பு.கஜிந்தன்
சிவாஜி அண்ணன் குறித்து அருச்சுனா தேவையற்ற விடயங்கள் பேசினால் நடப்பது வேறு – கிஷோர் பகிரங்க எச்சரிக்கை!
சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை. புலம்பெயர் தமிழர்கள் சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கூச்சலிடுகிறார் என சாவகச்சேரி நகரசபையின் உப நகர பிதாவும், அருச்சுனாவின் ஆரம்ப கால ஆதரவாளருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மருத்துவ செலவிற்கு சேகரிக்கப்படும் நிதி குறித்த இராமநாதன் அருச்சுனா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவ செலவிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவது குறித்து மிக மோசமான கருத்தை முன்வைத்துள்ளார். சிவாஜிலிங்கம் அண்ணனைப் பற்றி விமர்சிப்பதற்கு இந்த இராமநாதன் அருச்சுனாவுக்கு எந்த அருகதையும் இல்லை.
அருச்சுனா இராமநாதன் இந்த மண்ணுக்கோ அல்லது மக்களுக்கோ ஒரு துளி கூட நன்மை செய்யாத ஒருவர். மக்களை ஏமாற்றி அரசியலுக்கு வந்து புலம்பெயர் மக்களிடம் கோடிக்கணக்கான நிதியை திரட்டி சொகுசு வாழ்க்கை வாழ்கின்றவர் இராமநாதன் அருச்சுனா தான். ஆகவே அவர் தன்னைப்போல் மற்றவர்களையும் சிந்திக்கின்றார். புலம்பெயர் தேசங்களில் இருந்து சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்பினால் தனக்கு நிதி கிடைக்காது என்ற எரிச்சலில் அவர் இவ்வாறான மோசமான வேலைகளை செய்கிறார்.
இதே இராமநாதன் அருச்சனா வெளிநாட்டுக்குச் சென்று அங்கே நின்று எமது மண்ணையும், எமது இளைஞர்களையும் விற்கின்ற வகையில் கருத்து தெரிவித்தபோது நாங்கள் பகிரங்கமாக ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். அதாவது எமது யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாததற்கு வருவதற்கு தயாரா என்று நான் கேட்டிருந்தோம். அவர் வரவில்லை. அவருக்கு முதுகெலும்பு இல்லாததால் தான் விவாதத்திற்கு வரவில்லை போல.
மீண்டும் நாங்கள் கேட்கின்றோம் அருச்சுனா இராமநாதனுக்கு துணிவு இருந்தால், முதுகெலும்பு இருந்தால் யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள். நீங்கள் சொல்கின்ற இடத்திற்கு எமது இளைஞர்கள் வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
அத்துடன் மேலும் ஒரு பகிரங்க கோரிக்கையை முன்வைக்கிறோம். முடிந்தால் இன்னொரு தடவை தமிழக மண்ணில் கால் வையுங்கள் பார்ப்போம். நீங்கள் முதுகெலும்பு உள்ள ஒரு ஆளாக இருந்தால் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் சம்மதியுங்கள் பார்ப்போம்.
தெரிந்தோ தெரியாமலோ எமது மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி விட்டார்கள். அந்த வாழ்க்கையை ருசித்துக் கொண்டு மீண்டும் முதலமைச்சர் ஆகுவதற்கு பகல் கனவு காணுகிறார்.
அமிர்தலிங்கம், தந்தை செல்வா உள்ளிட்ட கல்விமான்களின் வழிவந்த எமது அரசியலானது தற்போது அருச்சுனா போன்றவர்களால் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அருச்சுனா பாராளுமன்றத்தில் இருப்பது எமக்கு வெட்கக்கேடாக இருக்கின்றது.
அர்ச்சனா இராமநாதன் என்ற ஒருவரை இந்த மண்ணுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் ஒரு காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றோம். வைத்தியர் என்ற பெயரில் இருக்கின்ற இந்த விஷச் செடியினை அறிமுகப்படுத்தியதற்காக எமது மக்களிடம் நாங்கள் பகிரங்க மன்னிப்புக்கு கோருகின்றோம்.
சிவாஜி அண்ணன் குறித்து இந்த அர்ச்சுனா என்கின்ற விஷக்கிருமி ஏதாவது கருத்துக்கள் முன்வைத்தால் நடப்பது வேறு. இதனை பகிரங்க எச்சரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். நீங்கள் எந்த பொலிஸ் நிலையத்திலாவது சென்று முறையிடுங்கள் பிரச்சினை இல்லை.
சிவாஜி அண்ணன் இரண்டு தடவை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தினை விடுதலை போராட்டத்திற்காக வழங்கியவர். இது பகிரங்கமாக அனைவருக்கும் தெரிந்த விடயம். பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அவர் சொகுசாக வாழ்வில்லை.
2013ஆம் ஆண்டு சிவாஜிலிங்கம் அண்ணன் நினைவேந்தலில் ஈடுபடும்போது இராணுவத்தினர் அவரை சூழ்ந்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் பெரியகோவிலில் நினைவேந்தலில் ஈடுபடுகின்றபோது இராணுவத்தினர் அங்கே வந்த அந்த சுடர்களை கால்களால் தட்டி அவமானப்படுத்தினார்கள். அன்று இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்கள் மத்தியில் மாகாணசபை வளாகத்தினுள் தனி ஒருவராக நின்று நினைவேந்தலை மேற்கொண்டவர்.
இன்று நாங்கள் தேசியத் தலைவரின் பிறந்தநாளுக்கு பகிரங்கமாக கேக் வெட்டுகிறோம். ஆனால் அன்று கெடுபிடியான நேரத்திலும் கேக் வெட்டியவர்தான் சிவாஜி அண்ணன். இறுதி நேரத்தில் தேசியத் தலைவரின் தாயாரது மருத்துவ விடயங்களை கூட சிவாஜி அண்ணன்தான் கண்காணித்தார். தேசியத் தலைவரது தாயாரது இறுதிச் சடங்கினை கூட சிவாஜி அண்ணன்தான் நடாத்தினார்.
தமிழ் தேசியத்துக்காக இவை அனைத்தையும் துணிந்து செய்த சிவாஜி அண்ணனுக்கு எதிர்பார்த்த அளவு நிதியை விட அதிகமான நிதி கிடைக்க வேண்டும். இன்றைக்கு அவர் இந்த நிதியை கேட்டிருக்க மாட்டார். அவருடன் இருந்தவர்கள் வற்புறுத்தியதாலேயே அவர் இதனை கேட்டுள்ளார். அவர் கேட்டபடியால் தான் அனைவருக்கும் இந்த விடயம் தெரிந்திருக்கும். அவரது மருத்துவ செலவுக்கு மாத்திரமன்றி அவரது பராமரிப்பு செலவுக்கும் தேவையான நிதி கிடைக்க வேண்டும். எனவே அவருக்கு கிடைக்கின்ற நிதி குறித்து யாரும் கதைப்பதற்கு அருகதையற்றவர்கள் என்றார்.