LOADING

Type to search

இலங்கை அரசியல்

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் பின் கதவால் ‘சென்று மறைந்தார்’

Share

ந.லோகதயாளன்.

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட தையிட்டி விகாரை விடுவிப்பு குறித்த கலந்துரையாடல் 3ம் திகதி வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் முனீர் முலாபீர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்ட அதேவேளை, தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகப் பிரதிநிதிகள், யாழ் மாவட்ட சர்வமதப் பேரவைப் பிரதிநிகள் தையிட்டி காணி உரிமையாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெளியே வந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரதான நுழைவாயிலில் ஊடகவியலாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் மாற்றுப் பாதை வழியாக வெளியேறிச் சென்றனர்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர், குறித்த விவகாரத்துக்கு சுமுகமான ஓர் தீர்வை வழங்குவதற்கு தாம் முனைப்புக் காட்டும்போதும், தேர்தல் காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களில் தம் ஈடுபடுவது பொருத்தமற்றது எனக் கூறி வெளியேறியுள்ளதாக கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்