”22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினால் எதிர்க்கட்சிகள், மக்களிடம் எழுந்த எதிர்ப்பலைகளை திசைதிருப்ப நாமல் ராஜபக்ச கைது என்ற இன்னொரு பெரிய கோட்டை வரைந்த அநுரகுமார அரசாங்கம் 22 ஆவது திருத்தத்தையும் நாமல் கைதினையும் மக்களை மறக்க வைக்க தற்போது உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் 15 பேருக்கு ”200-260 வருட சிறை ”என்ற இன்னொரு பெரிய கோட்டை வரைந்து அதனை மேலெழ வைத்துள்ளது. அத்துடன், அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய அறிக்கைகளின் தகவல்கள் வெளியாகி அரசாங்கத்திற்கு அரசியல்நெருக்கடிகளை உருவாக்கியபோது, அரசாங்கம் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயலவில்லை. மாறாக, ‘புதிய விசாரணைக் குழுக்கள்’ அமைப்பதாக அறிவித்து நேரத்தைக் கடத்தும் உத்தியைக் கையாண்டது. ஒரு பிரச்சினைக்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டைத் தள்ளிவைத்துவிட்டு, “புதிய விசாரணை” என்ற புதிய நம்பிக்கைக் கோட்டை வரைந்து பழைய கேள்விகளைச் சட்டென்று காலாவதியாக்கியது.”
——-கே.பாலா
”மக்களின் நினைவாற்றல் மிகக் குறுகியது” என்பது அரசியல் சாணக்கியர்கள் நன்கு அறிந்த உண்மை. அந்த பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, நிலவும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவது தற்கால அரசியலின் தவிர்க்க முடியாத உத்தியாக மாறியுள்ளது. ‘ மாற்றம்’ என்ற மாபெரும் நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்து ஆட்சியைப் பிடித்த அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம், தற்போது சந்தித்து வரும் சவால்களை மறைக்க. மக்களின் கவனத்தை திசை திருப்ப ‘இரு கோட்டுத் தத்துவம் ‘ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
ஒரு பெரிய கோட்டைச் சிறியதாக்குவதற்கு, அதை அழிக்க வேண்டிய அவசியமில்லை.அதற்குப் பக்கத்திலேயே அதைவிடப் பெரியதாக இன்னுமொரு கோட்டை வரைந்தால் போதும். அதாவது நெருக்கடி கொடுக்கும் ஒரு பெரிய பிரச்சினையை சிறியதாக்குவதற்கு அதனை விட ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்க வேண்டும்.இது அரசியலின் இராஜதந்திரம்.இதுதான் அரசியல் களத்தில் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்படும் ‘இரு கோட்டுத் தத்துவம்’. இன்று இலங்கையின் அரசியல் அரங்கில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த இருகோட்டு தத்துவத்தை மிகச் கச்சிதமாகக் கையில் எடுத்துள்ளது.
நாட்டில் எழும் அரசியல்,பொருளாதார நெருக்கடிகள்,வாக்குறுதி மீறல்கள் அல்லது நிர்வாகச் சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கு வரும்போதெல்லாம், விமர்சனங்களுக்கு உள்ளாகும்போதெல்லாம் ,எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பும் போதெல்லாம் திட்டமிட்டு வேறொரு பரபரப்பான விவகாரம் மக்கள் முன் தள்ளப்படுகிறது. மக்கள் ஒரு பிரச்சினையின் சுமையை உணர்வதற்குள், அதைவிடப் பெரியதொரு சர்ச்சையைச் சுட்டிக்காட்டி முந்தையதை மறக்கடிக்கும் இந்த அரசியல் காய்கநகர்த்த லே தற்போதைய அநுரகுமார அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
அநுரகுமார அரசாங்கம் தனது வீழ்ச்சிகளையும், நடைமுறைச் சிக்கல்களையும் மக்கள் கேள்வி கேட்கும் ஒவ்வொரு கணமும், புதியதொரு சர்ச்சையை அல்லது எதிரத்தரப்பின் குற்றச்சாட்டைக் கிளப்பிவிட்டு மக்களின் கவனத்தை இலாவகமாகத் திசைதிருப்பி வரும் இரு கோட்டு தத்துவம் அநுரகுமார அரசின் அமைச்சரவை அமைக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலையேற்றமும் பற்றாக்குறையும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது முதல் தற்போதைய உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தீர்ப்பு வரை தொடர்கின்றது.
அநுரகுமார அரசின் அமைச்சரவை அமைக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலையேற்றமும் பற்றாக்குறையும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. சாதாரண மக்களின் பசி மற்றும் ஜீவனோபாயச் சிக்கல் என்ற இந்த ‘முதலாவது கோடு’ அரசாங்கத்திற்குப் பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால், இந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் கோப்புகள் அவசர அவசரமாகத் தூசி தட்டப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் விசாரணைகள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக்கப்பட்டன. “மக்களின் பசி” என்ற சிறிய கோட்டை மறைக்க, “பழைய ஆட்சியாளர்களைத் தண்டித்தல்” என்ற உணர்ச்சிப்பூர்வமான பெரிய கோடு வரையப்பட்டு, மக்களின் கவனம் லாவகமாகத் திசைதிருப்பப்பட்டது.
