காயத்ரி விக்கிரமசிங்க – கொழும்பு மாநகர சபையின் தமிழ் பேசும் உறுப்பினர்
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள கிராமிய அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத் ராஜ் தேசிய நிறுவனத்தில் பயிற்சியளிக்கும் இந்திய திட்டம் மிகுந்த பயனுடையதாக இருக்கிறது. இந்தியாவில் ஊராட்சி அமைப்புகள் குறிப்பாக அடிமட்டத்தில் பஞ்சாயத் சபைகள் இயங்குகின்றன முறை இலங்கையும் பின்பற்றக் கூடிய ஒன்றாகும்.
எமது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இந்தியாவில் அதிஉயர் வரவேற்பும் கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது. எமது உறவுகள் உன்னத நிலையில் இருக்கின்றன. இந்திய அரசு எமக்கு வழங்கிய சில உதவிகளை தனது அறிக்கையில் நினைவு கூர்ந்தார்.
இலங்கை நான்கு வருடங்களுக்கு முன்னர் எதிர்நோக்கிய முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு முதலில் உதவியது சர்வதேச நாணய நிதியம் அல்ல, இந்தியாவே என்று கொழும்பு மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான காயத்ரி விக்கிரமசிங்க தென்னிந்தியாவின் ஹைதராபாத் நகரில் இலங்கையின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள கிராமிய அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனத்தில் பயிற்சி அளிக்கும திட்டத்தின் கீழ் சென்றிருக்கும் மூன்றாவது உள்ளூராட்சி உறுப்பினர்கள் குழுவில் ஒருவரான காயத்ரி விக்கிரமசிங்க பயிற்சி நெறியில் கலந்து கொண்டு கொழும்பு நாடு திரும்பிய பின்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வருட பிற்பகுதியில் இலங்கையை தாக்கிய டித்வா சூறாவளியின் விளைவான பாதிப்புக்களில் இருந்து மீண்டுவருவதற்கும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும் இந்திய அரசாங்கம் இதுவரையில் 14,850 கோடி இலங்கை ரூபாவை செலவிட்டிருக்கிறது.
இந்த தொகையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன் திட்டங்களின் கீழும் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவித் திட்டத்தின் கீழும் வழங்கப்பட்டிருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கிய பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் இருந்து எங்களைக் காப்பாற்றியது உண்மையில் சர்வதேச நாணய நிதியம் அல்ல. அந்த நிதியம் சில மில்லியன் டொலர்களை மாத்திரமே வழங்கியது.
இந்தியா வழங்கிய 4 பில்லியன் டொலர்கள் கடனுதவிதான் இலங்கையை தாங்கிப் பிடித்தது. தொடர்ந்தும் பல்வேறு திட்டங்களின் கீழ் இந்தியா இலங்கை மக்களின் மேம்பாட்டுக்கு உதவி வருகிறது. குறிப்பாக, இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார முயற்சிகள் என்று பல்வேறு துறைகளில் இந்திய அரசாங்கம் பெருவாரியான உதவிகளைச் செய்து வருகிறது. இதற்கு நாம் என்றென்றைக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
முன்னைய அரசாங்கங்களை விடவும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக தமிழ் மக்களின் குறிப்பாக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வமாக செயற்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ்தான் முன்னெப்போதையும் விட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் உன்னதமான நிலையில் இருக்கின்றன.
இன்றைய அரசாங்கம் சகல சமூகங்களையும் சமத்துவமாக நடத்தும் கொள்கைகளைக் கொண்டது. அத்துடன் மீண்டும் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம. சூளுரைத்திருக்கிறது. இன்று இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகள் மிகவும் சிறப்பான முறையில் இருக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தை தனக்கு வழங்கிய கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தஸார் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு ‘இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்’ நிகழ்ச்சித் திட்டத்திலும் 2021 ஆம் ஆண்டு ‘ஜனநாயக மரபுகளை பேணுதல்’ நிகழ்ச்சி திட்டத்திலும் இந்திய அரசின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.