பாகிஸ்தானில் தரையிறங்கும்போது விமான சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு
Share

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து லாகூர் செல்லும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான பி.கே.-306 விமானம் நேற்று காலை புறப்பட்டது. அந்த விமானம் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் லாகூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இன்றி விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இது போன்ற அசாதாரண சூழல்களை கையாளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டிருந்ததால், விமானத்திற்கும், பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். விமானத்தின் 6 சக்கர அசெம்ப்ளி அமைப்பில் ஒரு சக்கரம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த சக்கரம் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்து வந்ததாகவும், கராச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பியபோதே அது உடைந்து விழுந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.