‘ஊழல்,மோசடிக் கறைகள் படியாதவர்களைக் கொண்ட, அதிக” கலாநிதிகள் ,கல்விமான்”களைக் கொண்ட அரசாங்கம் எனப் பெருமை பேசப்பட்ட நிலையில் அதற்குள் சில கறுப்பு ஆடுகள் இருப்பதும் ”கலாநிதி’’களும் ,”கல்விமான்”களும் வினைகளாகவும் வில்லங்கங்களாகவும் மாறி வருகின்றமையும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடிகளை,அவப் பெயர்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது”அநுரகுமார அரசாங்கத்தின் கடந்த ஒன்றரை வருட ஆட்சியில் இரு முக்கியஸ்தர்களின் பதவியை பறித்த , அரசுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் கீழே பார்ப்போம்,—
கே.பாலா
எமது கரங்கள் ஊழல்,மோசடிக் கறைகள் படியாதவை.நாம் பரிசுத்தமானவர்கள்.எமது உறுப்பினர்கள் பத்தரைமாற்று தங்கங்கள் எனப் பெருமை பேசி ஆட்சியில் அமர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழல்,மோசடிப் பேர்வழிகளும் ,தங்கங்கள் என்ற போலி முகங்களுடன் தகரங்களும் இருப்பது கடந்த ஒன்றரை வருட ஆட்சிக்குள் வெளிப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலரின் போலி முகத்திரைகளும் கிழிபடும் சூழல் இருப்பதால் இலங்கையின் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நேரடி வாக்குகள் மூலம் 141 ஆசனங்கள்,தேசியப்பட்டியல் மூலம் 18 ஆசனங்கள் என 159 ஆசனங்களைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்ததுடன் அதிக ” கலாநிதி ”களை,”கல்விமான்”களைக் கொண்ட அரசு எனவும் பெருமை பேசப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அந்த ”கலாநிதி’’களே ,”கல்விமான்”களேவினைகளாகவும் வில்லங்கங்களாகவும் மாறிவருகின்றனர்.
போலி ”கலாநிதி”பட்ட மோசடி சர்ச்சையில் சிக்கி அநுரகுமார அரசாங்கத்தின் முதல் சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோகா சபுமல் ரன்வல சபாநாயகராக பதவியேற்று 22 நாட்களுக்குள்ளேயே தனது சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டி ஏற்பட்டது.அடுத்தவர் வலு சக்தி அமைச்சராக இதுவரை பதவி வகித்துவந்த பொறியியலாளரான குமார ஜயக்கொடி.இவர் தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல்.மோசடியில் ஈடுபட்ட குற்றசாட்டு சுமத்தப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதிவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளார். இந்த இராஜிநாமாக்கள் ”ஒழுக்க சீலர்’களைக்கொண்ட அரசாங்கம் என மார்தட்டிய அநுரகுமார அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாகவே அமைந்துள்ளடன் அநுரகுமார அரசின் முகத்தில் கரி பூசியுள்ளது. .
அது மட்டுமல்ல மைத்திரி-ரணில் நல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடியை பாரிய பிரசாரமாக்கி ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்களின் வாக்குகளை தமது பக்கம் திருப்பிய அநுரகுமார அரசாங்கமும் தற்போது நாட்டின் திறைசேரியிலிருந்து 25 இலட்சம் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவத்தில் சிக்குண்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அநுரகுமார அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியையும் அவப் பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.
அநுரகுமார அரசாங்கத்தின் கடந்த ஒன்றரை வருட ஆட்சியில் இரு முக்கியஸ்தர்களின் பதவியை பறித்த , அரசுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் பார்ப்போம்,
அநுரகுமார அரசாங்கத்தின் சபாநாயகராகவிருந்த அசோக சபுமல் ரன்வல பாராளுமன்ற அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் ஜே.வி.பி.யில் அவர் ஒரு ஆரம்பகால உறுப்பினர். கடந்த அரசுகளின் ஆட்சியின்போது பெற்றோலிய கூட்டுத்தாபன பொதுத் தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர். கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தேசியமக்கள் சக்தியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் பாராளுமன்றத்தின் சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார்.பெற்றோலிய தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த போதும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோதும் தனது பெயருக்கு முன்பாக ”கலாநிதி”என்ற பட்டப்பெயரை அசோகா சபுமல் ரன்வல பயன்படுத்தி வந்தார்.
இவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப் புத்தகத்தில் ‘ சபாநாயகர் அவரது கலாநிதி பட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்’ என்று பதிவேற்றம் செய்து சபாநாயகரின் ”கலாநிதி”பட்டம் தொடர்பான கலகத்தை தொடக்கி வைத்தார். ஆனால் மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்கு தான் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என அசோக சபுமல் ரன்வல முதலில் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் பாராளுமன்ற இணையத் தளத்திலிருந்து ”கலாநிதி”ப் பட்டம் நீக்கப்பட்டது அமைச்சரவை பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ ”கலாநிதி”சர்ச்சை தொடர்பில் சபாநாயகர் விளக்கமளிப்பார் என்று கூறினார்.ஆனால் சபாநாயகரோ அவர் பிரதிநித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியோ எந்தவிளக்கத்தையும் வழங்காத நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஏனைய அமைச்சர்கள்,எம்.பி.க்களின் பட்டங்கள் தொடர்பிலும் சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன.
அதுமட்டுமன்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தன .அத்துடன் தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்தது.இவ்வாறு நிலைமை கை மீறிப்போவதை உணர்ந்து கொண்ட தேசிய மக்கள் சக்தி சபாநாயகரை பதவி விலகுமாறு கூறியது தமது அரசாங்கத்தில் எவர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்த நிலையிலேயே சபாநாயகர் அசோக்க ரன்வல பதவியேற்ற 22 நாளிலேயே விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்தார்.
அந்த அறிக்கையில் ”எனது கல்வி தகைமை குறித்து சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கல்வித் தகைமை குறித்து எவ்விதமான பொய்யான தகவல்களையும் நான் வழங்கவில்லை.கல்வி தகைமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒருசில ஆவணங்கள் தற்சமயம் என்னிடம் இல்லை.அந்த ஆவணங்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும் அவற்றை விரைவாக பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.எனக்கு கலாநிதி பட்டத்தை வழங்கிய ஜப்பானின் வஷிடா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஆராய்ச்சி நிறுவனம் கலாநிதி பட்டத்துக்குரிய ஆவணங்களை வெகுவிரைவில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அவற்றை வெகுவிரைவில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.ஆனால் அவர் அவ்வாறு தெரிவித்து இன்று ஒண்றரை வருடமாகின்றபோதும் அவர் தனது ‘கலாநிதிப்பட்டம் உண்மையானது என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
இந்த அவப்பெயரிலிருந்து அநுரகுமார அரசாங்கம் வெளிவரமுடியாமலிருக்கும் நிலையில்தான் வலுசக்தி அமைச்சராகவிருக்கும் குமார ஜயக்கொடி தரமற்ற நிலக்கரி இறக்குமதி மோசடியில் சிக்குண்டார். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்த போது அதனை அடியோடு நிராகரித்த அநுராககுமார அரசாங்கம் அக்குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுத்தது. இவ்வாறான நிலையில் ”நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளது”என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது.இது அநுரகுமார அரசாங்கத்தை தடுமாறவைத்ததுடன் தர்மசங்கடத்துக்கும் உள்ளாக்கியது. இதனால் விசாரணைகளை தொடர வலுசக்தி அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை பதவியை இராஜிநாமா செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அரசாங்கம் அவரை பாதுகாப்பதில் தீவிரமாக இருந்தது.
இந்நிலையில் நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரி கொள்வனவை உறுதிப்படுத்துவதில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தமது அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளார் .அதுமட்டுமன்றி தற்போதைய வலுச்சக்தி அமைச்சர் இலங்கை உரக் கம்பனியின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய போது ஊழல் செயல்பாடு ஒன்றை மேற்கொண்டதற்காக அவருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் முறையான குற்றப்பகர்வுப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளது. அரச நிதி இழப்பு, தேசிய வலு சக்தி பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்துதல், ஊழல் முறையில் கொள்வனவு செயல்முறையை கையாளுதல், ஊழல் தவறு என்பவற்றை வலுசக்தி அமைச்சர் செய்துள்ளார்.எனவே அவர் வலு சக்தி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் ‘என எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தது.
