‘ அழைத்தார் பிரபாகரன் ‘ என்ற நூலொன்றை எழுதிய பெருமைக்குரிய முதல் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்
Share
தமிழ் மொழியில் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெருமையைப் பெற்றவரும் தலைவர் பிரகாகரன் அவர்களால் பாராட்டப்பெற்று பின்னர் .அழைத்தார் பிரபாகரன்’ என்னும் நூலை எழுதிய பெருமைக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல் ஜப்பார். முதன் முதலாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம்- கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டியை தமிழில் வர்ணனை செய்தார்.கிரிக்கட் போட்டிகளை நேரடி வர்ணனை செய்வதில் புகழ் பெற்றவர் இவர். தமிழ்மொழி மூலம் சுவையாக இவ்வர்ணனையைச் செய்யமுடியும் என்பதை நிரூபித்து , தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்தவர். தமிழ்மொழியின் முதலாவது கிரிக்கட் வர்ணனையாளர் என்ற புகழும் இவருக்குள்ளது. கலைஞராக , எழுத்தாளராகப் பரிணமித்தவர். முன்னர் , இலங்கையில் இவர் வாழ்ந்த காலத்தில் நாடகத் துறையில் செல்வாக்குள்ளவராக இருந்தார். இலங்கை வானொலியில் இவரின் பங்களிப்பு பெரிது. வானொலி நாடகங்களில் இவர் குரலைக் கேட்டு மகிழ்ந்த காலமொன்றிருந்தது.
1982-ம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியையும் தமிழில் வர்ணனை செய்தார் அப்போது ஜப்பார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், அப்துல் ஜப்பாரை நேரில் அழைத்து பாராட்டினார்.
பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ஐபிசி தமிழ் வானொலிக்காக பயணியாற்றினார். 2004-ம் ஆண்டு லண்டனில் உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார்.
2007-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ESPN – STAR CRICKET தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.
அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனையை பெரிதும் நேசித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு அழைத்து விருந்து அளித்து உபசரித்தார். ‘அழைத்தார் பிரபாகரன்’ எனும் நூலில் தமிழீழ பயணம், பிரபாகரனுடனான சந்திப்புகளை எழுதியவர் அப்துல் ஜப்பார்.
பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.