காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? செம்மணிக்கு நீதி? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Share

இந்த மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளின் மாநாடு ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற உள்ளது. அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்றாகும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப் போராடும் அமைப்புக்கள் இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்தி வருகின்றன

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் என்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல.அம்மாக்களின் போராட்டம் கடந்த 17 ஆண்டுகளாகத்தான் இடம்பெற்று வருகிறது என்பதல்ல. அது 1984ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. 1984 ஆம் ஆண்டில் இலங்கைத்தீவின் முதலாவது அன்னையர் முன்னணி யாழ்ப்பாணத்தில் தோன்றியது. கைது செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காகப் போராடும் அம்மாக்கள் அந்த முன்னணியை உருவாக்கினார்கள்.அங்கிருந்து தொடங்கி கிட்டதட்ட 42 ஆண்டுகளாக அம்மாக்கள் தங்கள் உறவுகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

அம்மாக்களின் போராட்டத்துக்கு முடிவே இல்லை. முதலாம் கட்ட ஈழப் போரில் தொடங்கி ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னரும் அம்மாக்களின் போராட்டத்துக்கு முடிவு இல்லை. அம்மாக்களுக்கு நீதி கிடைக்கவே இல்லை. இக்கட்டுரை எல்லாவிதமான அரசியல் நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும் எல்லாவிதமான அம்மாக்களையும்தான் குறிக்கிறது

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் அம்மாக்களின் போராட்டத்துக்கு முடிவே இல்லை. அம்மாக்களின் கண்ணீருக்கும் முடிவே இல்லை. தீராத கண்ணீர்; தீராத துக்கம்; முடியாத போராட்டம். இவ்வாறு கடந்த 42 ஆண்டுகளாக அம்மாக்களுக்கு நீதி கிடைக்காத ஒரு சமூகத்தில், குறிப்பாக கடந்த 17ஆண்டுகளாக எல்லாப் போராட்டக் களங்களிலும் அம்மாக்களின் கண்ணீர் சிந்தப்படும் ஓர் அரசியல் களத்தில்,செம்மணிக்கு நீதி கிடைக்குமா?

கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்த் தேசியப் பரப்பில் உணர்ச்சிகரமான விடயங்களில் ஒன்று அம்மாக்களின் கண்ணீர்; அம்மாக்களின் கதறல். பெரும்பாலான எல்லாப் போராட்டங்களிலும் முன்னணிப் போராளிகள் அவர்கள்தான். பெரும்பாலான எல்லாப் போராட்டங்களிலும் அவர்களுடைய கண்ணீர்தான் போராட்டத்தை உணர்ச்சிகரமானதாகவும் எழுச்சிகரமானதாகவும் மாற்றும். இவ்வாறு கடந்த 17 ஆண்டுகளாக போராட்டங்களின் கூர்முனைபோல காணப்படும் இந்த அம்மாக்களை, உலக சமூகத்தில் இருந்து வருகிற பெரும்பாலான பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். ஐநாவின் முக்கியஸ்தர்கள் தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தூதரகங்களின் பிரதிநிதிகள்.. ன்று சொல்லி பெரும்பாலான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த அம்மாக்களைக் கண்டு வருகிறார்கள். கண்ணீருடன் காணப்படும் அம்மாக்களின் படங்கள் உலகில் எல்லா ஊடகங்களிலும் முகப்பு செய்திகளாக வந்திருக்கின்றன. அம்மாக்களின் கண்ணீரும் கதையும் இப்பொழுதும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வருகிறது. ஆனால் அம்மாக்களுக்கு நீதி கிடைக்கவில்லை

இந்த அம்மா, அப்பாக்களில் வயதாகி முதுமை கண்டு ஒரு தொகுதியினர் இறந்து போய்விட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்காது என்று ஏக்கத்தோடு அவர்கள் இறந்துபோய் விட்டார்கள்.எனினும் மிஞ்சியிருப்பவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அம்மாக்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கம் அல்லது கீழ் நடுத்தர வர்க்கம் அல்லது அதைவிட ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். இவர்களுக்காக உழைக்கவேண்டிய பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள். இவர்களுக்கென்று குடும்பங்கள் உண்டு. பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் உண்டு. இவர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து , பேரப்பிள்ளைகளைக் கவனித்திருக்கலாம். தமது பிள்ளைகளுக்குத் துணையாக இருந்திருக்கலாம். ஆனால் அவை எவற்றையும் செய்ய விரும்பவில்லை,நீதிக்காக வீதிகளில் நிற்கிறார்கள்

இவர்கள் ஒவ்வொரு முறையும் போராட்டக் களத்திற்கு வரும்போதும் மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கும்போதும் விசாரணை குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க வரும்போதும் அதற்கென்று பயணச் செலவு வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுடைய ஆவணங்களை போட்டோப் பிரதி எடுப்பதற்கும் காசு வேண்டும். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதிய தாய் சொன்னார்போட்டோக் கொப்பி அடிச்சு அடிச்சு வேளாமை செய்த காசெல்லாம் முடிஞ்சு போச்சுஎன்று. வன்னியிலிருந்து விசாரணைக் கொமிஷனுக்கு வந்த ஒரு தாய் சொன்னார் அன்றைய நாள் சாப்பாட்டுச் செலவை பேருந்துக்குக் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் வந்ததாக.

