அமெரிக்காவுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் புதிய ஆயுதம் கொண்டு தாக்குவோம் – ஈரான் எச்சரிக்கை

Share

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போரால், கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டு, உலக நாடுகள் பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் போர் நிறுத்தம் எதிரொலியாக, பதற்றம் சற்று தணிந்தது. அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிக்கப்படுகிறது என டிரம்ப் கூறினார். எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு ஈடாக அமெரிக்காவின் முற்றுகை வாபஸ் பெறப்பட வேண்டும் என ஈரான் முன்மொழிந்துள்ளது. எனினும், இதனை அமெரிக்க அரசு நிராகரித்து உள்ளது. இந்த நிலையில், ஈரானின் கடற்படை தளபதியான ஷாராம் இரானி கூறும்போது, இஸ்லாமிய குடியரசான ஈரான், அதிக அச்சம் உண்டாக்குகிற ஆயுதம் ஒன்றை கொண்டு, மிக விரைவில் எதிரி படைகளை எதிர்கொள்வோம் என்று கூறினார். அந்த ஆயுதம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்று நான் நம்புகிறேன் என்றார். ஈரானின் எண்ணெய் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கி பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, ஈரானை கட்டாயப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்து விடலாம் என்று டிரம்ப் நிர்வாகம் திட்டமிடுகிறது. ஈரானுக்கு எதிரான முன்னறிவிக்கப்படாத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ள அமெரிக்கா தன்னுடைய நடவடிக்கைகளில் வெற்றி பெற்று விடலாம் என தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். அரபிக்கடலில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்திக்கான பகுதியை ஈரான் மூடியுள்ளது. இந்த சூழலில், அமெரிக்கா எங்களை நெருங்கினால், சற்றும் தாமதிக்காமல் நாங்கள் அதிரடி நடவடிக்கையை எடுப்போம் என்றும் அவர் அதிரடி காட்டியுள்ளார். எங்களுடைய துறைமுகங்களில் இருந்து சில கப்பல்கள் புறப்பட்டு சென்றுள்ளன. சில திரும்பி வந்தடைந்து உள்ளன என கூறிய அவர், அமெரிக்காவின் முற்றுகையின் ஒரு பகுதியாக சில ஈரான் கப்பல்கள் சிறை பிடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த விசயத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களை விட அமெரிக்கர்கள் மிக மோசம். ஏனெனில் வறுமையால், சோமாலிய கடற்கொள்ளையர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அமெரிக்கர்களோ, ஈரான் கப்பல் ஊழியர்களை சிறை பிடித்து வைத்து கொண்டு அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>