இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை முதலில் ஏவி சிறையிலடைத்த, அநுரகுமார அரசாங்கம் அதன் தொடர்ச்சியாக தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் இளம் தமிழ் பாடகர் ஒருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளதுடன் .இன்னும் இரு தமிழ் பாடகர்களை பொலிஸ் நிலையத்திலும் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் விசாரணைக்குட்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அச்சுறுத்தும் வேலைகளையும் ஆரம்பித்துள்ளது.
——கே.பாலா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வர தமது சமூக கட்சிகளை புறக்கணித்து அண்ணளவாக சுமார் 10 இலட்சம் வாக்குகள் வரை வழங்கிய முஸ்லிம் மக்களுக்கும் அதேபோன்றே புதிய திசையில் பயணிக்கப்போகின்றோம் எனக்கூறி தமிழ் தேசிய தடம் மாறி தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அண்ணளவாக 7 இலட்சம் வாக்குகள் வரை வழங்கி தமது தமிழ் தேசியக் கட்சிகளைப் புறக்கணித்த தமிழ் மக்களுக்கும் எதிராக அநுரகுமார அரசாங்கம் பயங்கரவாத, அவசரகால சட்டங்களை கையிலெடுத்து தனது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை முதலில் ஏவி சிறையிலடைத்த, அநுரகுமார அரசாங்கம் அதன் தொடர்ச்சியாக தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் இளம் தமிழ் பாடகர் ஒருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளதுடன். இன்னும் இரு தமிழ் பாடகர்களை பொலிஸ் நிலையத்திலும் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் விசாரணைக்குட்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அச்சுறுத்தும் வேலைகளையும் ஆரம்பித்துள்ளது.
தென்னிலங்கையில் இருந்து சில இனவாத சமூக ஊடகங்கள் மூலம் கிளப்பப்பட்ட ”மனதில் விஷத்தை வாரி இறைக்கும் இசை நிகழ்ச்சி” என்று தலைப்பிட்டு புலனாய்வுப் பிரிவினரதும் பொலிஸாரினதும் கவனத்திற்கு என்ற பதிவுகளையடுத்தே இந்த வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தமிழ் பாடகர் மீது அநுரகுமார அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளது. இதில் உதய நகர் மேற்கு கிளிநொச்சியைச்சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் (வயது24) என்ற பாடகர் 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இலக்கம் 48 இன் பிரிவு 3(G) கீழ் 2026 ஜூன் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 84 வருட காலத்துக்கும் மேலாக நாட்டையும் 5 தசாப்த காலத்திற்கும் மேலாக தமிழ் மக்களையும் அடக்கியாண்டும் அச்சுறுத்தியும் அழித்தும் வரும் பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது அநுரகுமார அரசாங்கத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.1942 இலிருந்து தற்போது வரையான 84 வருட காலத்தில் அதிகமான காலம் தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினதும் பயங்கரவாத தடைச் சட்டத்தினதும் கீழ்தான் அடக்கியாளப்பட்டார்கள். அழிக்கப்பட்டார்கள்.இரட்டைப் பிசாசுகளான, இரட்டைக்குழல் துப்பாக்கிகளான அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதச் சட்டமும் ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதனை தமிழ் மக்களே அனுபவித்தனர். தற்போது மாற்றங்களுடன் புதிய திசையில் பயணிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சிபீடம் ஏறிய அநுரகுமார அரசாங்கத்திலும் எந்த வித மாற்றமுமின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமைகளை தமிழ் மக்கள் மீண்டும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்போதைய ஐக்கியதேசியக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை 1979 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆரம்பத்தில் இச்சட்டம் 3 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு அவசரகால தற்காலிக ஏற்பாடாகவே கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகள் தற்காலிக சட்டமாக இருந்த போதிலும், நாட்டில் நிலவிய அரசியல் மற்றும் இன முரண்பாடுகள் காரணமாக 1982 இல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் (Act No. 10 of 1982) இச்சட்டம் இலங்கையின் நிரந்தர சட்டப் புத்தகத்தில் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தச் சட்டம் மிகத் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் பாதுகாப்புப் படையினருக்கு மிகப்பரந்த அதிகாரங்களை வழங்கியது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் ஒரு சந்தேக நபரை மாதக்கணக்கில் தடுப்புக் காவலில் வைக்க முடியும். சாதாரண சட்டத்தின்படி பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது. ஆனால், இச்சட்டத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் (ASP) அல்லது அதற்கு மேல் பதவியிலுள்ள அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும் (இது சித்திரவதைகளுக்கு வழிவகுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது). இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை கிடைப்பது மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. பலர் பல வருடங்கள் விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.தற்போதும் பல தமிழர்கள் சிறைகளில் வாடுகின்றனர் .
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னரும் இச்சட்டம் நீக்கப்படவில்லை. 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பிறகும், 2022 இல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் போதும் இச்சட்டம் அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் (GSP+ வரிச்சலுகை நிபந்தனைகள் மூலம்) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என இலங்கைக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்தன
இவ்வாறான சர்வதேச அழுத்தங்களின் விளைவாக, 2022 இல் ஒரு சிறிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தடுப்புக்காவல் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டதுடன், சந்தேக நபர்களுக்குச் சில அடிப்படை சட்ட உரிமைகளும் வழங்கப்பட்டன. எனினும், இந்த மாற்றங்கள் போதுமானதாக இல்லை என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன.
