திரும்பத் திரும்ப கூறவேண்டியுள்ளது. அரசியலில் தூய நீதி என்பது கிடையாது. அரசுகளுக்கு இடையிலான நலன்கள்தான் உண்டு. வெளி அரசுகள் அந்த நலன்களின் அடிப்படைகள்தான் ஈழத் தமிழர்களை அணுகும். உதாரணமாக கொழும்பைக் கையாள முடியாத நிலைமை வரும்பொழுது, தமிழ் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக சக்தியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்படும். இன்னும் ஓர் உதாரணம்.கொழும்பில் உள்ள அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாய முற்பட்டால் அதைத் தடுப்பதற்கோ அல்லது அதிலுள்ள வரையறைகளை உணர்த்துவதற்கோ, தமிழ் அரசியலை அல்லது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தைக் கையாளவேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கோ அல்லது இந்தியாவுக்கோ ஏற்படும். எனவே இங்கே நலன்கள்தான் உண்டு. அறநெறிகள் நீதிநெறிகள் போன்றவை சிறுவர் பாடப்புத்தகங்களில்தான் உண்டு. ஒரு பேரரசன் ஆகிய ட்ரம்ப் அதனை சமீபத்திய வாரங்களில் உலகத்துக்கு அசிங்கமான விதங்களில் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
அர்ஜுனாவுக்கும் ட்ரம்புக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களில் ஒன்று, ட்ரம்ப் தூசனம் பேசுவதில்லை. ஆனால் அதையும் அவர் கடந்த வாரம் செய்து விட்டார். கடந்த வாரம் அவர் ஈரானுக்கு காலக்கெடு விதித்தபோது, தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதிய வார்த்தைகளில் தூசனம் உண்டு.
இத்தனைக்கும் அவர் யார்? உலகப் பேரரசன். முழு உலகத்தையும் ஆள நினைக்கும் உலக போலீஸ்காரன். ஆனால் அவருடைய வார்த்தைகள், அவருடைய உடல் மொழி… போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவருக்கும் எங்களூர் அர்ச்ஜுனாவுக்கும் இடையே வித்தியாசங்கள் எத்தனை? ஒரு நண்பர் கூறியதுபோல ட்ரம்ப் போட்ட குண்டுகளை விடவும் அவர் எழுதிய தூசனம்தான் முடிவில் யுத்த நிறுத்தத்தை கொண்டு வந்திருக்கிறதா?
ஆனால் இந்த விடயத்தில் ட்ரம்பிடம் ஒரு வெளிப்படைத் தன்மை உண்டு. தனக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர்களைப்போல அவர் முகமூடி அணிந்திருக்கவில்லை. தன்னை ஒரு மதிப்புக்குரிய ஆளாகக் காட்டிக் கொள்வதற்காக அவர் வலிந்து நடிப்பதும் இல்லை. அவர் அவராக இருக்கிறார். அதில் உலகத்துக்கு ஒரு நன்மை உண்டு. என்னவென்றால், இதுதான் அமெரிக்கப் பேரரசு என்பதனை அவர் ஒழிப்புமறைப்பின்றி வெளிப்படுத்துகின்றார். ஆனால் இதற்கு முன்னர் இருந்த அமெரிக்க அதிபர்கள் பேரரசு முகமூடி அணிந்திருந்தார்கள். தங்களை மகத்தானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக நடித்தார்கள். ஆனால் ட்ரம்ப் அப்படியல்ல. அது ஒருவகையில் உலகத்துக்கு நன்மை. உலகம் இதுதான் பேரரசு என்பதைக் கண்டு கொள்கிறது.
இவ்வாறு உலகப் பேரரசு அம்மணமாக நிற்கும் ஒரு காலகட்டத்தில்,அந்த பேரரசுமுற்பட மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் ஈழத் தமிழர்கள் என்ன செய்யலாம்?
மேலும்,உலகப் பொது மன்றம் ஆகிய ஐநா மீண்டும் ஒரு தடவை தன்னை கையாலாகாத கோழையாகக் காட்டியிருக்கிறது. அதைவிடக் குறிப்பாக,சர்வதேச அணு முகாமைத்துவ அமைப்பும் அதன் தலைவராகிய ரஃபேல் க்ரோஸியும் ஈரானுக்கு எதிராகக் காணப்படுகின்றனர். ரஃபேல் க்ரோஸி ஒரு ஆர்ஜன்ரீனியர். எதிர்காலத்தில் ஐநா பொதுச் செயலராக வர முயற்சிக்கிறார். அவரும் அவருடைய நாடும் அமெரிக்காவின் பக்கம் நிற்கின்றன.
