முன்னைய காலங்களில் அரசு சார்பு பிரதிநிதிகளாக ஐ. நா சென்றவர்கள்
Share
மீண்டும் ஒரு மார்ச் மாதம் பிறந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு, உலகெங்குமிருந்த பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநதிகளை அழைக்கின்ற அந்த நாள் வரப்போகின்றது. கோவில் திருவிழாக்கள் நெருங்கி வருகின்ற போது ஊர் மக்கள் ஒன்று கூடி ஆயத்தமாவது போன்று 2021 மார்ச் மாதம் நம்மவர்கள் பல சென்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள பிரதான தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதும் இன்றைய செய்திகளில் முக்கிமானதொன்றாகும்.
முன்னைய காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் தனித்து எண்ணிய காரியங்களை எவருக்கும் அஞ்சாமல் செய்து காட்டியது. அந்த கடசியின் பிரதிநிதிகள் தமிழர்கள் சார்பாகவும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சார்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றப் போகின்றோம் என்று அறிக்கைகளை வெளியிட்டுவிட்டுச் சென்றாலும், அங்கு ஒன்றுமே பயனுள்ள வகையில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. அதற்கு மேலாக அரசாங்கத்திற்கு விரோதமாக தோன்றக் கூடிய சந்தர்ப்பங்களையும் நீர்த்துப்போகும் படியான செயற்பாடுகள் இடம்பெற்றதையும், இந்த விடயத்தில் கவனிப்புக் கொண்டவர்கள் தெரிந்து கொண்ட விடயமாகும்.
இந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்கினேஸ்வரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியிருக்கும் நிலையில் அவர்களுடைய கருத்துக்களை அறிவதிலும் சர்வதேச சமூகம் ஆர்வம்காட்டிவருகின்றது. என்பதை அறிந்தும் அதனைவிட, அவர்களும் இம்முறை ஜெனீவாவை அணுகுவதற்கான புதிய வியூகங்களை அமைத்துவருகின்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும் எமது மக்களுக்காக இனியாவது எதையும் செய்ய முயலுவோம் என்றும் சிலர் முன்வந்துள்ளiதைக் காணக்கூடியதாக உள்ளது.
உண்மையில் எமது ஆசிரிய பீடத்திற்கு கிடைத்த தகவல்களின்படி கடந்த காலங்களில் தகுந்த முறையில் அரசுக்கு எதிராகவும் அதன் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வகையில் போதிய சான்றுகள் அல்லது வாதங்கள் அங்கு நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக பெரும்பாலும் அரசாங்கம் தனது தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களே மிக அதிகமாக உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சில ஆர்வலர்கள், தொடர்ந்து இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் படி மனித உரிமைகள் சபையில் போராடுவது என்பது கல்லில் நார் உரித்த கதையாகவே முடியும் என்றே பேசப்படுகின்றது
இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் மார்ச் மாதம் முடிவுக்கு வருவதால், வரப்போகும் கூட்டத் தொடர் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றமும், இலங்கைப் பொதுத் தேர்தலில் தீவிர தேசியவாதப் போக்கைக்கொண்ட இரு கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருப்பதும் எமக்கு சார்பான விடயங்களாக நோக்கப்பட்டாலும், அவை எந்தளவிற்கு வெற்றிகளை ஈட்டித் தரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
மேலும் இலங்கை அரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட போர்க்குற்ற்ம் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய விடயங்களைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைய எந்தளவிற்கு பயனளிக்கப்போகின்றது என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கஜேந்திரகுமார் தெரிவித்துள்ள கருத்துக்களையும் நாம் கவனத்தில் எடுத்துப் பார்க்க வேண்டும்.