LOADING

Type to search

இந்திய அரசியல்

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல் – சோனியாகாந்தி குற்றச்சாட்டு

Share

வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மேல் சபை எம்.பி. யுமான சோனியா காந்தி வக்பு திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கும் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும். அரசியல் அமைப்பை தகர்க்கும் மற்றொரு முயற்சி இதுவாகும்.

கல்வி, சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், நமது கூட்டாட்சி அமைப்பு அல்லது தேர்தல்களை நடத்துதல் என எதுவாக இருந்தாலும், மோடி அரசு நாட்டை ஒரு படுகுழியில் இழுத்துச் செல்கிறது.அங்கு அரசியல் அமைப்பு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அரசியல் அமைப்பை அழிப்பதுதான் அவர்களது நோக்கமாகும். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படாதது நமது ஜனநாயகத்திற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இதேபோல், மேல்சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவும் தான் சொல்ல விரும்புவதையும் சொல்ல வேண்டியதையும் பதில் அளிக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.