கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘கலைக்கோவில் நுண் கலைக்கூடம் தனது 100 வது அரங்கேற்றத்தை செல்வன் அகரன் குகேந்திரன் அவர்களது மிருதங்க அரங்கேற்றமாக சமர்ப்பணம் செய்தது.
கடந்த 23-08-2026 அன்று ஸ்காபுறோ ‘சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த அரங்கேற்றம் சில கலாபூர்வமானதும் தொடர்ச்சியானதுமான சமர்ப்பணங்களைக் கொண்டதாக அமைக்கப்பெற்று இறுதியில் அன்றைய அரங்கேற்றம் ‘நுண்கலைகளின் கொண்டாட்டமாக’ நிறைவு பெற்றது எனலாம்.
கனடா ‘கலைக்கோவில் நுண் கலைக்கூடத்தில் பரதநாட்டியம், மிருதங்கம் போன்ற நுண்கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மிருங்க வகுப்புகளை குகேந்திரன் கனகேந்திரன் அவர்களும் பரதநாட்டிய வகுப்புக்களை அவரது துணைவியார் வனிதா குகேந்திரன் அவர்களும் கற்பித்து வருகின்றனர்.
2021ம் ஆண்டு நிறுவப்பெற்ற இந்த கலைக்கூடம் சமர்ப்பணம் செய்த பரதநாட்டியம் மற்றும் மிருதங்கம் ஆகிய துறைகளில் பயிற்சிபெற்ற இளங்கலைஞர்களின் அரங்கேற்ற வரிசையில் அகரன் குகேந்திரன் அவர்களது மிருதங்க அரங்கேற்றமானது 100வது என்ற சிறந்த அடையாளத்தை தனதாக்கிக் கொண்டது.
அன்றைய அரங்கேற்றத்தின் பிரதம விருந்தினராக கலைமாமணி டாக்டர் திருவாரூர் பக்தவத்சலம் அவர்களும் சிறப்பு விருந்தினராக மிருதங்க கலாநிதி திருச்சி சங்கரன் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர். மற்றுமொரு சிறப்பு விருந்தினராக ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் அவர்களும் அங்கு கலந்து கொண்டார்.
அகரனின் அன்றைய அரங்கேற்றத்திற்கு பக்கவாத்தியக் கலைஞர்களாக சிறப்புக்குரிய கலைஞர்கள் அமர்த்தப்பெற்றிருந்தனர்.
வாய்ப்பாட்டுக் கலைஞராக தமிழகத்திலிருந்து வித்துவான் பரத் சுந்தர் அவர்களும் கடம் இசைக்கும் கலைஞராக வித்துவான் சந்திரசேகர சர்மா அவர்களும் வயலின் கலைஞராக வித்துவான் மயுரன் கிரிதரன் அவர்களும் தம்புரா இசைக்கும் கலைஞராக வித்துவான் ஆகாஸ் கதிர்காமன் அவர்களும் மேடையை அலங்கரித்தார்கள். அத்துடன் தங்கள் அனுபவம் மற்றும் துறைசார் வல்ல்மை ஆகியவற்றால் இளையவரான அகரனுக்கு பக்கபலமாக இருந்து. அரங்கேற்றத்தையும் படிப்படியாக ‘உயரத்திற்கு’ எடுத்துச் சென்றார்கள்
அரங்கேற்றத்தை தொகுத்து வழங்கும் பணியை மிகவும் கச்சிதமாக ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அன்றைய தினம் அதே மேடையில் 100வது அரங்கேற்றம் என்பதற்கு அடையாளமாக 100 நடன மணிகள் பங்கெடுத்த பரதநாட்டியமும் இடம்பெற்றது. இதன் மூலம் பார்வையாளர் பாலுக்குள் தேன் கலந்து அருந்தியது போன்ற கலைச் சுவையை அனுபவித்தார்கள் என்றால் மிகையாகாது.
—–சத்தியன்