மியான்மர் நிலநடுக்கம்: 5 நாட்களுக்குப்பின் இளைஞர் உயிருடன் மீட்பு
Share

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 521 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 441 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் நடைபெற்ற மீட்பு பணியின்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் நேபிடாவில் நடைபெற்ற மீட்பு பணியின்போது 26வயதான இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார். நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த ஓட்டல் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய இளைஞரை 5 நாட்களுக்குப்பின் மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.