நடுவானில் இந்திய விமானியை கத்தியால் குத்தி சக விமானி விமான தகர்ப்பில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் துபாயை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அவர்கள் தாயகம் திரும்புவதற்காக எமிரேட்ஸ் ஏர்லைன்சின் பிளைதுபாய் என்ற விமானத்தில் புறப்பட்டனர். இதற்காக, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி அந்த போயிங் ரக விமானம் நேற்று காலை புறப்பட்டது.
விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தியாவை சேர்ந்த தலைமை கேப்டன் ஸ்மித் மச்சர் மற்றும் அவருக்கு உதவியாக ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஒருவருடன் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் சவுதி அரேபியா எல்லையை கடந்து, ஜோர்டான் வான்பரப்பில் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானிகள் அறையான காக்பிட்டில் யாரும் எதிர்பாராத அந்த பயங்கரம் அரங்கேறியது. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி, திடீரென தான் ரகசியமாக மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, இந்திய கேப்டனான ஸ்மித் மச்சரை நோக்கி வெறியோடு பாய்ந்து கொடூரமாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கேப்டனிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டை பறித்த அந்த கொடூர துணை விமானி, தற்கொலை தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்ல சதி செய்தார். விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் திட்டத்துடன், வெறும் 30 விநாடிகளிலேயே 14 ஆயிரம் அடிக்கு செங்குத்தாக கீழ்நோக்கி சரிக்க செய்துள்ளார்.
ராட்சத ராட்டினத்தில் இருந்து கீழே விழுவதுபோல் விமானம் மரண வேகத்தில் தலைகீழாக சரிந்ததால், உள்ளே இருந்த 170 இஸ்ரேலிய பயணிகளும் மரண பயத்தில் கதறி துடித்தனர். காக்பிட் அறைக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விமான பணிப்பெண்களும் அலறினர். காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சர், விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானியுடன் கடுமையாக போராடினார். அதே நேரத்தில் விமானத்தில் இருந்து ஆபத்து சிக்னலும் அனுப்பப்பட்டது. அப்போது விமானத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சக விமானிகள் உஷாரானார்கள். அப்போது கேப்டன் காக்பிட் கதவை திறக்க, உடனடியாக அவர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கி பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனிடையே, நடுவானில் இருந்து ‘விமானம் கடத்தப்பட்டு விட்டது’ (ஸ்குவாக் 7500) என்ற அபாய சிக்னல் இஸ்ரேல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது.
இதனால் எல்லையில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. 174 இஸ்ரேலியர்களின் கதி என்ன? என்ற பீதியில், இஸ்ரேல் நாட்டு ராணுவம் உடனடியாக தனது நவீன போர் விமானங்களை நடுவானில் அவசரமாக பறக்கவிட்டு அதிரடி மீட்புப்பணியில் இறக்கியது. ஆனால், அதற்குள் காயமடைந்த இந்திய கேப்டன் மற்றும் விடுப்பில் பயணித்த ராணுவ வீரர்களின் சாதுரியத்தால் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் போர் விமானங்கள் திரும்ப பெறப்பட்டன. விமானத்திற்குள் புகுந்த சவுதி அரேபிய பாதுகாப்பு படையினர், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஓமன் நாட்டு துணை விமானியை உடனடியாக கைது செய்து இழுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் உளவு அமைப்பான ‘மொசாட்’ கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “இது சாதாரண மோதல் அல்ல; இஸ்ரேலியர்களை குறிவைத்து ஒட்டு மொத்த விமானத்தையும் மோதி அழிக்க நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதி” என அதிரடியாக அறிவித்துள்ளனர். தபூக் விமான நிலையத்தில் தவித்த பயணிகளையும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் கூட்டு ஏற்பாடுகளை செய்துள்ளன. நடுக்கடலில் வானில் அரங்கேறிய இந்த பயங்கரவாத சதி முறியடிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.