ஈழத் தமிழினத்தின் அணையாத ”விடுதலைத் தீ” திலீபன் என்னும் ‘பெருமகன்’

Share

”திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும் அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படவில்லை. உடல் வலிமை குன்றிய போதிலும் திலீபனின் மனவலிமை வானளவு உயர்ந்து நின்றது.ஆனால் காந்தி தேசம் தமிழருக்கு பெரும் துரோகம் இழைத்தது. 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள், சரியாகக் காலை 10.48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது . அமைதிப் படை என்ற போர்வையில் எமது இனத்தை அழிக்க வந்த இந்திய வல்லாதிக்க அரசின் முகத்திரையைக் கிழித்தெறிந்து அறவழிப் போரிற்கு புது இலக்கணம் வகுத்தான் திலீபன்.

பாரத தேசம் தன் வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்கவிட்டபோது, தன் உயிரையே சாட்சியமாக்கி நீதி கேட்ட அந்த மாவீரனின் தியாகம், ஒவ்வொரு தமிழனின் மூச்சுக் காற்றிலும் இன்னமும் கலந்திருக்கிறது. “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்” என்ற அவனின் இறுதி வரிகள், வெறும் வார்த்தைகள் அல்ல. தலைமுறைகள் தாண்டி ஒலிக்கும் தமிழின விடுதலைக்கான அழைப்பு”

——–கே.பாலா

ஈழப் பெருநிலத்தின் விடுதலைப் பாதையில் குருதியைச் சிந்தி உயிர்நீத்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில், தன் உயிரையே தியாகத் தீயில் ஆகுதியாக்கியவன் தியாக தீபம் திலீபன். ஆயுதங்களின் சத்தம் ஓயாத ஒரு போர்க்களத்தில், அகிம்சை என்ற சாத்வீக ஆயுதத்தை உயர்த்திப் பிடித்து, காந்திய தேசத்தின் கதவுகளைத் தன் பட்டினிப் போரினால் தட்டிய அந்தத் தியாகியின் அர்ப்பணிப்பு உலக வரலாற்றையே உலுக்கியது.அதனால்தான் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் செப்டம்பர்26 ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் தமிழர் தேசம் மற்றும் தமிழர் வாழும் புலம் பெயர்தேசமெங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

1987 ஆம் ஆண்டு, தாய்மண்ணின் 5 அம்சக் கோரிக்கைகளுக்காகத் தன் நாக்கில் ஒரு சொட்டு நீரும் படாமல், 12 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உடலை உருக்கி, உயிர் பிரியும்போது கூட புன்னகையோடு விடைபெற்ற திலீபன் , தமிழினத்தின் விடுதலைத் தாகத்தின் அடையாளமானான். சொட்டுச் சொட்டாய் உயிர் கரைந்து, மூச்சுக்காற்று ஒடுங்கியபோதும், தமிழ் மக்களின் விடிவொன்றையே தன் இறுதித் துடிப்பாகக் கொண்டு மடிந்த அந்தப் புனிதமான தியாகத்தின் 39ஆவது நினைவு நாளில், நம் கண்களில் கண்ணீரும் நெஞ்சில் சுதந்திரத் தாகமும் கொப்பளிக்க, தியாக தீபம் திலீபனின் நினைவுகளை ஒவ்வொருவரும் சுமந்து கொண்டிருக்கின்றோம் .

1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி ஊரெழு மண்ணில் பிறந்த திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன். மருத்துவபீட மாணவனாக இருந்த 1983 காலப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு “திலீபன்” என்னும் பெயரை தனதாக்கிக்கொண்டவன். போர்ப்பயிற்சிகளை நிறைவு செய்து வெளிவந்து வலிகாமத்தின் ஒரு பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தநிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவனை யாழ் அரசியல் துறைப் பொறுப்பாளராக 1985ஆம் ஆண்டில் நியமித்தது.

இவ்வாறான நிலையில்தான் 1987 இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் தமிழீழ மண்ணில் கால்பதித்தது. தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையான சாகும்வரையில் உண்ணா விரதம் என்ற அகிம்சை வழி ஆயுதத்தை கையில் எடுத்தான் .

இந்த முக்கியமான முடிவு திலீபன், அவனது அரசியல் துணைப் பொறுப்பாளர் ராஜன் மற்றும் “திரு” என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திருநாவுக்கரசு ஆகிய மூவருக்கும் இடையே நடந்த முத்தரப்பு உரையாடலுக்குப் பிறகே எடுக்கப்பட்டது.இந்த உரையாடலில் இரு சாத்தியமான தடைகள் அடையாளம் காணப்பட்டன. ஒன்று, தலைவர் பிரபாகரன் இதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்பது. மற்றொன்று, இந்தியாவின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பது. விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திய போராட்டத்தைக் கொள்கையாகக் கொண்டவர்கள். ஆனால் திலீபனோ, காந்தியின் அகிம்சையின் தொட்டிலான இந்தியாவிற்கு எதிராக அகிம்சைப் போராட்டத்தைக் கையிலெடுக்கத் திட்டமிட்டான்.

