LOADING

Type to search

இலங்கை அரசியல்

அஞ்சல் வாக்கெண்ணும் யாழ்ப்பாண மாவட்ட அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு!

Share

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக அஞ்சல் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் 24.04.2025 அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணல் செயற்பாடானது அந்தந்த வட்டாரங்களிலேயே நடைபெறவுள்ளது எனவும், 50 ற்கு குறைவான அஞ்சல் வாக்குகளை வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் வாக்கெண்ணல் கடமைகளை மேற்கொள்வார் எனவும், 50 உம் 50 இற்கு கூடுதலாகவுள்ள அஞ்சல் வாக்குகள் இருப்பின் அவ் வாக்கெண்ணல் கடமைக்காகவே தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆதலால், இவ் வாக்கெண்ணல் கடமைகளில் அவதானம் செலுத்தி வாக்குகளை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு கடமையினை நேர்த்தியாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார். மேலும், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு தமது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.

அஞ்சல் வாக்கெண்ணல் அலுவலர்களுக்கான நியமிக்கப்படவுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.