”தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.15 வீதமாக அதிகரித்திருப்பது இலங்கை அரசியலில் நடந்த மாற்றம் தமிழக அரசியலிலும் நடக்கலாம், தமிழகத்தில் புதிய ஆட்சி மலரலாம் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டுள்ளது.நடிகர் விஜய் ஒரு அரசியல் புயல்தான். அந்த புயல், யாரை சாய்த்தது, அது கரை சேர்ந்ததா அல்லது மையம் கொண்டு விட்டு வலுவிழந்ததா என்பதுதான் இந்தத் தேர்தலின் முக்கிய கேள்வி”. அதேபோன்று 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி,ஜே .வி.பி.க்கு 4,45,958 வாக்குகளை மட்டுமே வழங்கி 3 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்த மக்கள்தான் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 68,63,186 வாக்குகளை வாரி வழங்கி 159 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தனர். எனவே தான் இலங்கை அரசியலில் நடந்த அதிசயம், மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் தமிழக அரசியலிலும் நடக்குமா மக்கள் மனதிலும் ஏற்படுமா,நடிகர் விஜய் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
—கே.பாலா
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு கடந்த 23 ஆம் திகதி நடந்து முடிந்து விட்ட நிலையில் இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட மக்கள் ”புரட்சி” போல்,மக்கள் மனதில் ஏற்பட்ட ”மாற்றம்” போல் மக்களும் நாடும் புதிய திசையில் பயணிக்க விரும்பியது போல் ஒரு புரட்சி, மாற்றம் தமிழக அரசியலிலும் ஏற்படுமா என்ற கேள்விக்கு விடையறிய தமிழகம் மட்டுமன்றி தமிழர் வாழும் தேசங்கள் எல்லாம் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக எதிர்வரும் மே 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரை காத்திருக்கின்றன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.15 வீதமாக அதிகரித்திருப்பதே இலங்கை அரசியலில் நடந்த மாற்றம் தமிழக அரசியலிலும் நடக்கலாம், தமிழகத்தில் புதிய ஆட்சி மலரலாம் என்ற எதிர்பார்ப்புகளையும் ஊகங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பது. ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என அ .தி.மு.க. மற்றும் த.வெ.க கட்சிகளும் தற்போதுள்ள ஆட்சியே மீண்டும் வேண்டும் என்பதனை உறுதிப்படுத்துவதற்காகவே மக்கள் வாக்களிப்பு அதிகரித்திருப்பதாக தி.மு.க.வும் கூறி வருகின்றன .இதுதொடர்பில் ஊடகங்களிலும், சமூகவலைத் தளங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் வாக்களிப்பிற்கு பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ற வகையில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு முடிவுகளும் எதிரும் புதிருமாகவே அதாவது சில முடிவுகள் தி.மு.க. ஆட்சி அமைக்கும் எனவும் சில முடிவுகள் அ .தி.மு.க.ஆட்சியமைக்கும் எனவும் இன்னும் சில முடிவுகள் த .வெ .க. ஆட்சியமைக்கும் எனவும் வெளியிடப்பட்டு மக்களை இன்னும் குழப்பி விட்டுள்ளன.
தற்போதைய அரசியல் சூழலில் ஒரு நாள் நீதிபதிகளான மக்களின் மன நிலையைப் பொறுத்தவரையில் எதனையும் உறுதியாக கூறிவிட முடியாது.இதற்கு இலங்கையில் இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தல் , பாராளுமன்றத் தேர்தலை உதாரணமாகக் கூற முடியும். 2019 நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 4,18,553 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி,ஜே .வி.பி.ஆகியவற்றின் தலைவரான அநுரகுமார திசாநாயக்காவுக்கு 2024 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் 56,34,915 வாக்குகளை வழங்கி ஜனாதிபதியாக்கினர்.
