”6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பில் தமிழ் ,முஸ்லிம், மலையக பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்கள், வலியுறுத்தல்களை கவனத்தில் எடுக்காது பூசி மெழுகி பதிலளித்து அனுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதே வார பாராளுமன்ற அமர்வுகளில் தனது அமைச்சர்களை வைத்தே தமிழ் தரப்புக்களின் கோரிக்கைகள், வலியுறுத்தல்களை முற்று முழுதாகவே நிராகரித்து விட்டார்”
—-கே.பாலா
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சியாளர்கள் மாறினாலும், தமிழ் மக்களின் விதியிலும் உரிமைகளிலும் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என்பதை தற்போதைய அரசியல் சூழல் மீண்டும் நிரூபித்துள்ளது.தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு,காணாமல்போனோர் விவகாரம் ,அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் அன்றாட வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் இன்று அதிகாரத்தின் நிழலில் கரைந்து போயுள்ளன.புதிய திசையில் பயணிக்கலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த தமிழ் சமூகம், மீண்டும் ஒருமுறை வாக்குறுதிகளின் போர்வையில் திட்டமிட்டு ஏமாற்றப்படும் கசப்பான வரலாற்றையே தற்போதைய அரசாங்கத்திலும் எதிர்கொண்டு நிற்கிறது.
அரசியல் மேடைகளில் முழங்கப்படும் வாக்குறுதிகளுக்கும், அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் நடைமுறைப்படுத்தப்படும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி இலங்கை அரசியலில் புதிதொன்றல்ல. இருப்பினும், “மாற்றம்” என்ற ஒற்றைச் சொல்லைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி பீடம் ஏறிய தேசியமக்கள் சக்தி (என்.பி.பி.) -மக்கள் விடுதலைமுன்னணி (ஜே .வி.பி.) தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அதே பழைய பாதையிலேயே பயணிக்கின்றது.
மாற்றத்தையும் நீதியையும் மூலதனமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக்கூட முன்னெடுப்பதில் காட்டும் மெத்தனப் போக்கும் மௌனமும், அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதனையே உறுதிப்படுத்துகின்றது.வாக்குறுதிகள் என்பவை நிறைவேற்றப்படுவதற்காகக் கொடுக்கப்படுபவையா அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தந்திரக் கருவிகளா என்ற கேள்வி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் வலுப்பெற்றுள்ளது
அநுரகுமார திசாநாயக்க அரசு மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையிழப்புக்கு ஆகப்பிந்திய உதாரணமாக தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டின் பிரதிநிதிகளும் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து தமிழ், முஸ்லிம் ,மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியபோது அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், காட்டிய அக்கறையின்மை ,வழங்காத உறுதிமொழிகள் , தட்டிக்கழிப்புக்கள் என்பனவும் அதன் தொடராக அவரது அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களும் உள்ளன.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. இரா.சாணக்கியன் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், அதன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமார் , இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,பாராளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் தாஹிர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் விசேடமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாமை என்பன தொடர்பில் தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் அதிருப்தி வெளியிட்டனர்.அதேபோன்று நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள், தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறும், அதன் பின்னர் அடுத்த பதவிக்காலம் வரையுள்ள இடைவெளியில் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரமுடியும் என்றும் எடுத்துரைத்தனர். அதனைத்தொடர்ந்து வடக்கு,கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்ட்டுள்ள காணிகள்,மலையக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக 6 தமிழ் கட்சிகளின் கூட்டு பிரதிநிதிகள் கொஞ்சம் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தனர்.
6 தமிழ் கட்சிகளின் கூட்டு பிரதிநிதிகளின் கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள், வேண்டுகோள்கள், வலியுறுத்தல்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரப் பகிர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு மாற்றம் குறித்து உடனடித் தீர்வைக் கொடுக்காமல் “தேசிய இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்” என்ற பெயரில் கால அவகாசம் கோரி பிரச்சினையை காலவரையறையின்றி தள்ளிப்போடும் வழக்கமான உத்தியையே கையாண்டுள்ளார். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் முதன்மை அடையாளமான மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோரிய போது, அது தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவை சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு இழுத்தடிப்பு அரசியலை மேற்கொண்டார்.வடக்கு-கிழக்கில் தொடரும் தொல்லியல், வனவளத் திணைக்களங்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ வசமுள்ள காணி விடுதலை போன்ற உடனடி கவனத்திற்குரிய பிரச்சினைகளுக்குத் தெளிவான நடைமுறை சாத்தியமான தீர்வையோ, காலக்கெடுவையோ ஜனாதிபதி வழங்கவில்லை
மலையக மக்களின் காணி உரிமை குறித்துப் பேசப்பட்ட போது, பெருந்தோட்டக் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் 2042-ஆம் ஆண்டிற்குள் தீர்வு காணப்படும் எனக் கூறி, அவர்களின் தற்போதைய அவசர வாழ்வாதாரக் கோரிக்கைகளை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு அப்பால் தள்ளிப் போட்டுள்ளார்.தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த கட்டமைப்பு ரீதியான கோரிக்கைகளை ஏற்காமல், வழக்கமான அபிவிருத்தி மற்றும் பொருளாதார உதவிகள் மூலமே சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்ற பிம்பத்தை உருவாக்கவே ஜனாதிபதி இந்த சந்திப்பில் முயற்சித்துள்ளார்.
