உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை
எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதைத் திரையிட்டு மறைக்க கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் சிறிதளவும் மனசாட்சியில்லாமல் பேசுவதைப் பார்க்கும்போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திய காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்தானா? என்ற ஐயம் எழுகிறது. முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவிகளில் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பேரிழுக்காகும்.
“எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட கூடாது” எனக் கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.
மேய்ச்சலுக்குச் சென்ற தங்கள் மாடுகள் திரும்பவில்லை என்பதற்காக அவற்றைத் தேடி காட்டுக்குள் சென்ற மூன்று தமிழர்களைக் கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதைத் தமிழ்நாட்டு முதல்வரும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். இதுவொரு மனிதநேயப் பிரச்சனை. எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படுமானால், அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவித் தமிழர்கள் மூவரைப் படுகொலை செய்துவிட்டு அதைத் திரையிட்டு மறைக்க கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் சிறிதளவும் மனசாட்சியில்லாமல் பேசுவதைப் பார்க்கும்போது, அண்ணல் காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திய காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்தானா? என்ற ஐயம் எழுகிறது. முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவிகளில் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இருக்க அனுமதிப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்குப் பேரிழுக்காகும்.
தமிழர்கள் அனைவரையும் மட்டுமல்ல, மாந்தநேயம் கொண்டவர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கும் மூன்று தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், எதிர்காலத்தில் கர்நாடகம் வாழ் தமிழர்கள் யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ இப்பிரச்சனையை உடனடியாகக் கொண்டுசெல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள,
(பழ. நெடுமாறன்)
தலைவர்.