தேர்தல் பிரசார மேடைகளில் “வற் வரியைக் குறைப்போம்”, “சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வோம்” என்று உறுதியளித்த அரசாங்கம், ஆட்சியில் அமர்ந்த பின்னர் அந்த நிபந்தனைகளுக்குத் தலைவணங்க வேண்டிய சூழல் உருவானது. வரிச்சுமையால் மக்கள் திணறத் தொடங்கியபோது, அரசாங்கம் ‘எளிமை அரசியல்’ எனும் அடுத்த பெரிய கோட்டை கீறியது. முன்னைய அரசுகளின் சொகுசு வாகனங்களை வீதிகளில் வரிசையாகக் காட்சிப்படுத்தி ஏலம் விட்டதும், ஜனாதிபதி செயலகத்தின் ஆடம்பரப் பயன்பாடுகளைக் குறைப்பதாகச் செய்திகளைப் பரப்பியதும் இதன் ஒரு அங்கமே. மக்களின் பொக்கெட்டுகளைப் பிழியும் “வரிச்சுமை” என்ற நெருக்கடியை மறைக்க, “சொகுசு வாகனப் பறிமுதல்” எனும் தற்காலிக பெரிய கோடு வரையப்பட்டது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய அறிக்கைகளின் தகவல்கள் வெளியாகி அரசாங்கத்திற்கு அரசியல்நெருக்கடிகளை உருவாக்கியபோது, அரசாங்கம் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயலவில்லை. மாறாக, ‘புதிய விசாரணைக் குழுக்கள்’ அமைப்பதாக அறிவித்து நேரத்தைக் கடத்தும் உத்தியைக் கையாண்டது. ஒரு பிரச்சினைக்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டைத் தள்ளிவைத்துவிட்டு, “புதிய விசாரணை” என்ற புதிய நம்பிக்கைக் கோட்டை வரைந்து பழைய கேள்விகளைச் சட்டென்று காலாவதியாக்கியது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம், அரசாங்கம் ‘இரு கோட்டுத் தத்துவத்தை’ எந்தளவிற்குத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது . 2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது, லண்டனில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரச நிதியான சுமார் 16.9 மில்லியன் ரூபாவைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை வரலாற்றிலேயே முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்ற வகையில், இது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.
எனினும், இக்கைது நடவடிக்கையின் பின்னணியிலும் ஒரு தெளிவான திசைதிருப்பல் அரசியல் ஒளிந்திருந்தது . சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் எழுந்த பொருளாதாரக் கட்டுப்பாடுகள், வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வால் மக்களிடையே உருவாகிய அதிருப்தி அலையை மறைக்க அரசாங்கத்திற்கு ஒரு ‘ பெரும் அரசியல் பரபரப்பு’ தேவையாக இருந்தது.அதுதான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடிக்கைது.
அநுரகுமார அரசாங்கம் எதிர் பார்த்துபோலவே நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் கைது, ஊடகங்கள் மற்றும் மக்களின் முழுக் கவனத்தையும் ஒரே நாளில் திசை திருப்பியது. “நாங்கள் சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துகிறோம்” என்ற பிரம்மாண்டமான பிம்பத்தை உருவாக்கி, தங்களின் தற்போதைய ஆட்சி நிர்வாகத் தோல்விகளையும், பொருளாதாரச் சிரமங்களையும் மக்களின் நினைவிலிருந்து தற்காலிகமாக அகற்ற அநுர அரசாங்கம் கையாண்ட மிக பெரிய ‘இரு கோட்டு’ அரசியல் தந்திரமாக ரணிலின் கைது இருந்தது .
தற்போதைய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் கைதும் ‘இரு கோட்டுதத்துவ ’ அரசியல் காய்நகர்த்தலும் அரசாங்கத்தின் இந்த ‘இரு கோட்டுத் தத்துவத்திற்கு’ மிக சமீபத்திய சான்றாக உள்ளது. அரசாங்கத்தின் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகளையும் பகிரங்கமாக வெளிப்பட்ட மக்களின் எதிர்ப்புகளையும் ஊடகங்களின் விமர்சனங்களையும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களையும் அடக்கவும் ஒடுக்கவும் திசைதிருப்பவுமே நாமல் ராஜபக்ச கைது என்ற பெரிய கோடு அநுரகுமார அரசாங்கத்தினால் வரையப்பட்டது.
