‘கப்டன்’ விஜய் அவர்களின் ‘சின்னவரின் நினைவுகள்’ நூல்வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் விபரிப்பு
“பிரபாகரன் அவர்களின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் தீரம் நிறைந்த விடுதலைப் போராட்டத்திற்கு எந்தளவிற்கு போராளிகளும் தளபதிகளும் முக்கியமானவர்களாக விளங்கினார்களோ, அதைப் போன்று விடுதலைப் புலிகளின் கடற்படையும் அவற்றின் கடற்பயணங்களும் அத்தியாவசியமானவையாக இருந்தன. அத்துடன் சாதாரணமான பிளாஸ்டிக் படகுகளில் இயந்திரங்களைப் இணைத்து அவற்றுடன் தனது இயக்கத்தின் கடற்படையை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் அவர்கள் சில வருடங்களுக்குள் சர்வதேசக் கடற்பரப்பில் பயணம் செய்யக்கூடிய விசாலமான கப்பல்களை கொண்ட கடற்படையை அமைத்து அவற்றின் மூலம் போராட்டத்திற்கு தேவையான பல உபகரணங்களையும் மாத்திரமல்லாது போராளிகளுக்கு தேவையான உடைகள் சீருடைகள் மற்றும் சத்தான உணவுவகைகள் மற்றும் தொலைத் தொடர்புச் சாதனங்கள் ஆகியவற்றையும் வன்னித் தளத்திற்கு எடுத்துவருவதற்கும் பயன்படுத்தியுள்ளார். இந்த செயற்திட்டங்களுக்கு கடற்படையின் தளபதி சூசை அவர்கள் மற்றும் போராளிகள் ஆகியோரும் பங்களித்துள்ளார்கள்.
அத்துடன் இந்த சின்னவரின் நினைவுகள்’ என்னும் அ ற்புதைமான படைப்பை எமக்கு அளித்த கப்டன் விஜெய் அவர்களும் ஒரு போராளியாகவே செயற்பட்டார். அவர் தனது உண்மையானதும் உணர்வுகளைக் கொண்டதுமான விபரங்களையும் சம்பவங்களையும் வியப்பான மற்றும் மயிர்க்கூர்ச்செறியும் விடயங்களையும் எமக்காக படைத்துள்ளார். அவர் ஒரு எழுத்தாளர் அல்ல.
எனினும் தன்னால் இயன்றளவிற்கு இந்த நூலை இலக்கிய நயத்துடன் எமக்கு அளித்துள்ளார். இது ஒரு ஆரம்ப முயற்சி இதைப்போன்று பல படைப்புக்கள் எமக்காக அவரும் அவரைப் போன்ற பலரும் எமக்கு எதிர்காலத்தில் வழங்க வேண்டும் ”
மேற்கண்டவாறு கடந்த5ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் கலைக்கூடத்தில் நடைபெற்;ற ‘கப்டன்’ விஜய் அவர்களின் ‘சின்னவரின் நினைவுகள்’ நூல்வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் விபரித்தார். மேற்படி விழாவைன் நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக பன்முகக் கலைஞர் குயின்றஸ் துரைசிங்கம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
தலைவர் பிரபாகரன் அவர்கள் கல்வி கற்ற காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியின் அதிபராகக் பணியாற்றிய சின்னையா சிவனேசன் அவர்கள் மேற்படி விழாவிற்;கு தலைமை தாங்கினார்.
முதலில் விழாவில் வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் இ. பாலசுந்தம் அவர்கள் தனது உரையில் எமது வரலாற்றையும் கடந்த காலத்தையும் அறிந்து கொள்வதற்கு இந்த நூல் எமக்கு வழிஅமைக்கும் என்று எமது போராளிகளின் வீரத்தை எடுத்தியம்பும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் நாம் பெருமையடைகின்றேன் என்றார். தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது உரையில் எமது கடந்த காலப் போரட்டத்தின் வரலாற்றையும் அதில் நிறைந்திருந்த எம்மவர்களின் தீரம் நிறைந்த அனுபவங்களையும் சம்பவங்களையும் நாம் என்றும் மறந்து விடாமல் இருக்க சின்னவரின் நினைவுகள்’ போன்ற நூல்கள் எமக்கு தளமாக விளங்கும் என்றார்.
சட்டத்தரணிகள் நாதன் ஶ்ரீதரன்- மற்றும் விது ராமச்சந்திரன் அத்துடன் ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் நீதன் சண்முகராஜா- மற்றும் விழா அமைப்பாளர்களில் ஒருவரான சிவபாலன் உட்பட பலர் உரையாற்றினார்கள்.
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நூலின் முதற்பிரதியை தலைமை வகித்த சின்னையா சிவனேசன் அவர்களிடமிருந்து சட்டத்தரணி கரிகாலன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பல அன்பர்கள் நூற் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
அன்றைய வெளியீட்டு விழா 2009ம் ஆண்டு வரையில் வன்னி மண்ணில் தொடரச்சியாக அமைந்திருந்த தமிழர் குறுநில ஆட்சியின் இராணு பலம் உலகின் பல பகுதிகளுக்கும் வியாபித்திருந்தது என்பதை நிரூபிக்கும் ஆவணமொன்றின் விழாவாக இருந்தது என்றால் அது மிகையாகாது.