6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான இந்த சந்திப்பு கடந்த 3 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையில் அதில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் அமைச்சர்கள் வடக்கு,கிழக்கு மாகாணங்கள்,தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு விசனத்தையும் அரசாங்கம் மீதான வெறுப்பையும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையின்மையையுமே அதிகரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் 4 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா. சாணக்கியன் 27/2இல் எழுப்பிய இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்ட்டுள்ள காணிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் இராணுவத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் காணிகள், அப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் மூலோபாய முக்கியத்துவத்திற்கும் அவசியமான காணிகள் .எனவே அவற்றை விடுவிக்க முடியாது.அத்துடன் பலாலி சர்வதேச விமான நிலையத்தைக் கொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இலங்கை விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் 774.98 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க முடியாது என உறுதிபடத்தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோவில் விரிவாக்கத்திற்காகக் கோரப்பட்ட காணித் துண்டு, தற்போது இலங்கை இராணுவத்தின் 1 வது படையணியின் பயன்பாட்டு காணி .இது முன்னர் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் பயன்படுத்தப்பட்டது. கோவில் விரிவாக்கத்திற்காக கோரப்பட்ட காணித் துண்டு,பொதுமக்களின் உரிமையிலிருந்து இலங்கை இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்ட ஒரு காணித் துண்டு. கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களுக்காக இராணுவ நிதியிலிருந்து செலவழிக்கப்பட்ட 8,466,355.64 ரூபா தொகையை மீளப்பெற்ற பின்னர்,குறித்த காணித் துண்டை இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்து விடுவிக்க முடியும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பகுதியில் தற்போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் அரசாங்கத்திற்கும் சிவில் மக்களுக்கும் சொந்தமான காணிகள் தொடர்பில், எல்லைக் குறியீடு மற்றும் அளவீட்டுத் திட்டங்களைப் பெறும் நடைமுறையின் போது, 55 சிவில் காணி உரிமையாளர்களில் 44 பேர் மாத்திரமே தமது அசல் காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகளை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்.விருப்பம் தெரிவித்த 44 நபர்களுக்கு அரசாங்கம் கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் தலா 40 பேர்ச்சஸ் கொண்ட மாற்று நிலத் துண்டுகளை வழங்கி வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.
மேலும், மாற்று நிலங்களையும் வீடுகளையும் ஏற்றுக்கொள்ளாத 11 பொதுமக்களிடம், தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிலத் துண்டுகளுக்கு அரசாங்கத்தால் மதிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொண்டு, அந்நிலங்களை இலங்கை இராணுவத்திற்குப் கைமாற்ற ஒப்புக்கொள்வார்களா என்பதைச் கண்டறியுமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதேச செயலகம் அவர்களிடம் இது குறித்து விசாரித்த போதிலும் அவர்கள் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.எனவே, கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் காணிகளையும் வீடுகளையும் ஏற்றுக்கொள்ளாத 11 பொதுமக்கள் முன்னர் உரிமை கோரிய காணிகளின் அளவிற்கான நிலத் துண்டுகளை, இலங்கை இராணுவ முகாமால் பயன்படுத்தப்பட்டுள்ள எஞ்சிய பகுதியில் ஒதுக்கித் தர முடியும் என்றும் அறிவித்தார்.
அதே தினம் பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன் எம்.பியால் எழுப்பப்பட்ட இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்ட கிவுல் ஓயாத்திட்டம்,கிழக்கு மாகாண மக்களின் மயிலத்தமடு ,மாதவனை மேய்ச்சல் தரைதொடர்பான் பிரச்சினைகளுக்கு பதிலளித்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த, கிவுல்ஓயா திட்டம் எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் .அதேவேளை கிழக்கு மாகாணத்தில் மயிலத்தமடு ,மாதவனை மேய்ச்சல் தரை என்ற ஒரு இடமே இல்லை என்று வெளியிட்ட அறிவிப்பு தமிழ் தரப்புகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
அதுமட்டுமன்றி இலங்கையின் எந்தவொரு சிறைச்சாலைகளிலும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற எவருமே கிடையாது. குற்றவாளிகளும் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களும்தான் உள்ளனர் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார , பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் அறிவிப்பும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவே இருந்தது.
6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான கடந்த 3 ஆம் திகதி சந்திப்பில் தமிழ் முஸ்லிம், மலையக பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்கள், வலியுறுத்தல்களை கவனத்தில் எடுக்காது பூசி மெழுகி பதிலளித்து அனுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதே வார பாராளுமன்ற அமர்வுகளில் தனது அமைச்சர்களை வைத்தே தமிழ் தரப்புக்களின் கோரிக்கைகள், வலியுறுத்தல்களை முற்று முழுதாகவே நிராகரித்து விட்டார்.
அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழ் சமூகத்திற்கு, வாக்குறுதிகளைக் காற்றோடு காற்றாகப் பறக்கவிடும் அணுகுமுறையே மீண்டும் பதிலாக்கப்பட்டுள்ளது வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களின் பெயர்களும் முகங்களும் மாறியிருக்கலாமே தவிர, தமிழ் மக்களின் மீதான அணுகுமுறையும் ஏமாற்றங்களின் பின்னணியும் மாறவே இல்லை என்பதை தற்போதைய சூழல் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. .
“மாற்றம்” என்ற முழக்கத்துடன் வந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் கையாள்வதில் மாற்றமின்றி பழைய பாதையையே தேர்ந்தெடுத்துள்ளது.காலம் காலமாகத் தொடரும் இந்த வாக்குறுதி அரசியல், தமிழ் மக்கள் மத்தியில் அரசுகளின் மீதான எஞ்சியிருந்த நம்பிக்கையையும் முற்றாகச் சிதைத்துவிட்டது. இனியும் வாக்குறுதிகளையும் கால அவகாசங்களையும் மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், தமிழ் சமூகம் தங்கள் நியாயமான உரிமைகளுக்காகத் தீர்க்கமாகவும் உறுதியாகவும் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஏமாற்றங்கள் மீண்டும் நிரூபித்துள்ளன.