இல்லத்தரசி கூப்பன் ரூ.8,000 யாருக்கு எல்லாம் கிடைக்கும்? – கனிமொழி எம்.பி. விளக்கம்

Share

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடந்த முறை சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை வழங்கியது. அதில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், காலை உணவு திட்டம், ‘வீடு தேடி மருத்துவம்’ போன்ற ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில், 37 வாக்குறுதிகள் ஒன்றிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மட்டுமே நிறைவேற்றப்படக்கூடியவை என்பதால், அவற்றை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. மீதமுள்ள 64 திட்டங்கள், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் எதிர்ப்பு மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் திராவிட முன்னேற்றக் கழகமும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நிறைவேற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், நான் குறிப்பிட்ட காலை உணவு திட்டம், ‘தமிழ் புதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளனர். அதோடு, ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’, ‘தாயுமானவர் மாணவர் திட்டம்’, ‘அன்புக் கரங்கள்’, மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்குதல், மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் முத்திரைத் தாளில் ஒரு சதவீதம் கட்டணக் குறைப்பு போன்ற பல திட்டங்களையும் கொண்டு வந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறாத பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை ஆவலோடு மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முதலமைச்சர், அந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டக்கூடிய அளவிற்கான ஒரு தேர்தல் அறிக்கையாக அந்தத் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. தேர்தல் அறிக்கை குழு பல மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், ஏஐ தளத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், அதுமட்டுமல்லாமல் மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகள் வழியாக பெறப்பட்ட தகவல்கள், கோரிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கிட்டத்தட்ட 80 ஆயிரம் கருத்துக்களை பெற்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து, இந்த தேர்தல் அறிக்கையில் வழங்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் என்ன என்பதையும் ஆய்வு செய்து இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படக்கூடியவையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களிடம் உறுதியாக பணித்திருந்தார். அதன்படி தயாரிக்கப்பட்டதே இந்த தேர்தல் அறிக்கை. பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. பதிலளித்தார். அதிமுகவின் வாக்குறுதிகளை காப்பி செய்ததாக கூறியிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு,

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் படிக்க நேரமோ வாய்ப்போ எங்களுக்குக் கிடைக்கவில்லை. யாரும் அதைப் படித்ததாகவும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. காரணம், அதில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல், அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்களையே மீண்டும் இடம்பெறச் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது எந்த திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன, இந்தத் திராவிட மாடல் அரசு எந்த திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் அறியாமல் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில், அந்தத் தேர்தல் அறிக்கையை காப்பி செய்ய வேண்டிய அவசியம் நிச்சயமாக கிடையாது. நாங்கள் நிறைவேற்றிய ஒரு திட்டமான மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்துவோம் என்று முதலமைச்சர் அறிவித்த பிறகு, அதிமுகவும் 2000 ரூபாய் வழங்குவோம் என்று கூறி ஒரு தேர்தல் அறிக்கையை எழுதிவிட்டு, தற்போது அதிமுக காப்பி பண்றாங்கன்னு சொல்லும்போது வேடிக்கையாதான் இருக்கிறது. ஒரு வாஷிங் மெஷின் வாங்கும்போது கையில் துவைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் குறையும். பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும்போதும் அவர்களது நேரம் சேமிக்கப்படும். அந்த நேரத்தில் அவர்கள் வேறு வேலைகளைச் செய்ய இயலும். இது இன்னொரு முதலீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கூப்பன் கொடுக்கும்போது ‘இந்தப் பொருட்களைத்தான் நீங்கள் வாங்க வேண்டும்’ என்ற கட்டாயம் இல்லை. எங்கள் வீட்டில் ஏற்கெனவே ஒரு பிரிட்ஜ் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நாம் மீண்டும் பிரிட்ஜ் கொடுப்பது அவர்களுக்கு பயனற்றதாக மாறிவிடும். அதனால், ‘எனக்கு என்ன தேவை? எனது வேலை சுமையை குறைப்பதற்கும், எனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிப்பதற்கும் ஒரு வாய்ப்பைத் தரும் பொருளை நான் தேர்வு செய்கிறேன்’ என்று அவர்களே முடிவு செய்யட்டும்.” என்று பேசினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>