திலீபன் தனது எண்ணத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கூறியபோது, பிரபாகரனால் இந்த முடிவை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய-இலங்கை அரசாங்கங்களுக்கு எதிராக அகிம்சைப் போராட்டங்கள் பயனற்றவை என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது. கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் நடத்திய சத்தியாக்கிரகங்களும், அவை கொடூரமாக அடக்கப்பட்ட விதமுமே இதற்குச் சான்றாக இருந்தன. அகிம்சைப் போராட்டம் என்பது புலிகளின் கொள்கைக்கே எதிரானதாக இருந்தது.ஆனால், திலீபன் ஒரு குறிப்பிட்ட லட்சிய உறுதி பூண்டவனாக இருந்தான். அவன் பிரபாகரனிடம் தனது முன்மொழிவை ஏற்கும்படி தொடர்ந்து வலியுறுத்தினான். சாகும்வரை உண்ணாவிரதமிருக்க தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டான். இந்தியாவில் தங்கியிருந்தபோது பிரபாகரனே நீர் அருந்தாமல் சாகும்வரை உண்ணாநோன்பு இருந்த நிகழ்வை திலீபன் நினைவூட்டினான். இறுதியில் பிரபாகரனும் சம்மதித்தார்.

1987 செப்டம்பர் 15ஆம் திகதி நல்லைக் கந்தனின் முன்றிலிலே ,மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்,அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்,ஊர்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீளப்பெறப்பட வேண்டும்,தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என அகிம்சையின் தாய் வீடான இந்திய தேசத்திடமே 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரத அறப்போரைத் தொடுத்தான்.

தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதற்கு முன், எந்தச் சூழ்நிலையிலும் தனது போராட்டத்தைக் கலைக்கக் கூடாது என்று திலீபன் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்திருந்தான். நீர் அருந்துவதில்லை என்றும் அவன் முடிவெடுத்தான். அயர்லாந்தின் பாபி சேண்ட்ஸ், இந்தியாவின் பொட்டி ஸ்ரீராமுலு மற்றும் சங்கரலிங்க நாடார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர்கள் என்றாலும், அவர்கள் நீர் அருந்தினார்கள். தனது உடல்நிலை மோசமடைம்போது, வலியினால் தண்ணீருக்காகக் கதறும் சூழல் வரலாம் என்பதை திலீபன் அறிந்திருந்தான். எனவே, தான் மயக்க நிலையில் அழுது புலம்பினாலும் கூட, எவரும் தனக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று கடுமையான கட்டளையிட்டிருந்தான்.

திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும் அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படவில்லை. உடல் வலிமை குன்றிய போதிலும் திலீபனின் மனவலிமை வானளவு உயர்ந்து நின்றது.ஆனால் காந்தி தேசம் தமிழருக்கு பெரும் துரோகம் இழைத்தது. 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள், சரியாகக் காலை 10.48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது . அமைதிப் படை என்ற போர்வையில் எமது இனத்தை அழிக்க வந்த இந்திய வல்லாதிக்க அரசின் முகத்திரையைக் கிழித்தெறிந்து அறவழிப் போரிற்கு புது இலக்கணம் வகுத்தான் திலீபன்.

சாகும்வரையிலான் உண்ணாவிரதப்போராட்டத்தில் இறங்கிய திலீபன் இறுதியாக பேசிய வார்த்தைகள் இவைதான்

”என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயாராகிவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது. நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள், என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் பிரபாகரன் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும், வருத்தப்படும். எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில், தன் மூச்சையும் உயிரையும் தாய்நிலத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் என்றும் அழியாதவை.ஆயுதப் போராட்டங்கள் வெடித்துக்கிளம்பிய நிலத்தில், அகிம்சை என்னும் உன்னத ஆயுதத்தைக் கையில் ஏந்தி, தன் உடலையே உருக்கி காந்திய தேசமான பாரதநாட்டுக்கே பாடம் எடுத்தவன்தான் தியாக தீபம் திலீபன்.

