முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் ரத்து!

Share

பு.கஜிந்தன்

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளிமாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப் பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், வெளிமாகாணத்திலிருந்து வந்த தனியார் பேருந்து இரண்டு நபர்கள் மீது மோதியிருந்தது. விபத்தை ஏற்படுத்திய பின்னர் பொறுப்பற்ற விதத்தில் அந்தப் பேருந்து அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்தின் சாரதிக்கு எதிரான உரிய சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பிலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உடனடியாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுசென்று குறித்த பேருந்துக்கு எதிராக முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைவாகத் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் அனுமதிப் பத்திரத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>