீபனின் உருவச் சிலையை அகற்றும் துணிவை பொலிஸாருக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டையும் மறுக்க முடியாத சூழலே யாழ் மண்ணில் காணப்படுகின்றது

திலீபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனை உரிமை கொண்டாடி அடாவடி அரசியல் செய்கின்றனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பினரே திலீபன் நினைவுத்தூபியை நிர்மாணித்து பராமரித்தவர்கள். ஆனால் வீட்டிற்குள் ஒட்டகம் புகுந்தது போல் புகுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று அங்குள்ளவர்களை எல்லாம் விரட்டிவிட்டு திலீபனின் நினைவுத்தூபி இடத்தை சர்வாதிகாரமாக தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமிழ் தேசத்தை மீட்க வந்தவர்கள் போல் காட்டி அரசியல் செய்கின்றனர் என்பதே கடந்த சில வருடங்களாக தொடரும் குற்றச்சாட்டு .

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனின் நினைவிடத்தை வலுக்கட்டாயமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதனால் திலீபன் மீது மரியாதையை கொண்டிருந்தாலும் இவர்களின் அரசியல் எதிராளிகள் யாருமே திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு செல்வது இல்லை. கடந்த 2025 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவு தினத்தின்போதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவந்த போது அஞ்சலி செலுத்தவிடாது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தடுக்கப்பட்டு விரட்டப்பட்டனர்.

தமிழ் தேசத்திற்காக ,தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை அதிலும் அவர்கள் தமிழர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது தடுக்க, திருப்பியனுப்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு என்ன உரிமையுள்ளது ? திலீபன் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவனாக இருக்கையில் திலீபனை உரிமை கொண்டாட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யார்? இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? இவர்களுக்கும் திலீபனுக்கும் என்ன தொடர்பு? திலீபனுக்கு அஞ்சலி செலுத்த யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதனை தீர்மானிக்க இவர்கள் யார்?என்ற கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அப்போது எழுந்தன.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீதான கடும் விமர்சனமாகவும் அது மாறியது.

கடந்த வருடத்தைப்போலவே இவ்வருடமும் தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த நல்லூர் வீதியில் அனுஸ்டிக்கப்பட்டது. வழமை போன்றே இவ்வருடமும் திலீபனின் நினைவிடத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அத்துடன் அங்கு திலீபனின் உருவச்சிலையும் இம்முறை வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சிலையை அகற்ற பொலிஸார் நீதிமன்றத்தை நாடியபோது இதில் நீதிமன்றம் தலையிடாது. பொலிஸார் தமது அதிகாரத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க முடியுமென நீதிமன்றம் அறிவித்தது. திலீபனின் நினைவுதினம் முடியும்வரை பொறுமை காத்த பொலிஸார் அது முடிந்த மறுநாள் அதிகாலையே திலீபனின் சிலையை அங்கிருந்து அகற்றிச் சென்று விட்டனர்.

தியாகதீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் திலீபனின் சிலை பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும், இந்த சதியிலும் சி.வி.கே. சிவஞானம் தலைமையிலான தமிழரசுக்கட்சிக்கு நேரடியாகத் தொடர்புள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் போது ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான அனுமதியைக் கோருவது தொடர்பில் சி.வி.கே. சிவஞானத்துடன் உரையாடிய போது, அவர் மிகவும் காட்டமான தொனியில், “யாரைக் கேட்டு இந்த சிலையை வைத்தீர்கள்? செப்டம்பர் 26ஆம் திகதியோடு இந்த சிலையை எடுக்காவிட்டால் நானே இந்த சிலையை அகற்றுவேன்” என்று எச்சரித்தார். தமிழரசுக்கட்சியும் அதன் தலைமையும் அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் “கைக்கூலிகளாக” நின்று இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக தமிழ் தேசியமக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கஜேந்திரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியதன் மூலம் திலீபனை வைத்து அரசியல் செய்யும் ஒரு அசிங்க அரசியல் மீண்டும் வெளிப்பட்டது .

ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளரின் இந்த குற்றச்சாட்டை உடனடியாகவே மறுத்த தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பல உண்மைகளையும் போட்டுடைத்துள்ளதுடன் திலீபனை வைத்து சிலர் செய்யும் அரசிங்க அரசியலையும் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், தியாக தீபம் திலீபனின் சிலைக்கு எதிரான ஓர் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சித்திரிப்பது தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் திட்டமிட்டசெயல் .இது என் மீது மட்டுமல்ல ,இலங்கைத் தமிழரசுக்கட்சியையும் திட்டமிட்டுக் களங்கப்படுத்துகின்ற செயல். நானும் தமிழரசுக் கட்சியும் இந்தச் சிலை வைப்புக்கு எதிரானவர்கள் என்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணைபோனோம் அல்லது எங்கள் கோரிக்கைக்கு அமையவேபொலிஸார் நடவடிக்கை எடுத்தார்கள் என்றும் அபாண்டமான குற்றச்சாட்டுகளைமுன்வைப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

திலீபனின் சிலையைப் பொலிஸார் அகற்றியமைக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. பொலிஸார் யாழ்.மாநகர மேயரிடம் நீங்கள் சிலையை அகற்றுவீர்களா எனக் கேட்டபோது மாநகர மேயர் நாங்கள் அகற்றமாட்டோம் என்றே தெரிவித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தூபியைச் சுற்றிப்பாதுகாப்பு வேலி அமைத்து 10 அடிசுற்றளவுக்கு அதனைத் திருத்தி அமைக்கலாம் என்ற கோரிக்கையை நான்தான் அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சருக்கு முன் வைத்தேன். அப்படிப்பட்ட எனக்கு இந்தச் சிலை வைப்பை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை.எமது கட்சியும் எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு நாங்கள் மாறானவர்கள் என்று சித்திரிப்பது நியாயத்துக்கு அப்பாற்பட்டது.

