LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் – ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Share

ஈரான் ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியது.

ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கியது. இதில் ஏவுகணை, டிரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுதகிடங்குகள், ராணுவ தளங்கள் சேதமடைந்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியானார்கள் என்றும், ராணுவ தளங்கள் சிறிது சேதங்கள் ஏற்பட்டது என்றும் ஈரான் தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை முறியடித்து விட்டதாகவும் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதனால் இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் அது போன்ற தவறை செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறும் போது, இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்நாட்டுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது. அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார். இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறும் போது, ஈரானுக்கு அதன் நலன்கள், அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதில் எந்த வரம்புகளும் இல்லை என்றார். இதன் மூலம் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக கருதப்படுகிறது.