மேக் இன் இந்தியா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லையென காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது

Share

மேக் இன் இந்தியா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லையென காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பது, புதுமைகளை ஊக்குவிப்பது, உலகத் தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் இந்தியாவை உற்பத்தி, வடிவமைப்பு, புதுமைக்கான சர்வதேச மையமாக மாற்றுவது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் கணிசமாக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார். உற்பத்தித் துறையின் வளர்ச்சியை மதிப்பிடும் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) மற்றும் தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIP) ஆகிய தரவுகளை மேற்கோள் காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் பெரும்பாலான காலகட்டங்களில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை விட குறைவாகவே இருந்ததாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இதனால், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையில் ஏற்பட்டிருக்க வேண்டிய கூடுதல் வளர்ச்சி தெளிவாக இல்லை என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருந்த நிலையில், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு தனியார் முதலீட்டு வளர்ச்சி ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நாட்டின் பல்வேறு துறைகளில் பரவலான வேலைவாய்ப்பு வளர்ச்சியும் போதுமான அளவில் ஏற்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>