மேலும் 2015ஆம் ஆண்டில் முதலாவதாக அந்த இடத்தைத் துப்புரவுசெய்து நிகழ்வை நடத்தியது ஜனநாயகப்போராளிகள் கட்சி .2016ஆம்ஆண்டிலும் அவர்கள்தான் செய்தனர்.அவர்களுக்கு அந்த உதவியைச் செய்தவன் நான்தான். ஆனால், இன்று தமிழரசுக் கட்சியை அழிப்பதே தங்களதுநோக்கம் என்று கூறிக்கொண்டு திலீபன் நினைவேந்தலையும் தங்களது சுயநலஅரசியலுக்காகத் தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி பயன்படுத்தி வருகின்றது.திலீபன் தியாக வேள்வியில் ஆகுதியானவன் என்பது எல்லோருக்கும்தெரியும் அவரைக் கொண்டாடுவது அனைவருக்கும் திருப்தியான விடயம்.

ஆனால் தாங்கள்தான் எல்லாம் செய்யலாம்,தங்களது கட்சிதான் அதற்கு ஏகபோகக் குத்தகைதாரர்கள்,தாங்கள்தான் ‘புலி வாரிசுகள்’ என்றவாறாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நடந்து கொள்கின்றனர் .தாமாகவே பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு திலீபன் நினைவஞ்சலிக் குழுவே அங்குள்ளது. அதில் தமிழரசுக் கட்சி, புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற ஏனைய தமிழ்க் கட்சிகள் இடம்பெற வில்லையே ஏன்? 2015, 2016, 2017 காலப்பகுதிகளில்இந்த நிகழ்வுகளை முன்னெடுத்த ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட இன்று அந்த இடத்துக்கு வரவில்லை. உங்களோடு முரண்படக் கூடாது என்பதற்காகவும் திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவுமே நாங்கள் ஒதுங்கிப்போய் ‘நீங்களே செய்யுங்கள்’ என்று விட்டுவிட்டோம். ஆனால் அதையே சாதகமாகப் பயன்படுத்தி எங்களை இகழ்ந்து தரம் தாழ்ந்த செயல்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபடுவதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் தேசியத்தின் அடிப்படையைக் காவிக் கொண்டிருப்பவர்கள். இத்தகைய சின்னத்தனமான அரசியலை எக்காலத்திலும் செய்ய மாட்டோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ். மாநகர முதல்வர் மதிவதனி கூறுகையில், திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் தமிழரசுக்கட்சி மற்றும் அதன் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் கஜேந்திரன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் “திட்டமிட்ட சேறுபூசல்கள்” , அரசியல் நோக்கம்கொண்டவை . திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக தற்காலிகமாகவே சிலை வைக்க அனுமதி கோரப்பட்டது . அதற்கு மாநகரசபையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு அனுமதி வழங்கப்பட்டது. செப்டம்பர் 26ஆம் திகதியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரும், சிலை தொடர்பில் ஏற்பாட்டாளர்களான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உரிய கவனம் செலுத்தாததாலேயே, பொலிஸார் வந்து அதை அகற்றிச் சென்றுள்ளனர் சிலையை அகற்றுமாறு மாநகரசபை பொலிஸாரிடம் கோரவில்லை . பொலிஸாரின் இந்த நடவடிக்கையை நாமும் கண்டிக்கின்றோம் என்று கூறுகின்றார்

தியாகதீபம் திலீபனின் சிலையை அகற்றிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்றாலும், இந்த நிலைமைக்குக் கதவு திறந்து வைத்தவர்களே பிரதான குற்றவாளிகள்.திலீபனின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யத் துடிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு புறமும் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்திற்கு உரித்தானவர்களாகவுள்ள யாழ். மாநகரசபை நிர்வாகமும் அதனை தமது ஆட்சியில் வைத்துள்ள தமிழரசுக்கட்சி மறு புறமும், நடத்திய ‘பனிப்போரும்’ பகையுமே, திலீபனின் சிலையை அகற்றும் சாதகமான சூழலை பொலிஸாருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்பதே உண்மை.

இனவாத அரசு இயந்திரம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளைப் பறிக்கக் காத்திருக்கிறது என்பதை அறிந்திருந்தும், அதற்குத் தாம்பாளத் தட்டில் வாய்ப்பை வழங்கிய தமிழ் தலைமைகளின் அரசியல் சுயநலமே தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட பிரதான காரணம். தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றம் என்பது வெறும் அநுரகுமார அரசாங்கத்தினதோ பொலிஸாரினதோ அடக்குமுறை மட்டுமல்ல. அது தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிளவுபட்ட அரசியலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சவுக்கடி. இலங்கைத் தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தியாகங்களின் பெயரால் நடத்தும் இந்த அதிகாரப் பனிப்போரை உடனடியாக நிறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் தமிழர்களின் எந்தவொரு வரலாற்று நினைவும் எஞ்சியிருக்காது. தியாகிகளின் நினைவுகளைத் தங்களின் வாக்கு வங்கிச் சொத்தாகக் கருதுவதை விட்டுவிட்டு, பொது இலக்கை நோக்கித் தமிழ் தலைமைகள் ஒன்றிணையாத வரை, எதிரியின் கைகள் நமது புனிதக் குறியீடுகளை வீழ்த்திக்கொண்டேதான் இருக்கும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>