அதேபோன்று 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி,ஜே .வி.பி.க்கு 4,45,958 வாக்குகளை மட்டுமே வழங்கி 3 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்த மக்கள்தான் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 68,63,186 வாக்குகளை வாரி வழங்கி 159 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தனர். எனவே தான் இலங்கை அரசியலில் நடந்த அதிசயம், மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம் தமிழக அரசியலிலும் நடக்குமா மக்கள் மனதிலும் ஏற்படுமா,நடிகர் விஜய் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
எனவே தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் 85.15 வீதமாக அதிகரித்திருப்பது ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா,அல்லது கடந்த ஆட்சியை தொடர வழிசமைக்குமா?அதிகரித்த வாக்கு வீதம் யாருக்கு சாதமானது,யாருக்கு பாதகமானது என்பது தொடர்பில் பார்ப்போம்,
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 73.63 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,கடந்த 23 ஆம் திகதி நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் 85.15 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. முந்தைய தேர்தலைவிட இது 12 சதவிகிதம் அதிகம். தமிழகத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் (எஸ்.ஐ.ஆர்-SIR), 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதில், 66.44 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள். 26.9 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள். 3.98 லட்சம் பேர் இரட்டைப் பதிவுகொண்டிருந்தவர்கள். பின்னர், முதல் தலைமுறை வாக்காளர்கள் 14 லட்சம் பேர் உட்பட 27 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இவை, இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் தரவுகள்.
பொதுவாக, வாக்காளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் சற்று அதிகரிக்கும். இந்த முறை 27 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். முதல் முறை வாக்களிப்பவர்கள் 14 லட்சம் பேர். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்தப் பின்னணியில், அதிகரித்திருக்கும் வாக்களிப்பு வீதமானது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருமா என்பதே இன்றுள்ள முதன்மைக்கேள்வி .
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிப்புக்கு இளைஞர்கள் அதிகமாக வந்து வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு காரணம் அதற்கு, விஜய் தாக்கம் என்று ஒரு சாரார் காரணம் கூறுகின்றார்கள் . அது உண்மையாகவும் இருக்கலாம். அதே நேரம், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க.வும்.பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க வும் தங்கள் ஆதரவு வாக்காளர்களை வாக்களிக்க வைத்துவிட வேண்டுமென்று அதிகளவில் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இது இரண்டாவது காரணம்.
விஜய் வரவால் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது மட்டுமே வாக்கு சதவிகிதம் அதிகரித்ததற்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் இந்தத் தேர்தல், அ.தி.மு.க-வுக்கு ஒரு வாழ்வா சாவா போராட்ட தேர்தல். அ.தி.மு.க தோற்றுவிட்டால், இது அந்தக் கட்சிக்கு ஒரு பேரழிவாக இருக்கும். தி.மு.க-வைப் பொறுத்தளவில், எப்படியும் ஆட்சியைத் தக்கவைத்துவிட வேண்டும் என்ற அழுத்தத்தில் அது இருக்கிறது. த.வெ.க-வுக்கு வாக்களித்தவர்கள் தாங்களாக வந்து வாக்களித்திருக்கிறார்கள்
2001 சட்டமன்றத் தேர்தலிலிருந்து சில தரவுகளைப் பார்த்தால் ஒரு முடிவுக்கு வர முடியும். 2001இ ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.75 கோடி. அவர்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 2.81 கோடி (59.1 சதவிகிதம்). 2006இ ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.70 கோடி. அவர்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 3.33 கோடி (70.8 சதவிகிதம் 2011இ ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.60 கோடி. அவர்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 3.60 கோடி (78.2 சதவிகிதம்). 2016இ ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி. அவர்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4.26 கோடி (73.6 சதவிகிதம்). 2021இ ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.29 கோடி. அவர்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 4.63 கோடி (73.63 சதவிகிதம்).
இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், வாக்காளர்கள் எண்ணிக்கை பெரியளவுக்கு அதிகரிக்கவில்லை என்பது புரியும். 2001 தேர்தலை விடவும் , 2006 தேர்தலில் சுமார் 48 லட்சம் அதிகம். 2011 தேர்தலில் 40 லட்சம் அதிகரித்தது. 2016 தேர்தலில் 64 லட்சம் அதிகரித்தது. 2021 தேர்தலில் 28 லட்சம்தான் அதிகரித்தது. காரணம், கொரோனா தொற்று பாதிப்பு இருந்த நேரம் அது. 2021-ஐவிட இப்போது 40 லட்சம் அதிகரித்துள்ளது.அவ்வளவுதான். 40 லட்சம் அதிகரித்தது பெரிய விஷயம் இல்லை இது ஓர் இயல்பான அதிகரிப்புத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எஸ்.ஐ.ஆரில் (SIR), 90 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது, வாக்கு சதவிகிதத்தைப் பார்த்து நாம் அசந்துவிடக் கூடாது. எத்தனை வாக்குகள் அதிகரித்திருக்கின்றன என்ற எண்ணைத்தான் பார்க்க வேண்டும். விஜய் வந்த காரணத்தால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவில்லை. அப்படிப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் இதைவிட அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது வாக்குப்பதிவு அதிகரித்தால், அது ஆட்சியாளர்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலில், ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்குகள் மூன்றாகப் பிரிகின்றன. அப்படியென்றால், அது தி.மு.க-வுக்கு லாபம்தான் என்ற கணக்கை ஒதுக்கிவிட முடியாது. இந்தத் தேர்தலைப் பொறுத்தளவில், எதிர்ப்பு அலை, ஆதரவு அலை என்று எதுவும் இல்லை என்பதுதான் கள யதார்த்தமாகவுள்ளது .
ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான வாக்கு சதவிகிதம் இந்த முறை பதிவாகியிருப்பதை தங்களுக்குச் சாதகமான அம்சமாக நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தினர். தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து வாக்களித்திருக்கின்றனர். பொதுவாகவே வாக்கு சதவிகிதம் அதிகரித்தால், அது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைக் காட்டுவதாகவே அர்த்தம். அந்த வகையில் தி.மு.க அரசின் மீதிருந்த அதிருப்தியில்தான் மக்கள் இப்படி அலை அலையாக வந்து வாக்களித்திருக்கின்றனர்
எல்லாத் தேர்தல்களிலும் எல்லாத் தலைவர்களுமே மக்களை 100வீதம் வாக்களிக்கச் சொல்லி அறிவுறுத்துவார்கள். அப்போதெல்லாம் அதிகரிக்காத வாக்கு சதவிகிதம், ‘வாக்களிக்கத் திரண்டு வாருங்கள்’ என எங்கள் தலைவர் கூறியவுடன் அதிகரிக்கிறது எனில், அதற்கு என்ன காரணம்… மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதற்கான அறிகுறிதான் இது. Gen Z-களின் வாக்குகள் எங்களுக்கு பலம்தான். ஆனால், அவர்களின் வாக்குகளை மட்டுமே நாங்கள் நம்பவில்லை. எங்களுக்கு எல்லாத் தரப்பின் ஆதரவும் இருந்தது என அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே,“வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதற்கு விஜய் மட்டுமே முக்கிய காரணமென நினைத்தால் மே 4ஆம் திகதி த.வெ.க-வினர் பெரும் ஏமாற்றத்தையே சந்திப்பர். எஸ்.ஐ.ஆருக்கு (SIR) பிறகு தேர்தல் நடக்கும் மாநிலங்கள் எல்லாவற்றிலும் வாக்கு சதவிகிதம் முன்பைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. பீகார், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என எல்லா மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆக, தமிழகத்தில் ஒரு கட்சியால் மட்டுமே வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்பது அபத்தம்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
முன்பெல்லாம் தேர்தல் பிரசாரத்தின் போதே யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெரிந்துவிடும். உதாரணமாக, முதலமைச்சர் வேட்பாளராக ஜெயலலிதா செல்லும் இடங்களில் கறுப்புக்கொடி காட்டுவார்கள். அதேபோல, முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதி பிரசாரம் செல்லும் இடங்களில் பகிரங்கமாக எதிர்ப்புகள் வெளிப்படும். அதை வைத்து, யார் பக்கம் அலை வீசுகிறது என்பதை உணர முடியும். ஆனால், இந்த முறை யாருக்கு வாய்ப்பு என்பதை எளிதாக உணர முடியாத நிலைதான் இருக்கிறது.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் என செல்வாக்குமிக்க நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் களம் கண்ட சூழலில், விஜய்யின் த.வெ.க பிரிக்கும் வாக்குகளால் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கூறுவது கடினம்தான்
எனவே நடந்து முடிந்த தேர்தல் வாக்களிப்புகளின் அடிப்படையில் தமிழகத்தை ஆளப்போவது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகமா (தி.மு.க.), முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமா(அ .தி.மு.க.) அல்லது அடுத்த முதலமைச்சர் தானே எனக்கூறும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமா (த.வெ.க ) என்பது மே 4 ஆம் திகதி தெரிந்து விடும். நடிகர் விஜய் ஒரு அரசியல் புயல்தான். அந்த புயல், யாரை சாய்த்தது, அது கரை சேர்ந்ததா அல்லது மையம் கொண்டு விட்டு வலுவிழந்ததா என்பதுதான் இந்தத் தேர்தலின் முக்கிய கேள்வி. எனவே விஜய்யும் ஒரு அநுரகுமார திசாநாயக்கவா என்பதையும் அன்று தெரிந்து கொள்ள முடியும்.