LOADING

Type to search

மலேசிய அரசியல்

மொழி வாரியத்தின் பணி தொடரும் : டான்ஸ்ரீ சோமா

Share

மலேசிய மடல்(7-01-2021)

*மலேசிய மண்ணை வணங்குகிறேன் : மதுரை எம்பி: மொழி – இலக்கிய அறவாரியம் வாழ்க      : பீர் முகம்மது

(மலேசிய மடல்)

*-நக்கீரன்*

கோலாலம்பூர், டிச.07:

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2010-இல் நிறுவிய ‘டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் மொழி-இலக்கிய அறவாரிய’த்தின் 5-ஆவது பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் பரிசுப் போட்டியில், மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பன்னாட்டுப் பிரிவிலும் மூத்த இலக்கியவாதியும் படைப்பாளருமான சை.பீர்முகம்மது உள்நாட்டுப் பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தமிழை வளர்ப்பதிலும் உள்நாட்டு-வெளிநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் கூட்டுறவு சங்கம் தொடர்ந்து முனைப்பு காட்டும் என்று ஐந்தாவது புத்தகப் போட்டி முடிவு குறித்து டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் கருத்து தெரிவித்தார்.

2010-ஆம் ஆண்டில் மொழி-இலக்கிய அறவாரியம் அமைத்தபின் ஈராண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்குரிய 5-ஆவது போட்டி வெற்றியாளர் பரிசளிப்பு விழா கடந்த அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்.

கோவிட்-19 தாக்கத்தினால் பல்வேறு தடங்கல், தாமதத்திற்குப் பின் இந்தப் போட்டிக்கான வெற்றியாளரை அடையாளம் கண்டு அறிவிக்க முடிந்தாலும் இதன் தொடர்பில் வழக்கமாக நடைபெறும் விழாவை நடத்த முடியாமல் போனதாக டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார்.

முன்னதாக இந்தப் போட்டிக்கான நிறைவு நாள் 31-03-2020 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 18-03-2020 முதல் நாட்டில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாலும் உலகின் மற்ற நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாலும் போக்குவரத்து தடை உள்ளிட்ட பல்வேறு சிக்கலை கவனத்தில் கொண்டு இந்தப் போட்டிக்கான கடைசி நாள் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனாலும் ஆண்டிறுதிக்குள் இந்த நிகழ்ச்சி முற்றுபெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, வழக்கம்போல உள்நாட்டு-பன்னாட்டு நடுவர்கள் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

விழா நடத்த முடியாமல்போனது வருத்தமாக இருந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த விழா சிறப்பாக நடத்தப்படும். எது எவ்வாறாயினும், கூட்டுறவு சங்கத்தின் தமிழ்ப் பணி தொடரும் என்று டான்ஸ்ரீ சோமசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

பன்னாட்டுப் பரிசு வென்ற இலக்கிய ஆர்வளரும் படைப்பாளியும் அரசியல்வாதியுமான வெங்கடேசன் சுப்புராம், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

உண்மையில் இந்தப் போட்டியைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் இயற்றிய ‘வீர யுக நாயகன் வேள்பாரி’ நூலின் வெளியீட்டாளரான விகடன் பதிப்பகத்தார் போட்டிக்கான நூல்களை அனுப்பிவிட்டு எனக்கு தகவல் தந்தனர். இந்த நிலையில், எனக்கு முதல் பரிசு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று வெங்கடேசன் மக்கள் ஓசை நாளிதழுக்கான சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். (வீர யுக நாயகன் வேள்பாரி, ஆனந்த விகடன் இதழில் தொடராக ஆண்டுக் கணக்கில் வெளிவந்தது).

புலம் பெயர்ந்து வாழ்கின்ற மண்ணில், மலேசியவாழ் தமிழ்ச் சமூகம் பன்னாட்டு அளவில் தமிழ் எழுத்தாளர்களுக்காக இத்தகையப் போட்டியை நடத்துவதை எண்ணி மகிழும் அதேவேளை, அதில் நானும் கலந்து கொண்டு பரிசுபெறும் சூழல் அமைந்ததற்காக மிகமிக மகிழ்ச்சி அடைகிறேன். அப்படிப்பட்ட தமிழர்கள் வாழும் மலேசிய மண்ணை வணங்குகிறேன்.

மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் மேற்கொண்டுள்ள இந்த அரிய முயற்சி போற்றுதலுக்கு உரியது. இலக்கியப் படைப்பாளர்களுக்கு கிடைக்கும் பாராட்டும் பரிசும் அவர்களை இன்னும் எழுத ஊக்குவிக்கும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழினத்தின் பண்பாடு காக்கப்பட வேண்டுமென்றால், தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்களின் வேர்களை நோக்கிய கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். படிப்பதில் தங்களை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதுதான், மூவாயிர ஆண்டுகளுக்கும் முற்பட்ட நம் தொல் பண்பாட்டு வேர்களைக் கண்டறிய உதவும்; எழுதவும் தூண்டும் என்றார்.

கல்லூரி காலத்தில் இருந்தே இலக்கிய நாட்டமும் அரசியல் ஆர்வமும் கொண்டுள்ள இவர், ‘பாசி வெளிச்சத்தில்’ என்னும் நூல் உட்பட நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்;

அதைப்போல ‘காலச் சக்கரத்தின் அரசியல்’ என்னும் படைப்பு உட்பட ஆய்வு நூல்கள், குறு நூட்கள் என பத்து நூல்களை இயற்றியுள்ளார்;

நாவல்களைப் பொறுத்தவரை இவர் இயற்றிய இரு படைப்புகளுமே தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் சாதனைப் படைத்துள்ளன.

‘காவல் கோட்டம்’ என்னும் முதல் நாவல் இந்தியாவின் முதல் நிலை இலக்கிய விருதான சாகித்ய அகடமியை வென்றுள்ள நிலையில், இரண்டாவது படைப்பு மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா இலக்கிய அறவாரியத்தின் பரிசை வென்றுள்ளது.

பண மதிப்பு என்னும் வகையில், உலக அளவில் பெரிய பரிசு, மலேசியாவின் கூட்டுறவு சங்கம் வழங்கும் பரிசுதான் என்று தெரிவித்த வெங்கடேசன், மார்க்சிய பொதுவுடமைக் கட்சியிலிருந்து மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கும் திமுக கூட்டணி சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றவர்.

என் தாயின் பெயர் நல்லம்மாள்; மனைவி இராமகிருஷ்ணன்-ஜெயலெட்சுமி இணையரின் மகளான கமலா; எங்கள் மகள்களான யாழினியும் தமிழினியும் கல்லுரியில் பயின்று வருகின்றனர் என்று சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்குப் பின் தொலைபேசி இணைந்து அவசர அவசரமாகப் பேசிய வெங்கடேசன், கூட்டுறவு சங்கத்திற்கும் அதன் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரத்திற்கு நன்றி தெரிவித்து நிறைவு செய்தார்.

அவரைப் போல, உள்நாட்டுப் பிரிவில் ‘அக்கினி வளையங்கள்’ என்னும் அரசியல் புதினத்திற்காக பரிசுபெற்ற முன்னாள் இராணுவ வீரரும் இந்நாள் இலக்கிய ஆளுமையுமான சை.பீர் முகம்மது, “உடல் நலத்தால் சற்று ஒய்ந்திருந்த என்னை, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் கண்ட டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி அறவாரியம், மீண்டும் எழுதும்படி என்னைத் தூண்டியுள்ளது” என்றார்.

ஜனவரி 11-ஆம் நாளில் 79 வயதை எட்ட இருக்கும் நிலையில், எனக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசாக இதைக் கருதுகிறேன் என்ற பீர் முக்ம்மது, இனிப்பு நீர் பாதிப்புக்கு ஆளாகி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வீட்டோடு  இருந்து வருகிறார்.