அநுரகுமார அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமானது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதாகவும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்பதாகவும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. நீதித்துறை சுயாதீனம் மீதான சர்ச்சை: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு உள்ளிட்ட அம்சங்கள் நீதித்துறையின் நடுநிலைமையை அச்சுறுத்துவதாக சர்வதேச அமைப்புகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்பன எச்சரித்தன.தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட “அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்பு” வாக்குறுதிகளுக்கு மாறாக, மத்திய அரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகின் றது.இத்தகைய சூழலில், பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளத் தொடங்கிய நிலையும், சிவில் அமைப்புகள் வீதிக்கு வந்து போராடும் சூழலும் உருவானது.
அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, ஒரு அரசாங்கம் ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களுக்கும் அரசியலமைப்புச் சார்ந்த நெருக்கடிகளுக்கும் உள்ளாகும்போது, பொதுமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் “உயர்வகை அரசியல் கைதுகளை” கையில் எடுப்பது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரு உத்தியாகும்.அந்தவகையிலேயே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்முதல் தொடர்பான பழைய லஞ்ச ஊழல் வழக்கைக் கையில் எடுத்து, அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.குறிப்பாக, அரசாங்கத்திற்கு எதிராக கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நாமல் ராஜபக்சவின் பொதுஜன பெருமுன கட்சியினர் அநுராதபுரத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த பிரம்மாண்டமான போராட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பாக இக்கைது இடம்பெற்றது. “அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்விகளுக்கு எதிராக மக்கள் திரளுவதைத் தடுக்கவே, என்னைக் கைது செய்யப் பார்க்கிறார்கள்” என்று நாமல் ராஜபக்ச கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்பேகூறியிருந்தார். இந்தக் கைதின் ‘கால நேரம்’ அரசாங்கத்தின் அரசியல் காய்நகர்த்தலைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்களே காரணம் என்ற எண்ணம் மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ள நிலையில் , நாமல் ராஜபக்சவின் கைதானது, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த விவாதங்களை மக்களின் நினைவிலிருந்து உடனடியாக அகற்றி, “ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை” என்ற தலைப்புச் செய்திக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்தும் பேரணிகள் மற்றும் அரசியல் எழுச்சிகளை எதிர்கொள்ளும் போது, ராஜபக்ச குடும்பத்தின் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் அரசியல் செல்வாக்கைக் கட்டுப்படுத்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்கவிருந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான நாமல் ராஜபக்சவைக் கைது செய்து சட்டச் சிக்கலுக்குள் தள்ளியதன் மூலம், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பின் வேகத்தைக் அநுரகுமார அரசாங்கம் குறைக்க முயற்சிக்கின்றது. இதன் ஒரு நடவடிக்கையான நாமலின் கைதானது பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் அரசியல் தளத்தைச் பலவீனப்படுத்தி, அவர்களைத் தற்காப்பு அரசியலுக்குத் தள்ளியுள்ளது
இவ்வாறான ஒரு அரசியல் அழுத்தத்தை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்துவிட்டும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான மக்களின் கவனத்தை திசை திருப்பி விட்டும் 24ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் காலை 11.30 மணி முதல் இரவு 7 மணிவரை22 ஆவது அரசியலமைப்புத் ருத்தச் சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்)சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை அநுரகுமார அரசாங்கம் நடத்துகின்றது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான எதிர்க்கட்சிகள், மக்களின் எதிர்ப்பலைகளை திசைதிருப்ப நாமல் ராஜபக்ச கைது என்ற இன்னொரு பெரிய கோட்டை வரைந்த அநுரகுமார அரசாங்கம் அதன் விளைவாக அநுராதபுரம் கூட்டத்தில் மேடையேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அவருக்காகவும் நாமல் ராஜபக்சவுக்காகவும் திரண்ட மக்கள் அலையையும் பார்த்து அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் தான் தற்போது உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் 15 பேருக்கு 200-260 வருட சிறைத்தண்டனை என்ற இன்னொரு பெரிய கோடு வரையப்பட்டு 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் நாமல் ராஜபக்ச கைதும் எதிர்கட்சிகளிடமும் மக்களிடமும் ஏற்படுத்தியிருந்த எதிர்ப்பலை மறக்கடிக்கப்பட்டு ”200-260 வருட சிறை ”என்ற விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பு மேலெழ வைக்கப்பட்டு அதன் பரபரப்புக்குள் மக்கள் அலட்டிக் கொள்ளாதவகையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதுடன் நாமல் ராஜபக்சவின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அநுரகுமார அரசாங்கத்தின் இந்த ‘இரு கோட்டுத் தத்துவம்’ அரசாங்கத்தின் பலத்தைக் காட்டவில்லை. மாறாக அது எதிர்க்கட்சிகளின், அமைப்புக்களின், மக்களின் எதிர்ப்புக்களுக்கு, விமர்சனங்களுக்கு கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அவர்களின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.