யாழ்ப்பாணம் வசாவிளானில் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர் காணி! (அதிசயம் தான்?)

Share

(23-03-2026)

யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்குப் பகுதியில் சுமார் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணித்துண்டுகள் 23ம் திகதி அன்று (2026 மார்ச் 23, திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப் பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியில் உள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவப் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டு இருந்த காணிகளில் ஒரு பகுதி இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் 511 படைப்பிரிவின் பிரிகேடியர் கேணல் பி.எம்.சி. வன்னி நாயக்க, யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் அன்று (23) கையளித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலர்களான க. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இப்பகுதியில் ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் 234.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு இருந்தன. அதன் தொடர்ச்சியாக, சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு மிக அருகாமையில் உள்ள இன்னும் சில தனியார் காணிகள் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

நீண்டகாலமாகத் தமது பூர்வீக நிலங்களை இழந்து தவிக்கும் தமக்கு, எஞ்சியுள்ள காணிகளையும் விரைந்து விடுவிக்க தற்போதைய அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>