ஆனால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 104 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் தோற்கடித்தது .இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இது நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் திடீரென வலுசக்தி அமைச்சர் தனது அமைச்சர் பதவியினை இராஜிநாமா செய்தார்.விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாதென்பதற்காகவே இராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார். அமைச்சு செயலாளரும் இராஜிநாமா செய்தார்.
இவ்வாறாக ஊழல்,மோசடிக் கறைகள் படியாத கரங்களைக் கொண்டவர்களென , பரிசுத்தமானவர்களென ,பத்தரைமாற்று தங்கங்களென பெருமைபேசிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இரு கறுப்பு ஆடுகள் அம்பலமாகி பதவிகளை இராஜிநாமா செய்துள்ள நிலையில் இன்னும் சில கறுப்பு ஆடுகளும் விரைவில் அம்பலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சபாநாயகர்,வலுசக்தி அமைச்சர் ஆகியோர் மீது எதிர்க்கட்சிகள் முனவைத்த குற்றச் சாட்டுகள் பொய்த்துப்போகாத காரணத்தினாலேயே அவர்களை இராஜிநாமா செய்ய வைக்க வேண்டிய நெருக்கடி அநுரகுமார அரசுக்கு ஏற்பட்டது.
இது போதாதென்று வெளிநாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணையை திரும்பச் செலுத்தும் நடவடிக்கையின் போது, தற்போதைய அரசாங்கம் தெளிவான உறுதிப்படுத்தல்களைச் செய்யாமல் அதனை மேற்கொண்டமையினால், நாட்டின் திறைசேரியின் நிதியிலிருந்து 25 இலட்சம் அமெரிக்க டொலர் காணாமல் போயுள்ளது . இந்த 25 இலட்சம் அமெரிக்க டொலரை ஒரு கணினி ஹேக்கர் போலியான தகவல்களை வழங்கி கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்மூலம் தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சுக்கும், திறைசேரிக்கும், மத்திய வங்கிக்கும் நாட்டின் நிதி முகாமைத்துவச் செயல்முறையை சரியாக கொண்டு நடத்தும் இயலுமை இல்லை .நமது நாட்டின் டொலர் பணத்தை ஹேக்கர்களால் போலி தகவல்கள் மற்றும் போலி உறுதிப்படுத்தல்களை முன்வைத்து கையகப்படுத்த முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தால், நாட்டின் ஒட்டுமொத்த நிதி பாதுகாப்பே ஆபத்தில் உள்ளது . இந்த நிதிக் கட்டமைப்பு முறைமையின் பலவீனத்தால் மற்றுமொரு தேசிய பாதுகாப்பு சார் பிரச்சினை இன்று நாட்டில் உருவாகியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறுப்புக்கூறல் வழிமுறையும் விசாரணையும் அவசியம். இந்த விடயத்தில் உண்மையைத் தேட வேண்டும்.உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டின் திறைசேரியிலிருந்து இந்த பணம் எவ்வாறு திருடப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இந்த பணம் அனுப்புவதற்கு முன்பு சரியான உறுதிப்படுத்தல்கள் செய்யப்படாதது ஏன் என்ற பாரதூரமான பிரச்சினை உள்ளது.இதிலிருந்து யாராலும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. திருடனின் தாயிடமே திருடிய பொருளைப் பற்றிக் கேட்பது போன்ற வேலைகளை இதிலும் செய்யாது, பக்கசார்பில்லாத சுயாதீன விசாரணையொன்றின் மூலம் இந்த மோசடி சம்பவத்தை ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த விடயம் அநுரகுமார அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தப்போகின்றது.
ஏற்கனவே சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி ,துறைமுகங்கள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க , துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 323 சிவப்பு முத்திரை கொள்கலன்களை விடுவித்த குற்றச்சாட்டில் சிக்கிய நிலையில் அவர் கட்சியிலும் அரசாங்கத்திலும் மிகவும் பலம் பொருந்தியவராக இருந்ததால் அவரிடமிருந்து துறைமுகங்கள் அமைச்சு மட்டும் நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த அளவுக்கதிகமாக சொத்துக் குவித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.இவருக்கு எதிராகவே அடுத்த அஸ்திரத்தை எதிர்க்கட்சிகள் எடுக்கவுள்ளன. இவ்வாறான நிலையில் திறைசேரியிலிருந்து 25 இலட்சம் அமெரிக்க டொலர்கள் திருட்டுப் போயுள்ளது. எனவே அநுரகுமார அரசாங்கத்தில் அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.