இழுவைமடி விவகாரத்தில் இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமாறு முதலமைச்சர் விஜயிடம் அகில இலங்கை மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை.

Share

“தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத்து மீனவர்களாகிய நாம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். அவர், எமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது.” – என்று அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் 11ம் திகதி வியாழன் அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் இழுவைமடித் தொழில்
இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தினை முன்னிட்டு 60 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழுவைமடி மீன்பிடித் தொழிலானது, எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பமாகவிருக்கின்றது. இந்தியாவில் இழுவைமடித் தடை நீங்குவது அந்த நாட்டு மீனவர்களுக்கு வசந்த காலமாக இருக்கலாம். ஆனால், அது எமக்குக் கடுமையான அழிவுக் காலமாகும்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையானது ஏறத்தாழ 23 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. எமது அரசிடமும் இந்தியத் தரப்பிடமும் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தும், இழுவைமடித் தொழிலை முழுமையாக நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் இரு நாட்டு அரசுகளும் எடுக்கவில்லை. இது தொடர்பில் பல பேச்சுகள் நடத்தப்பட்டு எட்டப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கும் இரு தரப்பும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னர் இருந்த தமிழக முதலமைச்சர்களை விடவும், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் எம் மீது அதிக கருணை கொண்டு எமது மீனவர் பிரச்சினையில் தலையிட்டு ஆக்கபூர்வமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான நேரடிப் பேச்சு ஒன்று இடம்பெற்று, இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பில் ஒரு இறுதியான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் இலங்கை அரசாங்கம் முனைப்பாகச் செயற்படவில்லை. நாடாளுமன்றத்தில் இழுவைமடித் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும், அது நடைமுறையில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கடாடிய போது, அந்த வழக்கைச் சட்டமா அதிபர் திணைக்களமும் அரசியல்வாதிகளும் இணைந்து திட்டமிட்டுப் பலவீனப்படுத்தி விட்டார்கள்.

ஊர்காவற்றுறையில் உள்ள இழுவைமடிப் படகுகள், காரைநகரில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் தங்களைப் பதிவு செய்துவிட்டே தொழிலுக்குச் செல்கின்றார்கள். இழுவைமடிப் படகுகள் கடலில் மீன்பிடிப்பதற்குக் கடற்படையே அனுமதி வழங்குகின்றது.

கடந்த மே தினக் கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்டுவதற்காகக் கடற்றொழில் அமைச்சினுடைய அலுவலக அதிகாரிகள், இழுவைமடித் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ‘உங்களுக்கான சட்டத்தை நீடித்து அதன் தன்மையைக் குறைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். எனவே எமது மே தினக் கூட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்’ எனக் கோரியதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் கடற்றொழில் அமைச்சரும் எமக்கு எதிராகவே செயற்படுகின்றார் என்பது புலனாகின்றது. இது எமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இனியாவது எமது அரசு இந்த இழுவைமடிப் படகுகள் விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, இலங்கை கடற்பரப்பில் இழுவைமடித் தொழிலை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘வாரத்தில் குறைந்தது இரண்டு இழுவைமடிப் படகுகளையாவது கைது செய்யுங்கள்’ என வலியுறுத்தி, அஞ்சல் அட்டைப் பிரசாரம் ஒன்றின் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.

எமக்கு வெகுவிரைவில் முறையானதொரு தீர்வு கிடைக்காவிடின், முல்லைத்தீவிலிருந்து நெடுந்தீவு வரை ஒட்டுமொத்த மீனவர்களையும் ஒன்றிணைத்துக் பாரிய கடல்வழிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>