‘மாவீரன் 2’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ‘மண்டேலா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படத்தை இயக்கினார். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டது.
இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், நடிகர் விஜய் சேதுபதி தனது குரலால் ‘அசரீரி’ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘மாவீரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ‘மாவீரன் 2’ படத்திற்கான கதையை இயக்குநர் மடோன் அஸ்வின் எழுதத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்க சிவகார்த்திகேயனும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனினும், தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது பிற படங்களில் மும்மரமாக இருப்பதால், ‘மாவீரன் 2’ படத்தின் பணிகள் 2028-ஆம் ஆண்டில்தான் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.