மலாயாவில் அயலார் ஆதிக்கம் நிலவிய காலத்தில் இந்த மண்ணில் இயங்கிய பொதுவுடைமை இயக்க வரலாற்றின் அடிப்படையில் உண்மையையும் புனைவையும் கலந்து தென்றல் என்னும் பருவ இதழில் 48 வாரங்களாக இவர் எழுதிய அக்கினி வளையங்கள் என்னும் தொடர்தான் நூல் வடிவம் பெற்று, இப்போது இவருக்கு பரிசையும் பெற்றுத் தந்துள்ளது.

பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் பீர் முகம்மது, டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் தமிழ்த் தொண்டு பன்னாட்டு அளவில் புகழடைய வேண்டும் என்றார்.

தமிழ் மொழியில் தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புகள் மலேசியாவிலும் உலக நாடுகளிலும் வெளிவர வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பன்னாட்டுப் பிரிவில் ஒரு வெற்றியாளரும் மலேசிய அளவில் ஒரு வெற்றியாளரும் ஒவ்வொரு போட்டியின்போதும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரிய தலைமை இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் இதன் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை நாடுகளில் இருந்து நான்கு நடுவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒரு நடுவரும் என ஐந்து நடுவர்கள் இந்தப் போட்டிக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வருக்கின்றனர் என்று தெரிவித்த சகாதேவன், 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் போட்டியில் ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற படைப்பிற்காக ஈழ எழுத்தாளர் மு.பொன்னம்பலம் ஆயிர டாலரும் விடியல் என்ற நூலிற்காக மலேசியப் படைப்பாளி அ.ரெங்கசாமி ஆயிர வெள்ளியும் பரிசாகப் பெற்றனர் என்றார்.

அதைப்போல, 2014-ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவில் ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற நூலிற்காக தமிழகத்தின் கவிப்பேரரசு வைரமுத்துவும் மலேசியப் பிரிவில் ‘செலாஞ்சார் அம்பாட்’ என்னும் படைப்பிற்காக கோ.புண்ணியவானும் பரிசுகளை வென்றனர்.

 2016-ஆம் ஆண்டு மூன்றாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவு, உள்நாட்டுப் பிரிவு ஆகிய இரண்டிலுமே மலேசியர்கள் வென்றனர். அழகான மௌனம் நூலிற்காக முனுசாமி கன்னியப்பன் பத்தாயிர டாலரும் காத்திருந்த விடியலுக்காக திருமதி விமலா ரெட்டி பத்தாயிர வெள்ளியும் பரிசாகப் பெற்றனர்.

2018 நவம்பர் 17-ஆம் நாள் கூட்டுறவு சங்க தோட்ட மாளிகையில் நடைபெற்ற நான்காவது போட்டி பரிசளிப்பு விழாவில் பன்னாட்டுப் பிரிவில் ‘1801’ என்ற நூலை இயற்றியதற்காக முனைவர் மு.இராஜேந்திரன்(ஐ.ஏ.எஸ்.) தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாயிர டாலர் பணப்பரிசு, கேடயம், பாராட்டுப் பத்திரத்துடன் சிறப்பு செய்யப்பட்ட வேளையில் மலேசியப் பிரிவில் கௌரி சர்வேசனின் ‘புதிய பதிவுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக பத்தாயிர வெள்ளி வெகுமானத்துடன் சிறப்பு செய்யப்பட்டார் என்று சகாதேவன் இதன் தொடர்பில் தகவல் தெரிவித்தார்.

ஆனாலும் இலக்கிய உரை, பரிசு வென்ற நூல்களுக்கான ஆய்வுரை, நாடகக் காட்சி, விருந்தோம்பல், டான்ஸ்ரீ சோமா மொழி-இலக்கிய அறிவாரியத்தின் அடுத்த விழா தொடர்பான தகவல் என்றெல்லாம் நடைபெற்றிருக்க வேண்டிய ஒர் இலக்கிய மாலையைத் தவற விட்டதில் தமிழ் ஆர்வலர்களுக்கும் இலக்கிய நோக்கர்களுக்கு வருத்தம்தான்.

நக்கீரன் – Nakkeeran  013-244 36 24