தியாகி தீலீபனின் தியாக வரலாறு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விளங்குவதோடு மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இயல்பிற்கும் ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய எழுச்சி கொண்டதும், வளர்ச்சி கண்டதும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால்தான். அடக்குமுறைகளுக்கு – அவை எவ்வளவுதான் பெரிதாக, பிரமாண்டமாக இருந்தாலும் விட்டுக் கொடுப்பதில்லை. எவ்வளவுதான் பாரிய இழப்புக்களைச் சந்தித்தாலும், தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை என்பது பிரபாகரனின் அடிப்படை இயல்பு

இந்த உறுதிகுலையாத உரம்தான் பிரபாகரனையும் சாகும்வரை உண்ணாவிரதமிருக்க, முன்னர் தூண்டியது. 1986 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தின் போது, இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த பிரபாகரனின் தொலைத் தொடர்பு சாதனங்கள் முதலானவற்றை இந்திய அரசு பறிமுதல் செய்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக பிரபாகரன் கடும் சினம் கொண்டார். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு போராட்ட வடிவமான, சாகும் வரையிலான உண்ணா விரதப்போராட்டத்தை பிரபாகரன் உடனடியாகவே ஆரம்பித்தார்.

தண்ணீர்கூட அருந்தாத, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் பிரபாகரன் ,எந்தவிதமான முன்னறிவித்தலும் இல்லாமல், உடனேயே ஆரம்பித்து விட்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருநாள் கழித்த பின்னர் ஆரம்பிக்கும்படி இயக்கப் போராளிகளும், பிரமுகர்களும் பிரபாகரனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். ‘அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக அரசிற்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும், தமிழக மக்களுக்கும் உங்களது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து விடலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கலாமே” என்றுகூட அவர்கள் பிரபாகரனிடம் வாதிட்டார்கள்.

ஆனால் அந்த ஆலோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்ட பிரபாகரன் ‘இல்லை! நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம். எனக்கு அது தேவையில்லை.அதில் உடன்பாடும் இல்லை.நான் இந்த நிமிடம், இந்த விநாடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல், சாகும் வரையிலான என்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்திய அரசு தான் பறித்தெடுத்த தொலைத்தொடர்பு சாதனங்கள் முதலானவற்றை மீண்டும் திருப்பித் தரும் வரைக்கும் அல்லது என்னுடைய உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

பிரபாகரனின் உறுதியால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தான் பறித்தெடுத்த தொலைத் தொடர்பு சாதனங்கள் முதலானவற்றை பிரபாகரன் தங்கியிருந்த வீட்டிலேயே அரசு கொண்டு வந்து தந்தது. பிரபாகரன் தன்னுடைய உண்ணா விரதப்போராட்டத்தை முடித்தார்.தன்னுடைய உயிரே போனாலும் அடக்குமுறைக்குப் பணிவதில்லை என்ற பிரபாகரனின் இயல்பின் வெளிப்பாடுதான் திலீபனிடமும் இருந்தது . பிரபாகரன் தானே முன்னின்று வழிகாட்டிய பாதையில், திலீபன் பின் தொடர்ந்து போராடினான் .ஆனால் காந்தி தேசம் தமிழருக்கு பெரும் துரோகம் இழைத்தது. திலீபன் தியாகியானான்

காந்திய தேசத்தின் கதவுகளை அகிம்சையின் பெயராலேயே தட்டி, உலக அரசியல் வரலாற்றில் ஒரு ஒப்பற்ற தியாகத்தின் அடையாளமாக மாறியவன் தியாக தீபம் திலீபன். ஐந்து கோரிக்கைகளுக்காகத் தன் இன்னுயிரை ஈந்த அவன், தமிழினத்தின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தை உலகரங்கில் ஒரு படி உயர்த்திச் சென்றான். அவன் விதைத்துச் சென்ற போராட்டம் மற்றும் தியாகத்தின் விதைகள் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து ஒருபோதும் அழியாது. திலீபனின் தியாகம், அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமின்றி நிமிர்ந்து நின்ற ஒரு வரலாற்றுச் சான்று.

திலீபன் என்பது வெறும் ஒரு தனிமனிதனின் பெயரல்ல. அது ஈழத் தமிழினத்தின் அணையாத சுதந்திரத் தணல். உண்ணாவிரதம் என்ற அகிம்சை ஆயுதத்தை ஏந்தி, தனது உடலையே ஆகுதியாக்கி , ஈழ மண் எங்கும் சுதந்திர வெளிச்சத்தைப் பாய்ச்சிய அந்த அக்னிப் பிழம்பிற்கு காலங்கள் பல கடந்தாலும் அழிவில்லை. பாரத தேசம் தன் வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்கவிட்டபோது, தன் உயிரையே சாட்சியமாக்கி நீதி கேட்ட அந்த மாவீரனின் தியாகம், ஒவ்வொரு தமிழனின் மூச்சுக் காற்றிலும் இன்னமும் கலந்திருக்கிறது.“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்” என்ற அவனின் இறுதி வரிகள், வெறும் வார்த்தைகள் அல்ல. தலைமுறைகள் தாண்டி ஒலிக்கும் தமிழின விடுதலைக்கான அழைப்பு. தியாக தீபம் திலீபன் ஏற்றிவைத்த விடுதலைத் தீ, ஈழத் தமிழரின் விடியலை நோக்கி என்றும் எரிந்து கொண்டே இருக்கும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>