சர்வதேச அணு முகாமைத்துவ அமைப்பு மட்டுமல்ல,ஐநா பாதுகாப்புச் சபையிலும், அண்மையில் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பான தீர்மானத்தின்போது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட மேலும் 8 நாடுகள் ஈரானுக்கு எதிராக வாக்களித்தன. ரஷ்யாவும் சீனாவும்தான் தமது இரட்டை வீற்றோவைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோற்கடித்தன.
இவ்வாறு சில தசாப்தங்களுக்குள் ஐநா மீண்டும் ஒரு தடவை கையாலாகாத பார்வையாளராக தன்னை நிரூபித்திருக்கும் ஒரு பின்னணியில்,ஐநாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கலாமா? அதாவது ஈழத் தமிழர்களின் மேற்கை நோக்கிய அரசியல் தொடர்பாக மீண்டும் ஒரு தடவை ஆழமாக தொகுத்தும் பகுத்தும் ஆராய வேண்டியுள்ளதா?
ஈழத் தமிழர்களின் அரசியல் இந்திய-இலங்கை உடன்படிக்கை வரையிலும் இந்தியாவை நோக்கியிருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கைக்குப் பின் அது மேற்கை நோக்கித் திரும்பியது.
இந்தியாவுடன் ஏற்பட்ட மோதல் அதற்கு ஒரு காரணம்.இரண்டாவது காரணம், மேற்கு நாடுகளில் எழுச்சி பெற்றுவரும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்பொழுது அந்தந்த நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் மேலெழுந்து வருகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளாகிய இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் முக்கியமான அதிகாரம் மிக்க பொறுப்புகளை வகிக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழ் பயோஸ்பரா எனப்படுவது கவர்ச்சியான வெற்றி பெற்ற ஒரு டயஸ்போராவாக தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம் இது .
இவ்வாறு உலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் கவர்ச்சிமிக்க ஒரு டயஸ் போறா காரணமாகவும் தமிழ் மக்களின் அரசியல் மேற்கை நோக்கி அதிகமாகத் திரும்பியது. அதன் விளைவாகவே மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின் மேற்கின் அனுசரணையோடு ஒரு சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது நாலாவது கட்ட ஈழப் போரிலும் இனப்படுகொலையிலும் முடிவடைந்தது.
எனினும் அதற்குப் பின்னரும் தமிழ்மக்கள் மேற்கை நோக்கித்தான் காணப்படுகிறார்கள். கடந்த 16 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் ஐநா மைய அரசியல்தான். ஐநா தீர்மானங்களை நோக்கி காத்திருக்கும் அரசியல்தான். அதாவது மேற்குமைய அரசியல்தான். ஆனால் கடந்த 16 ஆண்டு கால மேற்குமைய அரசியலிலும்கூட ஈழத் தமிழர்களுக்கு உருப்படியான ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் உலகளாவிய அரசியல் சூழலில், மேற்காசியப் போரின் விளைவாக உலகப் பேரரசு நிர்வாணமாக நிற்கும் ஒரு காலச் சூழலில், அரசில்லாத, நீதிக்காகப் போராடுகின்ற, அந்தப் போராட்டத்தில் பெருமளவு மேற்கத்திய அரசுகளிலும் நிறுவனங்களிலும் தங்கி இருக்கின்ற, ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுக் கொள்ளலாம்?
பலஸ்தீனர்களுக்குக் கிடைக்காத ஒரு நீதி, குர்திஷ் மக்களுக்குக் கிடைக்காத ஒரு நீதி, காஷ்மீரியர்களுக்குக் கிடைக்காத ஒரு நீதி, செச்சினியர்களுக்குக் கிடைக்காத ஒரு நீதி, பலுச்சிஸ்தானியர்களுக்குக் கிடைக்காத ஒரு நீதி,ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்குமா?