அந்த முதிய, நொந்த,நோயாளிகளான,இழப்பினாலும் துக்கத்தினாலும் வதங்கிப்போன அம்மாக்களுக்குப் பயணச் செலவுக்கும் சாப்பாட்டுச் செலவிற்கும் காசு தேவை. அவர்கள் காற்றை குடித்துக்கொண்டு வெயிலைக் குடித்துக் கொண்டு போராட முடியாது. அதுவும் முதிய வயதில். அவர்களுடைய குடும்பங்களை யார் கவனிக்கிறார்கள்? இந்த அம்மாக்களின் செலவுகளை யார் கொடுக்கிறார்கள்? கடந்த 17ஆண்டுகளாக எல்லாப் போராட்டக் களங்களிலும்ரெடிமேட்போராளிகளாகப் பயன்படுத்தப்படுகின்ற இந்த அம்மாக்களின் நிதி நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான மையமான அமைப்பு ஏதாவது தமிழ்மக்கள் மத்தியில் உண்டா? இல்லை

புலம்பெயர்ந்த சில கட்டமைப்புகள்தான் அவர்களுக்கு உதவி செய்கின்றன. அந்த அமைப்புக்கள் இவர்களை அணிகளாகப் பிரித்து மோத விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனாலும் அந்த அமைப்புகளும் தனி நபர்களும் உதவவில்லை என்றால் இந்த அம்மாக்கள் அரங்கில் சோர்வின்றி நின்று பிடித்திருப்பார்களா

இவ்வாறு அம்மாக்களின் கண்ணீருக்கு 17ஆண்டுகளாக நீதி கிடைக்காத ஒரு சமூகத்தில்,கடந்த செவ்வாய்க் கிழமை, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருக்கும் ஓர் உள்நாட்டு நீதி பரிபாலனச்சூழலில், செம்மணிப் புதைகுழிக்கு நீதி கிடைக்குமா? அதற்கென்று சர்வதேச விசாரணைக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் எப்படி நம்புவது

17ஆண்டுகளாக அம்மாக்களின் கண்ணீருக்கு விடையில்லை. ஆனால் இந்த 17ஆண்டுகளுக்குள்ளும் புதிதுபுதிதாக போராட்டக் களங்கள் திறக்கப்படுகின்றன.செம்மணிக்கு நீதி கேட்டுப் போராட்டங்கள்; பலாலி மயிலிட்டியில் 36ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலத்தைக் கேட்டுப் போராட்டங்கள்; கிழக்கில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைகளில் ஆயிரம் நாட்களுக்கு மேலாகப் போராட்டங்கள்; தையட்டியில் ஒவ்வொரு முழு நிலா நாளிலும் போராட்டங்கள்.. என்றிவ்வாறாக தமிழ்ச் சமூகத்தில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன

இதுதொடர்பாக தொகுக்கப்பட்ட ஓர் அரசியல் பார்வை; ஓர் அரசியல் வியூகம் தமிழ்த் தேசியப் பரப்பில் இல்லை இந்த எல்லா போராட்டங்களுமே தெட்டம் தெட்டமானவை; ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படாதவை; ஒருங்கிணைக்கப்படாதவை.

தமிழ்மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக தமது அரசியலை நீதிக்கான போராட்டம் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், நீதிக்கான போராட்டத்தில், அந்தப் போராட்டத்தை எப்படி நடாத்த வேண்டும்? எங்கெங்கு நடாத்த வேண்டும்? யார் யாரை ஒருங்கிணைக்க வேண்டும்? போன்ற விடயங்களை ஒரு மையத்திலிருந்து திட்டமிட்டு, ஒரு மையத்திலிருந்து அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்த யாருமே தயாராக இல்லை. நிதிக்காகப் போராடும் ஒரு மக்கள் அதற்கென்று போராட்ட அமைப்புகளையும் கட்டமைப்புக்களையும் கொண்டிருக்கவில்லை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உருவாக்கிய கட்டமைப்புகளையும் ஏற்கனவே நிறுவனமாக உள்ள பல்கலைக்கழக மாணவர்களையும் கையாண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தேவையான அரசியல் இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை

