LOADING

Type to search

இந்திய அரசியல்

ஈழத்து அகதியாக தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜாவிற்கு குடியுரிமை வழங்க வேண்டும்!

Share

‘செந்தமிழன்’ சீமான் விடுத்துள்ள கோரிக்கை

இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வசித்து வரும் அன்பு மகள் தனுஜா இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 120க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ள போதிலும், இந்திய ஒன்றிய அரசு இன்றுவரை குடியுரிமை வழங்க மறுப்பதால் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் புறக்கணிக்கப்படுவது மிகுந்த மனவேதனையளிக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரப்படும் என்று வாக்குறுதியளித்த திமுக அரசு, தற்போதுவரை அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் குடியுரிமை வழங்க மறுத்து சிறிதும் மனிதநேயமின்றி ஏதிலிகளாக முகாம்களில் அடைத்துவைத்து வதைப்பது கொடுஞ்செயலாகும்.

தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ்மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதிசெய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு குடியுரிமை வழங்கி சிறப்பிக்கின்றன.

ஆனால், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து திருச்சியில் வாழும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜா விளையாட்டுப் போட்டிகளில் 120க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் வென்ற பிறகும், இந்திய குடியுரிமையைக் கேட்டு இன்றுவரை சட்டப்போராட்டம் நடத்தி வருவது பெருங்கொடுமையாகும். பத்துகோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி – விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தை தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும்.

இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே?

ஆகவே, 120க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ள நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜா உள்ளிட்ட தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் குறைந்தப்பட்சம் இரட்டை குடியுரிமை வழங்கவாவது, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.