இங்கு நீதி என்பது சார்பு நிலைப்பட்டது. உலகில் தூய நீதி என்பது கிடையாது. அரசுகளின் நீதிதான் உண்டு. அரசுகளின் நீதி என்பது முழுக்கமுழுக்க அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார்ந்த நலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. மேற்காசியப் போரானது அரசுகள் தமது ராணுவ, பொருளாதார, ராஜதந்திர இலக்குகளை அடைவதற்காக எப்படியெப்படி நடந்துகொள்ளும் என்பதனை மீண்டும் ஒருதடவை ரத்தம் சிந்தி நிரூபித்திருக்கிறது.
அங்கே நீதி நியாயம் கிடையாது.பாலர் பாடசாலைகள் படித்த சிறுவர் கதைகளில் வருகின்ற அறநெறிகள் எல்லாம் கிடையாது. நீதி நெறிகளும் அறநெறிகளும் சிறுவர் பாடப் புத்தகங்களில் மட்டும்தான் உண்டு. போர்க்களங்களில் இல்லை.
மனித குலம் கூர்ப்படைந்து வருகிறது என்று கூறிக்கொள்கிறோம். தொழில்நுட்பம் வளர்கிறது, செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் மனிதர்களைப் பிரதியீடு செய்து வருகிறது. இவ்வாறு செயற்கை நுண்ணறிவு எழுச்சிபெறும் ஒரு காலகட்டத்தில், போர் என்று வந்தால் மனிதர்கள் மீண்டும் காட்டுமிராண்டிகளின் காலத்துக்கே போய்விட்டார்களே? அது எப்படி?
எங்களுடைய கைபேசிகள் அப்டேட் செய்யப்பட்டவை.எங்களுடைய கணினிகள் அப்டேட் செய்யப்பட்டவை.எங்களுடைய “லிவிங் ரூமில்” காணப்படும் இலத்திரனியல் கருவிகள் யாவும் அப்டேட் செய்யப்பட்டவை. எங்களுடைய வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்டவை.ஆனால் எமது “வோர் ரூமுக்குள்” அதாவது யுத்த திட்டமிடல் அறைக்குள் முடிவெடுக்கும் அதிகாரமுடைய மனிதர்கள் அப்டேட் ஆகவில்லையே?
மேற்காசியப் போர் மனித நாகரீகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. எல்லாப் போர்களும் அப்படிப்பட்டவைதான். செயற்கை நுண்ணறிவின் காலத்தில் மனிதர்கள் மனதால் காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள் என்பதைத்தான் மேற்கு ஆசியப் போர் அரங்கு நிருபித்திருக்கிறது.
இப்படிப்பட்டதோர் உலகச் சூழலில் ஈழத் தமிழர்கள் யாரிடம் போய் நீதியைக் கேட்பது? யாரை நோக்கிப் போராடுவது? நீதியை நீதிமான்களிடம்தான் கேட்கலாம் என்றால் இந்தக் குரூர உலகில் ஈழத் தமிழர்கள் யாரிடம் நீதியைக் கேட்பது?
திரும்பத் திரும்ப கூறவேண்டியுள்ளது. அரசியலில் தூய நீதி என்பது கிடையாது. அரசுகளுக்கு இடையிலான நலன்கள்தான் உண்டு. வெளி அரசுகள் அந்த நலன்களின் அடிப்படைகள்தான் ஈழத் தமிழர்களை அணுகும். உதாரணமாக கொழும்பைக் கையாள முடியாத நிலைமை வரும்பொழுது, தமிழ் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக சக்தியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்படும்.இன்னும் ஓர் உதாரணம்.கொழும்பில் உள்ள அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாய முற்பட்டால் அதைத் தடுப்பதற்கோ அல்லது அதிலுள்ள வரையறைகளை உணர்த்துவதற்கோ, தமிழ் அரசியலை அல்லது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தைக் கையாளவேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கோ அல்லது இந்தியாவுக்கோ ஏற்படும்.எனவே இங்கே நலன்கள்தான் உண்டு.அறநெறிகள் நீதிநெறிகள் போன்றவை சிறுவர் பாடப்புத்தகங்களில்தான் உண்டு. ஒரு பேரரசன் ஆகிய ட்ரம்ப் அதனை சமீபத்திய வாரங்களில் உலகத்துக்கு அசிங்கமான விதங்களில் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
எனவே அரசியலை அதன் ஆழமான நடைமுறை அர்த்தத்தில் ஈழத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நீதிநெறிகளின் அடிப்படையில் உலக சமூகத்தை அணுக முடியாது. நலன்களின் அடிப்படையில்தான் அணுகலாம்.