இஸ்ரேலும் ஈரானும் மோதல் வெடித்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து செயல்படும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்த சண்டையில் லெபனானில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
லெபனானுக்குள் தரைவழியாகவும் புகுந்த இஸ்ரேல், 12க்கும் மேற்பட்ட கிராமங்களை கைப்பற்றியது. இதற்கிடையே, ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தியது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் போர் நிறுத்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்றும் எச்சரித்து இருந்தது. இதையடுத்து இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்தம் காலாவதியாக இருந்த நிலையில், மேலும் 3 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதரக அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். இந்த உயர்மட்ட கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தம் நீட்டிக்க உடன்பாடு ஏற்பட்டது,” என்றார்.