முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் மீனவ சங்க தலைவரை தாக்கிய கடற்தொழில் அமைச்சரின் சாரதி
Share

– பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோத அசண்டயீனமாக பதிலளித்த அமைச்சர் சந்திரசேகரன்!
பு.கஜிந்தன்
கடற்தொழில் அமைச்சரின் சாரதியினால் நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான கேள்வியை தன்னிடம் கேட்க வேண்டாம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதிக்கு 24ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்திற்க்கு சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அப்பகுதி கடற்தொழிற் சங்க தலைவரை அவரது வீட்டுக்கு சென்று, வெளியே அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அதன் போது, கடற்தொழிற் சங்க தலைவர், “கடற்கரைக்கு செல்லும் வீதியினைப் புனரமைத்து தருமாறு நீண்ட காலமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடமும் கோரிக்கை முன் வைத்து யாரும் அதனை புனரமைத்து தரவில்லை.
வருபவர்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரங்களுக்காக எம்மை நாடி வந்த பின்னர், தேர்தல் முடிய எமது பிரதேசத்திற்கு வருவதில்லை. எந்த அரசியல்வாதிகளையும் நாம் நம்ப மாட்டோம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்”.
அதன்போது, அமைச்சருடன் இருந்த அவரது சாரதி “ஒரு அமைச்சருடன் இவ்வாறா கதைப்பது?” எனக் கூறி, அமைச்சரின் கண் முன்னாலேயே அந்த கடற்றொழில் சங்க தலைவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது, மிக அசண்டையீனமாக சைகையை காட்டி, “நிகழ்வு தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்” எனப் பதிலளித்துள்ளார்.