குரு அரவிந்தன்
கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்கள் வருடந்தோறும் கொண்டாடும் நிகழ்வுகளில் கோயில் திருவிழாவும் ஒன்றாகும். ரொறன்ரோவில் உள்ள றிச்மன்ஹில் பிள்ளையார் ஆலயத்தில் சென்ற 27.5.2026 புதன் கிழமை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் 12 ஆம் நாள் திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், காப்பாளர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். காலை 7:30 மணியளவில் ஆரம்பித்த பூசை, சுவாமி வலம் வந்ததைத் தொடர்ந்து சுமார் ஒரு மணியளவில் அன்னதானத்துடன் நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி மகாஜன பாரம்பரியத்தை நினைவு கூரியதுடன், ஆன்மீக வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தெல்லிப்பழையில் ஒரு சைவத்தமிழ் பாடசாலை வேண்டும் என்பதற்காக ‘மகாஜனக் கல்லூரி’ பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் 1910 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பெற்றது. பாடசாலை மட்டுமல்ல, சைவ சமயத்தை வளர்ப்பதற்காக வளாகத்தில் ஆடவல்லான் நடராஜரின் கோயிலும் அங்கு இடம் பெற்றது. தொடர்ந்து அவரது மகன் திரு. து. ஜெயரத்தினம் அதிபராக இருந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஒரு திருவிழா, திருக்கேதீச்சரம் கோயிலில் ஒரு திருவிழா என்று கல்லூரியே பொறுப்பெடுத்துச் செய்து வருகின்றது. அதன் தாக்கம் காரணமாக கனடாவில் இயங்கும் மகாஜனா பழைய மாணவர் சங்கமும் றிச்மன்ஹில் பிள்ளையார் கோயிலில் ஒரு திருவிழாவைப் பொறுப்பெடுத்து வருடாவருடம் செய்து வருகின்றார்கள். ஐக்கிய இராச்சியம் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தினரும் சென்ற ஏப்ரல் மாதம் வருடாந்த கோயில் திருவிழாவை ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் கொண்டடினார்கள்.
மகாஜனக் கல்லூரி தனது 100 ஆண்டு விழாவை ஒக்ரோபர் மாதம் 2010 ஆம் ஆண்டு கொண்டாடியது. பழைய மாணவர் சங்கங்கள் தங்கள் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும் பாதுகாப்பதில் இளைய தலைமுறையினரையும் உள்வாங்கி அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது.