”13” க்கு சாவு ”மணி” அடிக்கும் ஜே .வி.பி.
Share
”ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் ஆதரவு கேட்டு யாழ் சென்ற தற்போதைய ஜனாதிபதியும் ஜே.வி.பி.மற்றும் தேசிய மக்கள்சக்தியின் தலைவருமான அநுர குமார ”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜே .வி.பி. அரசு முயற்சிக்கும் .தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தொடர்பான உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது.அத்துடன் மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதில் மாற்றுக்கருத்தில்லை.அதற்குத் நாம் இணங்கியுள்ளோம்”என்று உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது அதற்கு மாறாக 13 ஆவது அரசியலமைப்பையே முற்றாக ஒழித்துக்கட்டுவோம் என அவரின் கட்சி செயலாளர் பகிரங்கமாக அறிவித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார் ”
கே.பாலா
நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் இனவாதத்தை முதலிட்டு ஆட்சியை பிடித்து வந்ததால் நாமும் அதே வழியில் பயணித்தால் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து ”மாற்று”ப் பாதையாக புதிய ”திசை”யில் பயணிக்கப்போவதாகக் கூறி ஜே .வி.பி.என்ற இனவாத முகத்தை மாற்றி தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றிய ஜே .வி.பி.தற்போது மீண்டும் தனது இனவாத முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டது.
தனது அரசின் அமைச்சரவை ,பிரதியமைச்சர்கள் நியமனங்களில் சிறுபான்மையினங்களை புறக்கணித்து தனது இனவாத ஆட்டத்தை ஆரம்பித்த அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி.அரசு மாவீரர்தினத்தை அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு உரிமையுண்டென பகிரங்கமாக அறிவித்து விட்டு தற்போது மாவீர தின அனுஸ்டிப்புக்களில் முன்னின்றவர்களை தனது பொலிஸ் துறை மூலம் வேட்டையாடி வருகின்றது. பலர் கைது செய்யப்பட்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்
தனது அடுத்த நகர்வாக வடக்கு,கிழக்கு மாகாணங்களை சிங்கள மயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய அநுரகுமார அரசு அதன் முதல் கட்டமாக வடக்கு- கிழக்கில் சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்களாக சிங்களவர்களை நியமித்துள்ளது. பி.எஸ்.என்.விமலரட்ண என்பவர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம்.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2 ஆம் திகதிமுதல் இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இவ்வாறான நிலையில்தான் இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் பலவந்தமாக கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் மீதான எமது எதிர்ப்பு நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பின் ஊடாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இரத்துச் செய்யப்படும் என ஜே.வி.பி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அறிவித்து தமிழ் மக்களுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
நாட்டில் மாகாண சபை முறைமை தோல்வியடைந்த விடயமென்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான தீர்வு திட்டம் முன்வைக்கப்படும் வரை மாகாண சபைமுறையை இரத்து செய்ய மாட்டோம். புதிய அரசியலமைப்பு ஊடாக சிறந்த தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் 13 ஆவது திருத்த சட்டத்திற்கும் மாகாண சபை முறைமைக்குமான தேவை நாட்டில் இருக்காது.அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால்,மாகாண சபை முறைமைக்கோ அல்லது 13 ஆவது அரசியலமைப்பிற்குமான தேவைப்பாடு நாட்டில் இருக்காது என்றும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
ஜே.வி.பி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு கூறியுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் போது அதில் வேட்பாளராக களமிறங்கியவரும் தற்போதைய ஜனாதிபதியும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலுக்கு யாழ்ப்பாணம் சென்று இலங்கை தமிழரசுக்கட்சியை சந்தித்தபோது ”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல தரப்பினருடனும் பேசி ஒரு புதிய அணுகுமுறையை கையாள்வதற்கு ஜே .வி.பி. அரசாங்கம் முயற்சிக்கும் .தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தொடர்பாக பலமான உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது .அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் .அத்துடன் மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதில் மாற்றுக்கருத்தில்லை.அதற்குத் நாம் இணங்கியுள்ளோம்”என்று உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது அதற்கு மாறாக 13 ஆவது அரசியலமைப்பையே முற்றாக ஒழித்துக்கட்டுவோம் என அவரின் கட்சி செயலாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே இலங்கை அரசியலமைப்பு சட்டப் பிரிவாகவுள்ள 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மட்டுமே இன்றுவரை குற்றுயிரும் குலையுயிருமாக இருந்துவரும் நிலையில் அதனையும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையை அநுரகுமார அரசு கையிலெடுத்துள்ளது. வரலாற்றில் இல்லாதவாறு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வடக்கில் 5 ஆசனங்களையும் கைப்பற்றிவிட்டே தமிழ் மக்களுக்கு எதிரான இந்த துரோகத்தை ,இனவாதத்தை அநுரகுமார அரசு முன்னெடுக்கவுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களுக்கு இருந்த ஒரேயொரு நம்பிக்கையும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்த அநுரகுமார அரசினால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என்ற ரில்வின் சில்வாவின் அறிவிப்பு ஜே .வி.பி. எதிர்பார்க்காத வகையில் அநுர அரசு மீதான அதிர்வலைகளையும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் அழுத்தங்களையும் ஏற்படுத்திவிட்ட நிலையில் ரில்வின் சில்வாவின் அறிவிப்பு தொடர்பான மறுப்பு விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் அநுர அரசும் அமைச்சர்களும் கொடுத்து வருகின்றனர் . ஆட்சியில் இருப்பது தேசியமக்கள் சக்தி . கருத்துக்கூறியவர் ஜே .வி.பி.யின் செயலாளர் .ஆகவே இது அரசின் நிலைப்பாடு அல்ல என்றவாறாகவும் விளக்கங்கள் கொடுக்குமளவுக்கு ”திசைகாட்டி”தடுமாறுகின்றது.
இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட உடன்படிக்கையே கடந்த 37 வருடங்களாக ”13” என்ற வடிவில் இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்து வருகின்றது .இந்த ”13” ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் 9 மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்ததுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த ”13”ஆவது அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இதனாலேயே இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக தமிழர்களுக்கு அதிகமாக அரசியல் அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன என்று பேரினவாத தலைவர்கள்,கட்சிகள், சிங்களவர்கள் எதிர்த்தனர்.அதேவேளை தமிழ் மக்களுக்கு, இந்த ஒப்பந்தம் போதுமானளவு அதிகாரங்களைப் பகிரவில்லை என்று மக்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போரில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளும் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடான இந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்தனர்.
இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் முதல் நடவடிக்கையாக 1988ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட முதல் வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாண சபையானது பதினாறு மாதங்கள் மட்டுமே செயற்பட முடிந்தது.இது நடந்து 17 ஆண்டுகளின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என இதே ஜே .வி.பி ( மக்கள் விடுதலை முன்னணி ) 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டில் வட,கிழக்கு இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
ஆனால் மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் ,தீர்வுகள் வழங்கப்படுமென தமிழர்களையும் சர்வதேசத்தையும் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்தனர். ராஜபக்ஸக்களின் ஆட்சியில் கூட தமிழர்களுக்கு 13 பிளஸ் ,13 பிளஸ்,பிளஸ் அடிப்படை யில் தீர்வுகள் வழங்கப்படுமென ஐ.நா.வுக்கு கூட வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் மறுபுறத்தால் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஆயுளை முடிக்கும், அதிகாரங்களை குறைக்கும் தந்திரங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன .
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்ற போதும் இதுவரை ஆட்சியிலிருந்த எந்த அரசும் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்கவில்லை. அதிலும் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க ஒட்டுமொத்த பேரினவாத தலைவர்களும் கட்சிகளும் கடும் எதிர்ப்புக்களை பகிரங்கமாகவே வெளியிட்டுவந்தனர் . அதிலும் சிலர் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் அடுத்து வரும் யுத்தம் சிங்கள இராணுவத்துக்கும் தமிழ் பொலிஸுக்குமாகத்தான் இருக்கும் எனவும் பொது வெளியில் எச்சரித்து இனவாதத்தை ஏற்படுத்தினர்.
இதனை அடிப்படையாக வைத்து 13 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்திலுள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த தனிநபர் சட்டமூலத்தை பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில எம்.பி 9 ஆவது பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார். மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த தனிநபர் சட்டமூலத்தை கம்மன்பில சமர்ப்பித்த போது இன்னொரு பேரினவாதியான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி எம்.பி.யான மொஹமட் முஸம்மில் அதனை வழிமொழிந்திருந்தார் இதற்கமைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை .இரத்து செய்யும் வகையிலான 22 ஆவது திருத்த தனிநபர் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு 9 ஆவது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில்தான் நாட்டின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கான ஒரேயொரு ”ஆறுதல்” தீர்வாக இருந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் முற்றாக ஒழிக்க ஜே .வி.பி.எடுக்கவுள்ள நடவடிக்கை தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையை மீண்டும் 1987 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லப்போகின்றது. இதிலிருந்து தமிழ் மக்கள் மீண்டும் முதலிலிருந்தே தமது உரிமைப்போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய அவலத்துக்குள் தள்ளப்படப் போகின்றனர். இதுதான் தனக்கு பெருவாரியாக வாக்களித்த தமிழர்களுக்கு அநுர குமார அரசு ஏற்படுத்தப்போகும் ”மாற்றம்”அல்லது காட்டப்போகும் புதிய ”திசை”யாக இருக்கப் போகின்றது.