இப்பொழுது வடக்கு கிழக்கில் பெரும்பாலான முருக கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றன. யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதியில் பெருந்திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. நல்லூர் பெருந்திருவிழா தொடங்கி விட்டது. கோவில் பெரு விழாக்களை நோக்கி லட்சக்கணக்கில் மக்கள் குவிகிறார்கள். நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து செல்கின்ற, யாழ்ப்பாணத்தை நோக்கி வருகின்ற பெரும்பாலான எல்லாப் புகையிரதங்களிலும் முன்பதிவு ஆசனங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. இது புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தை நோக்கி வருகிற காலம். மேலும் பாடசாலைகளுக்கு விடுமுறைக் காலம். எனவே புகையிரதங்களில் முன்பதிவு ஆசனங்கள் முடிந்துவிட்டன.அந்தளவுக்கு மக்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி வருகிறார்கள்; போகிறார்கள்

இவ்வாறு லட்சக்கணக்காக தமிழ் மக்கள் கோவில் பெரு விழாக்களில் திரளும் ஒரு சமூகத்தில், ஆயிரக்கணக்காக மக்கள் உணவுப் பெருவிழாக்களை நோக்கியும் வாகனப் பெருவிழாக்களை நோக்கியும் திரளும் ஒரு சமூகத்தில், நீதிக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் திரளுவதில்லை. அதற்குப் பொறுப்பு தமிழ் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள்தான். மக்கள் அல்ல. மக்கள் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள்.மக்களை அரசியல் உணர்வு மிக்கவர்களாக தங்களுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடிய அரசியல்மீது உணர்திறன் மிக்கவர்களாக, மாற்ற வேண்டியது தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகளுடைய பொறுப்பு. ஆனால் அவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக அதைப் பொருத்தமான விதங்களில் செய்திருக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்களுடைய கண்ணீரும் கதறலும் எல்லாப் போராட்டக் களங்களுக்கும் தேவை. ஆனால் அந்த அம்மாக்களின் செலவுகளைப் பராமரிப்பதற்கு ஒரு மையமான அமைப்பு எந்த ஒரு கட்சியிடமும் இல்லை.அல்லது கட்சிகடந்த அமைப்பும் இல்லை

ஒரு போராட்டத்திற்கு அல்லது பேரணிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வருவதென்றால் அதற்குப் பேருந்துகள் தேவை. அவற்றுக்கு ஒரு செலவு உண்டு. அழைத்து வரப்படும் மக்களுக்கு குடிபானம், சாப்பாடு போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்குக் காசு தேவை.ஆகமொத்தம் வெளி மாவட்டங்களில் இருந்து போராட்டக் களங்களுக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு பெரிய நிதி தேவை. அப்படி ஒரு போராட்ட நிதி எந்தக் கட்சியிடமும் இல்லை. அவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு நிதி உதவி செய்வதற்கு எந்த ஒரு கட்டமைப்பும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் கூறிக் கொள்கிறார்கள் இது நீதிக்கான போராட்டம் என்று

எதற்காகப் போராடுகிறோம் என்று கூறுகிறார்களோ, அதற்காக ஒரு கட்டமைப்பும் இல்லை. அதற்கென்று பொதுவான நிதியும் இல்லை. அதற்கென்று வழி வரைபடமும் இல்லை. இவ்வாறு ஒரு மையத்தில் இருந்து முடிவெடுக்கப்பட வேண்டிய விடையங்களை முடிவெடுக்காமல் சிதறலாக, தெட்டம்தெட்டமாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நீதிக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு, ஆனால் அதற்கு வேண்டிய கட்டமைப்புகள் எவையும் இல்லாமல், சிதறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், கடந்த சில மாதங்களாக மாகாணசபைத் தேர்தலை நோக்கி வாதப்பிரதிவாதங்கள், கருத்துக் கணிப்புகள்,தீர்க்கதரிசனங்கள் அதிகரித்து வருகின்றன

மாகாண சபைத் தேர்தல்கள் நடக்குமோ நடக்காதோ தெரியாது. அவை எப்பொழுது நடத்தப்படும் என்பதும் தெரியாது. ஆனால் யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தலாம்? யார் வெல்லக்கூடும்? போன்ற வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்த அளவில் நடந்துவருகின்றன

 தன்னுடைய பிரதான அரசியல் கோரிக்கையை முன்வைத்து ஒரு பெருந் திரளாக போராடுவதற்கு வேண்டிய பலத்தைத் திரட்டிக்கொள்ளாத ஒரு சமூகம், மாகாண சபைகளை கையில் கொடுத்தால் என்ன செய்யும்? எதை வெட்டிப் பிடுங்கும்? தானே தனக்குள் மோதி, தானே தன்னைப் பழித்து,தானே தன்னைத் தோற்கடித்து, “நந்தவனத்து ஆண்டியைப்போல கூத்தாடிக் கூத்தாடி தோண்டியைப் போட்டு உடைத்துவிடுமா” ?

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>