நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தை தினா ராகவன் தயாரித்து வருகிறார். தினா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் கார்த்திக்கின் 19-ஆவது திரைப்படம் ஆகும். கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இயக்குநர் ராஜூமுருகன் வசனம் எழுதியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை யுகபாரதி, கணேஷ் கே பாபு மற்றும் சௌமியா பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் தலைப்பு முன்னோட்டத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்தார். இதில் அஞ்சனா நேத்ருன், செல்வராகவன், ரோபி, பி.வாசு, வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் கவுதம் ராம் கார்த்திக் உடன் நடித்துள்ளனர். வலுவான அரசியல் பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்பது ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ முன்னோட்டம் மூலம் உறுதியாகிறது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், சி.என்.அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை கொண்டுள்ளதாக இருக்கிறது. இப்படத்தின் வசனங்களை இயக்குநர் ராஜுமுருகன் எழுதியிருக்கிறார். இந்நிலையில், கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும்‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.