இந்நிலையில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு (PTA) பதிலாக மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவும் (Counter Terrorism Act – CTA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2023ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti – Terrorism Act -ATA) முன்வைக்கப்பட்டன. இந்த புதிய சட்டமூலத்திலும் “பயங்கரவாதம்” என்ற வார்த்தைக்கான வரையறை மிகப்பரந்ததாக இருப்பதாகவும், இது ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் சிவில் அமைப்புகள் மற்றும் உயர் நீதிமன்ற சவால்கள் மூலம் அச்சங்கள் வெளியிடப்பட்டு, அச் சட்டம் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன.
தற்போதைய ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்திருந் தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார். புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி வந்திருக்கும் அந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார்.
இந்நிலையில் இலங்கையின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அடக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” ((Protection of State from Terrorism Act – PSTA)) எனும் புதிய சட்ட மூலத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 2025 டிசம்பரில் தயார் செய்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள் கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட மூத்த புத்திஜீவிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இப்புதிய சட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஒடுக்குமுறையையே சட்ட பூர்வமாக்குகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பு புதிய சட்டமூலத்தில் பிரதான சிக்கல்களாக சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்களைக் கூட ‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்த வழிவகுக்கும். பழைய பிடிஏ சட்டத்தில் கைது செய்ய உயர் அதிகாரிகள் அனுமதி தேவைப்பட்டது. ஆனால் புதிய சட்டத்தில் பொலிஸார் மட்டுமன்றி, ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினருக்கும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைக்க இது வழிசெய்கிறது. ஜனாதிபதியினால் அமைப்புகளைத் தடை செய்யவும், அவசரகால சட்டத்தை அறிவிக்கவும், பாதுகாப்புச் செயலாளர் சில இடங்களை ‘தடைசெய்யப்பட்ட இடமாக’ அறிவிக்கவும் மேலுயர் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) நீக்க வேண்டும் என முன்னர் உறுதியாக இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது ஏன் அதற்கு நேரெதிரான சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பிய போது இதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், “முதலில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் இப்போதும் பாதுகாப்புத் தரப்பின் வசமே முழுமையான கட்டுப்பாடு இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது,” எனத் தெரிவித்திருந்தார். இதுதான் உண்மையும் கூட.
இவ்வாறான சூழலில் இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. அவ்வாறானதொரு சூழல் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட, இந்த சட்டத்திற்கு .ஆயிரக்கணக்கான தோழர்களை பறிகொடுத்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.- தேசியமக்கள் சக்தி இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உறுதி மொழியுடன் ஆட்சிபீடம் ஏறியபோதும் தற்போது தமிழ் மக்களுக்கு எதிராக அநுரகுமார அரசும் இந்தக் கொடிய சட்டத்தையே கையிலெடுத்து தமிழ் மக்களை அடக்கியாளத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தநிலையில், பின்னர் குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்டனர். மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) தொடர்ச்சியாக அழைக்கப்பட்டு, போராட்டங்களில் பங்கேற்றமை குறித்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இச்சட்டம் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துள்ளது இதில் ஒன்றாகவே விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய கணேஷ்குமார் சங்கீத்ஷன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் அநுரகுமார அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்றுஅதே சட்டத்தை மிக மோசமான முறையில் பயன்படுத்தி, தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த இரட்டை வேட அரசியலும் இனவாதத்தைக் கிளறிவிட்டு அர சியல் இலாபம் தேடும் தென்னிலங்கை சதித்திட்டங்களும் நாட்டை மீண்டும் ஓர் அபாயகரமான நிலைக்குத் தள்ளிச் செல்கின்றன .
தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு எதிரான ”மனதில் விஷத்தை வாரி இறைக்கும்” எத்தனையோ கருத்துக்களை, காணொலிகளை, நிகழ்ச்சிகளை வெளியிடும் சிங்கள சமூக ஊடகங்கள் தொடர்பில் தமிழ்,முஸ்லிம் மக்கள் சுட்டிக்காட்டினாலும், முறைப்பாடுகள் செய்தாலும் அநுரகுமார அரசாங்கமோ, பொலிஸாரோ, புலனாய்வுத் துறையோ கண்டுகொள்ளாத நிலையில் தென்னிலங்கையில் இருந்து சில இனவாத சமூக ஊடகங்கள் மூலம் கிளப்பப்பட்ட ”மனதில் விஷத்தை வாரி இறைக்கும் இசை நிகழ்ச்சி” என்று தலைப்பிட்டு புலனாய்வுப் பிரிவினரதும் பொலிஸாரினதும் கவனத்திற்கு என்ற பதிவுகளையடுத்து துள்ளிக்குதித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை கையிலெடுத்துள்ள அநுரகுமார அரசாங்கம் தொடர்பில் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ எதுவுமே இல்லை. ஏனெனில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே..வி.பி.யினரின் இரத்தத்தில் ”தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம்” கலந்துள்ளது. அதனை பிரித்தெடுக்க முடியாது. எனவே ”மாற்றம், புதிய திசைகாட்டி, தோழர்கள்” எனப் பிதற்றும் தமிழ், முஸ்லிம் இளைய தலைமுறையினர் ஜே .பி.பி.-தேசிய மக்கள் சக்தியினரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.